மெய்வல்லுனர் வீரர்களுக்காக புதிய பரிசுத் திட்டம் அமுல்

155

சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தனிநபர் மற்றும் குழுநிலைப் போட்டிகளில் பதக்கம் வெல்கின்ற தேசிய மட்ட அனைத்து வீரர்களுக்கும் 20 மில்லியன் ரூபா வரை பரிசாக வழங்குவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

2018 ஆம் ஆண்டு விளையாட்டுத்துறை அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் குறித்து ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் விசேட சந்திப்பு கடந்த வாரம் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் தலைமையில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன்போதே குறித்த விடயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டது.

இதன்படி, தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கங்களை வெல்கின்ற வீரர்களுக்கு முறையே 20, 15 மற்றும் 10 மில்லியன் ரூபா பணம் பரிசாக வழங்கப்படவுள்ளது. அதிலும் குறிப்பாக ஒலிம்பிக் போட்டிகளில் இறுதி 8 பேரில் விளையாடுவதற்கு தகுதிபெற்றுக் கொள்கின்ற வீரர்களுக்கு 50 இலட்சம் ரூபாவை பரிசாக வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பரா ஒலிம்பிக், இளையோர் ஒலிம்பிக், குளிர்கால விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்கின்ற வீரர்களுக்கு 50 முதல் 10 இலட்சம் ரூபா வரையும், உலக சம்பியன்ஷிப் போட்டிகளில் (சிரேஷ்ட, கனிஷ்ட, இளையோர்) பதக்கங்களை பெற்றுக்கொள்கின்ற வீரர்களுக்கு 80 ஆயிரம் முதல் 7.5 இலட்சம் ரூபா வரையும், ஒலிம்பிக் அல்லாத போட்டிகளில் சர்வதேச மட்டத்தில் இடம்பெறுகின்ற போட்டிகளில் பங்குபற்றி பதக்கங்களை பெற்றுக்கொள்கின்ற வீரர்களுக்கு 40 ஆயிரம் முதல் 3 இலட்சம் ரூபா வரை பணப்பரிசு வழங்குவதற்கும் விளையாட்டுத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.

>> 2017இல் தேசிய மட்டத்தில் ஜொலித்த வடக்கு, கிழக்கு மெய்வல்லுனர் நட்சத்திரங்கள் <<

 இதேநேரம், பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகளுக்காக (சிரேஷ்ட, கனிஷ்ட, இளையோர்) 50 இலட்சம் ரூபாவும், குளிர்கால விளையாட்டுப் போட்டிகளுக்காக 7.5 இலட்சம் ரூபாவும், தெற்காசிய விளையாட்டு விழா (சிரேஷ்ட, கனிஷ்ட) போட்டிகளுக்காக 5 இலட்சம் ரூபா முதல் பணப்பரிசு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குழு நிலைப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றிபெறுகின்ற வீரர்களுக்கு ஒவ்வொரு போட்டிகளுக்கு அமைய பணப்பரிசை சரிசமமாகப் பிரித்துக் கொடுக்கவும், மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு போட்டிப் பிரிவிலும் வெற்றிபெறுகின்ற வீரர்களின் தற்போதைய மற்றும் முன்னாள் பயிற்சியாளர்களுக்கு பணப் பரிசிலிருந்து 25 சதவீதத்தை பிரித்துக்கொடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 பணப் பரிசு விபரம்

போட்டிகள் பதக்கங்களின் அடிப்படையில் பணப்பரிசு (இலட்சம் ரூபா)
தங்கம்     வெள்ளி     வெண்கலம்
ஒலிம்பிக் போட்டி 200 150 100
பரா ஒலிம்பிக் போட்டி 50 35 20
இளையோர் ஒலிம்பிக் போட்டி 40 20 15
குளிர்கால ஒலிம்பிக் போட்டி 20 15 10

 

குறிப்பு –  ஒலிம்பிக் போட்டிகளில் 4 முதல் 8 இடங்கள் வரை வெற்றியைப் பதிவு செய்கின்ற வீரருக்கு 50 இலட்சம் ரூபா வழங்கப்படும்.

 உலக சம்பின்ஷிப் போட்டிகள்

பிரிவுகள் ஒலிம்பிக் விளையாட்டுகள் ஒலிம்பிக் அல்லாத விளையாட்டுகள்
த –  வெ – வெண்கலம் த –  வெ – வெண்கலம்
சிரேஷ்ட 80       70 60 40       30         20
கனிஷ்ட 30       20        10 20      15 10
இளையோர் 15       10        7.5 7.5     05 03

 

குறிப்பு – பங்குபற்றுகின்ற போட்டிகளில் 40 இற்கும் அதிகமான நாடுகள் பங்குபற்றியிருந்தால் முழுப் பணப் பரிசும் வழங்கப்படும். 5 நாடுகளுக்கு குறைவாயின் எந்தவொரு பணப் பரிசும் வழங்கப்படமாட்டாது.

20 – 40 நாடுகள் – முழுப் பணத்தில் 50%

10 – 20 நாடுகள் – முழுப் பணத்தில் 30%

05 – 10 நாடுகள் – முழுப் பணத்தில் 15%

 பொதுநலவாய மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

பிரிவுகள் தங்கம் வெள்ளி வெண்கலம்
சிரேஷ்ட 50 40 30
கனிஷ்ட 15 10 7.5
இளையோர் 10 7.5 04

 

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்

பிரிவுகள் தங்கம் வெள்ளி வெண்கலம்
சிரேஷ்ட 05 03 02
கனிஷ்ட 02 1.5 01