புத்தாண்டிக்கான புதிய ஆரம்பம் ஒன்றினை பெற்றுக்கொள்ளும் முகமாக, இலங்கையின் விளையாட்டுத்துறையை மேலும் அபிவிருத்தி செய்யும் நோக்கில் 2017ஆம் ஆண்டுக்கான தமது செயற்பாடுகள் தொடர்பான நாட்காட்டியை விளையாட்டுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ளது.

குறித்த நாட்காட்டி, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் தலைமையில் நேற்று வெளியிடப்பட்டது. விளையாட்டுதுறை தலைமை இயக்குனர் மற்றும் அவரின் குழுவினரின் கடின உழைப்பின் மத்தியில், நீண்ட கால முயற்சியின் பலனாக நாட்டிலுள்ள 61 வகையான விளையாட்டுத் துறைகளின் நிகழ்ச்சி நிரல்களையும் உள்ளடக்கியதாக இவ்வாண்டிக்கான நாட்காட்டி அமைந்துள்ளது. அதேநேரம் வேறுபாடுகள் அற்ற ஒழுங்கான திட்டதுக்கு ஏற்றவாறும் இது அமையப்பெற்றுள்ளது.  

இது குறித்து தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் கருத்து தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, “விளையாட்டு நாட்காட்டியினை உருவாக்குவதற்கு முன்னின்று கடினமாக உழைத்த அனைத்து அதிகாரிகளுக்கும் பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து சர்வதேச மற்றும் உள்ளூர் விளையாட்டு நிகழ்ச்சிகளை ஒருமிக்க, ஒரு ஒழுங்கு முறையில் தயார்படுத்தியுள்ளோம். எனவே இது விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை ஊக்குவிக்கும் விதத்தில் இருக்கும்” என்றார்.

குறித்த நாட்காட்டியானது இவ்வருடத்தில் பாடசாலை மட்டத்திலிருந்து சர்வதேச மட்டம் வரை நடைபெறவுள்ள அனைத்துக் கட்ட போட்டி  நிகழ்ச்சிகளையும் உள்ளடக்கியுள்ளது.

ஊடகவியலாளர்கள் மற்றும் விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்களோடு புது வருடம் குறித்து பேசிய அமைச்சர், அவர்களுக்கு எதிர்காலத் திட்டங்களையும் விளக்கினார்.  

மூன்று வகையான குழுக்களை உருவாக்குமாறு விளையாட்டு அமைப்புகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். ஒலிம்பிக் குழு, ஆசிய போட்டிகளுக்கான குழு மற்றும் தேசிய மட்டதுக்கான குழு ஆகிய குழுக்களை உருவாக்க எதிர்பார்த்துள்ளோம்.

மூன்று மாதங்களுக்குள் தயார் செய்து எங்களால் ஒலிம்பிக் போட்டிகளில் போட்டியிட முடியாதுஎனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

2020ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளுக்கு இன்னும் மூன்று வருட காலப்பகுதி உள்ளது. இந்நிலையில், இந்த மூன்று வருடங்களில் வீரர்களை தயார் படுத்துவதிலேயே இலங்கை வீரர்களுக்கான ஒலிம்பிக் வாய்ப்புக்கள் தங்கியுள்ளன. எனவே, விளையாட்டுத்துறை அமைச்சு அதற்கான தேவைகள் குறித்து புரிந்துகொண்டுள்ளதோடு, குறித்த அடைவை எட்டுவதற்கு ஏற்றவாறான பயிற்சிகளையும் அளிக்கவுள்ளது.

மெய்வல்லுனர் வீரர்களுக்கு ஆயுள் காப்புறுதி

வரலாற்றில் முதல் முறையாக விளையாட்டுத்துறை அமைச்சு தேசிய மட்டத்திலுள்ள அனைத்து மெய்வல்லுனர் வீரர்களுக்கும் ஆயுள் காப்புறுதித் திட்டம் ஒன்றினை வழங்குவற்கு எதிர்பார்த்துள்ளது. நாட்டிலுள்ள திறமைகளை பாதுக்காக்கும் தொலைநோக்கிலேயே இக்காப்புறுதி முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

எனினும், சிறிய எண்ணிகையிலான விளையாட்டு அமைப்புக்களே குறித்த ஆயுள் காப்புறுதி திட்டத்திற்காக தேசிய மட்டத்திலான மெய்வல்லுனர் வீரர்களின் தகவல்களை சமர்ப்பித்துள்ளமை குறித்து அமைச்சர் தனது அதிருப்தியை வெளியிட்டார்.    

”ஆயுள் காப்பீடு பெற்றுக்கொள்வற்காக 5 அல்லது 6 விளையாட்டு அமைப்புக்களே தகவல்களை அளித்துள்ளமை மிகவும் ஏமாற்றதை அளிக்கிறது. தகவல்களை சரியாக வழங்கவில்லை என்றால் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்க வேண்டி வரும்.

குறிப்பாக ரக்பி போன்ற விளையாட்டு போட்டிகளில் காயங்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, குறித்த விளையாட்டு அமைப்பும் உரிய தகவல்களை வழங்காமை ஆச்சரியமாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

அத்துடன், கடந்த ஆண்டு சிறந்த முறையில் திறமைகளை வெளிப்படுத்திய விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு அமைச்சு பாராட்டு தெரிவித்ததோடு, 10 மில்லியன் ரூபாய்களை பகிர்ந்தளித்துமுள்ளது. உலக கரம் சம்பியன்சிப்பில் வெற்றிபெற்ற கரம் அணி, பொதுநலவாய பளு தூக்கும் அணிகளுக்கும் குறித்த பாராட்டு மற்றும் ஊக்குவிப்புத் தொகை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.