விளையாட்டு அமைச்சரான மாண்புமிகு தயாசிறி ஜயசேகர, பாடசாலைகளுக்கு இடையிலான ரக்பி லீக் தொடரை உடனடியாக இடைநிறுத்தும்படி அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

டி.எஸ். சேனநாயக்க கல்லூரியினால் தொடுக்கப்பட்ட வழக்கு மற்றும் மேலும் பல தடங்கல்களுக்கும், சச்சரவுகளுக்கும் மத்தியில் லீக் சுற்றுப்போட்டி கடந்த வாரம் ஆரம்பமானது. எவ்வாறாயினும் மோசமான முறையில் திட்டமிடப்பட்டிருந்த இத்தொடர், முதல் வாரத்திலேயே பல குளறுபடிகளை எதிர்கொண்டுள்ள நிலையில் விளையாட்டு அமைச்சர் இம்முடிவை எடுத்துள்ளார்.

இலங்கை பாடசாலைகள் ரக்பி சம்மேளனத்தினால் (SLSRFA)  இத்தொடர் ஏற்பாடு செய்யப்பட்ட முறை குறித்து அமைச்சர் தயாசிறி ஜயசேகர  கடும் சினத்திற்குள்ளாகியிருப்பதுடன், இது தொடர்பில் அவர் தனது கருத்தினை ThePapare.com இடம் தெரிவித்தார்.

இலங்கை பாடசாலைகள் ரக்பி சம்மேளனம் இச்சுற்றுப்போட்டிக்கான விதிமுறைகள் அடங்கிய புத்தகத்தினை இதுவரையில் வெளியிடவில்லை. ஒரு தொடரினை ஏற்பாடு செய்யும் போது அவ்விளையாட்டிற்கு பொறுப்பான நாட்டின் பிரதான சங்கத்திடம் (இலங்கை ரக்பி – SLR) விதிமுறைகள் பட்டியலை சமர்ப்பிப்பது கட்டாயமானது.

போட்டித் தொடர் ஒன்றின் விதிமுறைகள் பற்றி அதில் கலந்து கொள்பவர்கள் மற்றும் அதனை நடாத்தும் அனைவரும் அறிந்திருத்தல் அவசியம். எனினும் இந்த லீக் தொடரானது அவ்வாறான ஆயத்தங்கள் இன்றி, இலங்கை ரக்பியின் எவ்வித அனுமதியுமின்றி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சர்வேதேச ரக்பி சம்மேளனத்தின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியான இலங்கை ரக்பியின் அனுமதியின்றி நடத்தப்படும் சுற்றுப்போட்டிகள் அதிகாரபூர்வமான போட்டிகளாக கருதப்படமாட்டாது. 

கல்வி அமைச்சின் கண்காணிப்பின் கீழ் இத்தொடர் இடம்பெறுகின்ற போதிலும், இலங்கையில் ரக்பி விளையாட்டின் ஆளுகைக் குழுவான இலங்கை ரக்பியின் ஒழுங்குவிதிகளுக்கு அமையவே சுற்றுப்போட்டி இடம்பெற வேண்டும். இது தொடர்பாக நான் ரக்பி நடுவர்கள் சங்கத் தலைவரான நிசாம் ஜமால்டீன் உடன் கதைத்ததுடன், இக்குளறுபடிகள் நிவர்த்தி செய்யப்படும் வரை போட்டிகளுக்கு மத்தியஸ்தர்களை நியமிக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளேன். எனது உத்தரவினை மீறி எவரும் செயற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

திரித்துவக் கல்லூரி - வெஸ்லி கல்லூரி அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற போட்டி மோதலுடன் நிறைவடைந்தது
திரித்துவக் கல்லூரி – வெஸ்லி கல்லூரி அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற போட்டி மோதலுடன் நிறைவடைந்தது

பாடசாலை மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் மாணவர்களை வழிநடத்துதல் தொடர்பிலும் அமைச்சர் கண்டனம் வெளியிட்டிருந்தார். தொடரின் முதல் வாரத்திலேயே முறைகேடான சில சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. திரித்துவக் கல்லூரி மற்றும் வெஸ்லி கல்லூரிகளுக்கு இடையிலான போட்டியில் வீரர்கள் கைகலப்பில் ஈடுபட்டதன் காரணமாக 8 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் றோயல் – புனித ஜோசப் அணிகள் மோதிக் கொண்ட போட்டியில் வீரர் ஒருவரின் தலைப்பகுதி பிறிதொரு வீரரின் காலினால் மிதிக்கப்பட்டுள்ளதுடன் அவர் இன்னும் மோசமான நிலையிலேயே காணப்படுகின்றார்.

ஒரு தந்தை என்ற வகையில் எனது பிள்ளை இவ்வாறான சம்பவங்களிற்கு முகம்கொடுப்பதை நான் விரும்ப மாட்டேன். என்னை போன்றே அனைத்து பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளின் பாதுகாப்பினையே முக்கியமாக கருதுகின்றனர். எதிர்காலத்தில் நாட்டினை பொறுப்பேற்கவுள்ள இளம் சமுதாயத்தினரின் பாதுகாப்பும், அவர்களை சரியான முறையில் வழிநடத்துவதும் மிக முக்கியமாகும். சொற்ப நேர விளையாட்டினை மாத்திரம் கவனத்திற் கொண்டு மாணவர்களின் வாழ்க்கையை கேள்விக் குறியாக்குவதனை எவ்விதத்திலும் ஏற்க முடியாது. கடந்த வருடத்திலும் பாடசாலைகள் ரக்பி சம்மேளனம் மற்றும் கல்வி அமைச்சு சிறுபிள்ளைத்தனமான தீர்மானங்களை எடுத்திருந்தமையை நினைவு கூறலாம். முறைகேடான சம்பவங்களில் ஈடுபட்டிருந்த ஒரு சில அணிகளை போட்டிகள் இடம்பெறாத காலப்பகுதியில் அவர்கள் தடை செய்து நகைப்புக்குள்ளாகியிருந்தனர்,” என்றார்.

இதேவேளை இசிபதன மற்றும் தர்மராஜ அணிகளுக்கிடையிலான போட்டியின் போது மாற்று வீரர்களை பதிவு செய்வதற்கான படிவங்களில் பற்றாக்குறை ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கைகளினால் எழுதப்பட்ட மாற்று வீரர்களை பதிவு செய்யும் படிவங்கள்
கைகளினால் எழுதப்பட்ட மாற்று வீரர்களை பதிவு செய்யும் படிவங்கள்

இலங்கையில் இடம்பெறும் ரக்பி போட்டித் தொடர்களில் அதிகளவிலான ரசிகர்களை கவரும் தொடராக காணப்படும் பாடசாலை ரக்பி லீக் தொடர், பாடசாலைகளின் மாணவர்கள், ஆசிரியர்கள். பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்களினால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு நிகழ்வாகும். எனினும் ஒவ்வொரு வருடமும் பாடசாலை ரக்பி சம்மேளனத்தின் முறையற்ற திட்டமிடலின் காரணமாக குளறுபடிகள் ஏற்படுகின்றமை வழமையாகியுள்ளது. ரக்பி விளையாட்டு தொடர்பில் போதியளவு தொழின்முறை ரீதியிலான அனுபவமற்ற பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பாடசாலை ரக்பி சம்மேளனத்தில் அங்கம் வகிக்கின்றமையே இந்நிலைமைக்கு காரணம் எனலாம்.