விளையாட்டு அமைச்சரின் ஆவேசத்தால் இலங்கை விளையாட்டில் மாற்றம் ஏற்படுமா?

1696
Dayasiri Jayasekara

உடல் தகுதி அறிக்கைகள் இல்லாமல் எவ்விதமான விளையாட்டு அணிகளுக்கும் ஒப்புதல் அளிக்கப் போவதில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேக தெரிவித்துள்ளமை தற்பொழுது பலராலும் அதிகமாகக் கதைக்கப்படும் ஒரு விடயமாக மாறியுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இலங்கை கிரிக்கெட் வீரர்களின் தற்போதைய நிலை குறித்து குறை கூறிய அமைச்சர், சர்வதேச மட்டத்திலுள்ள கிரிக்கெட் வீரர்களுடன் ஒப்பிடும்பொழுது இலங்கை வீரர்களுடைய உடல் தகுதி மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் சுட்டிக் காட்டினார்.

அணியின் மோசமான களத்தடுப்பே நடைபெற்று முடிந்த சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இருந்து இலங்கை அணி வெளியேறுவதற்கு முக்கிய காரணியாக இருந்தது.

பாகிஸ்தானுக்கு வாழ்த்து தெரிவித்த இலங்கை கிரிக்கெட் சபை

நேற்று நடைபெற்று முடிந்த சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய அணியை..

இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர், இலங்கை விளையாட்டு சட்டங்களுக்கு அமைவாக எந்த அணியும் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டிகளில் பங்குபற்றுவதற்கு முன்னதாக விளையாட்டு அமைச்சரின் அனுமதியைப் பெற வேண்டும். இலங்கை அணியில் மட்டுமே அதிகளவான உடல் தகுதிக்கு மீறிய உடம்பை கொண்டுள்ள வீரர்கள் உள்ளனர். எனவே, பிடியெடுப்புகளை தவற விட்டத்தில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. மேலும், களத்தடுப்பின்போது ஏற்பட்ட தவறுகளால் எவ்வளவு ஓட்டங்கள் எதிரணிக்கு தாரை வார்க்கப்பட்டது.  

கடந்த காலங்களில் கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு ஓட முடியவில்லை என்றால், அவருக்குப் பதிலாக உதிரி வீரரொருவர் வழங்கப்பட்டார். எனினும் இப்போது அது நிறுத்தப்பட்டுள்ளது. அது மிகவும் நல்லது. ஏனெனில் அவரால் அரைச் சதம் பெறும் வரை கூட ஓட முடியாது என்றால், அவர் வீட்டுக்குச் செல்ல வேண்டும். இலங்கை கிரிக்கெட் வீரர்களைப் போன்ற வீரர்களை நான் எங்கும் கண்டதில்லை. ஏனெனில், ஒரு சிலரைத் தவிர ஏனைய வீரர்கள் அனைவரும் கட்டுக்கோப்பான உடலமைப்புடன் இல்லை என்றார்.

இம்முறை சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் அரையிறுதி வரை முன்னேறியிருந்த பங்களாதேஷ் அணியை எடுத்துக் காட்டாகக் குறிப்பிட்ட விளையாட்டுத்துறை அமைச்சர், அவ்வணி வீரர்களின் உடலமைப்பு மற்றும் தொடர்ச்சியான பயிற்சிகள் குறித்தும் குறிப்பிட்டார்.

உடல் எடை கூடிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு கடந்த வருடம் காகுல் ராணுவப் பயிற்சி முகாமில் வைத்து இராணுவப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அதன் பலனாக வீரர்கள் சிறந்த திறமையை வெளிப்படுத்த, கடந்தாண்டில் இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகளில் வெற்றியீட்டியிருந்தது.

அது போன்றே இம்முறை சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் துடுப்பாட்டம், பந்து வீச்சு மற்றும் களத்தடுப்பு என அனைத்திலும் சிறந்த முறையில் செயற்பட்ட அவ்வணி வீரர்கள், அதிரடியாக ஆடி இறுதிப் போட்டிக்கு தெரிவாகி கிண்ணத்தையும் கைப்பற்றியுள்ளார்கள்.   

இவ்வாறான ஒரு நிலையில், இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கும் இராணுவப் பயிற்சிகளை வழங்கி அவர்களது உடல்தகுதியை சீரான நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். எனினும், இந்த விடயம் பல தரப்பினராலும் பல்வேறு விதத்தில் கதைக்கப்படுகின்றது.

கிரிக்கெட் விளையாட்டைப் போன்றே இலங்கை மெய்வல்லுனர் விளையாட்டு குறித்தும் அமைச்சர் பல விமர்சனங்களை வெளியிட்டார்.

17 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் காலியில் ஒரு நாள் போட்டிகள் ஆரம்பம்

இம்மாத இறுதியில் ஜிம்பாப்வே அணியின் இலங்கைக்கான சுற்றுத் தொடர் மூலம்..

மெய்வல்லுனர் வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் குறித்து கருத்து தெரிவித்த அவர்,

“நாம் ஒன்றை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். ஒலிம்பிக்கில் வெற்றியீட்டினோம் என்று ஒரு நாளும் ஒரு நல்ல பயிற்றுவிப்பாளராகிவிட முடியாது. நான் நன்றாக ஓடி தங்கப் பதக்கம் பெற்றேன் என்ற காரணத்துக்காக பயிற்சியளிக்க முடியாது. பயிற்றுவிப்பாளராக வர வேண்டுமென்றால் அவர் பயிற்றுவிப்பாளருக்கான பயிற்சிகளை முறையே பெற்றிருக்க வேண்டும்.

இலங்கையில், விளையாட்டின் தரம் குறைவதற்கு முதலாவது காரணம், இலங்கையிலுள்ள பயிற்றுவிப்பாளர்களின் சுயநலம் மற்றும் சிறந்த பயிற்றுவிப்பாளர்களாக வரக்கூடிய ஏனையோருக்கு உள்ள வழிகளை அடைத்து வைத்துள்ளமையும் பயிற்றுவிப்பாளர்களுக்குறிய போதிய கல்வி மற்றும் அதற்குரிய தகுதிகள் இல்லாமல் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சிகளை வழங்குதலுமாகும்.

சரியான பயிற்றுவிப்பாளர் இல்லாமையே. இலங்கையில் விளையாட்டு வீரர்கள் முன்னேறாமைக்கு காரணம். அதனால் நாங்கள் அங்கும் இன்றும் உள்ளவர்களை கொண்டு வந்து ஒலிம்பிக் வரை செல்லலாம் சென்று கனவு காண்கின்றோம். அப்படி செய்ய முடியாது என்று அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.  

எவ்வாறிருப்பினும் இலங்கையின் விளையாட்டுத்துறை அபிவிருத்திக்கு பலவகையான மாற்றங்களும், புதிய திட்டங்களும் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவை உள்ளது.

அமைச்சரின் இந்த கடும் விமர்சனங்களுக்கு மத்தியில் இம்மாத இறுதிப் பகுதியில் ஜிம்பாப்வே அணிக்கெதிரான கிரிக்கெட் போட்டித் தொடரில் இலங்கை அணி விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.