இலங்கை அணி தோல்விகளை பெற வரவில்லை – ஜெப்ரி வன்டர்செய்

642
ICC

இலங்கை கிரிக்கெட் அணியின் மணிக்கட்டு சுழல் பந்துவீச்சாளரான ஜெப்ரி வண்டர்செய், இந்த ஆண்டு இடம்பெறவிருக்கும் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரினை இலங்கை அணி அச்சம் ஏதுமின்றி விளையாடும் என்பதில் நம்பிக்கையுடன் காணப்படுகின்றார்.

தனது பொறுப்புக்கள் தொடர்பில் தெளிவாக இருக்கும் திமுத் கருணாரத்ன

முதல் 10 ஓவர்களுக்குள் சிறந்த துடுப்பாட்ட ஆரம்பத்தை பெறுவதும், வீரர்களை….

இலங்கை அணிக்காக 2017ஆம் ஆண்டின்  ஒக்டோபர் மாதத்திலே கடைசியாக ஒருநாள் போட்டியொன்றில் பங்கேற்ற வண்டர்செய், இந்த ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் இலங்கைத் தரப்பு தோல்வியினை எதிர்பார்த்து வரவில்லை எனக் கூறியிருந்ததோடு, எதிரணிகளுக்கு அதிர்ச்சி தரும் எதிர்பார்ப்பு ஒன்றுடனேயே உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

“நாங்கள் இங்கே நல்ல பெறுபேறு ஒன்றை அடையவே வந்திருக்கின்றோம். நாங்கள் இங்கே தோல்விகளை எடுத்துக்கொள்ள வரவில்லை. நாங்கள் இங்கே வெற்றிக்காகவே வந்திருக்கின்றோம். எமது நாட்டுக்காக நாம் போராடுவோம்.”

இலங்கை கிரிக்கெட் அணி அண்மைக்காலமாக சந்தித்து வரும் தொடர் தோல்விகள் குறித்து பல தரப்பினரும் தமது விமர்சனங்களை    தெரிவித்து வருகின்றனர். எனினும் ஓர் அணி என்ற வகையில் தாம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று வண்டர்சேய் கருத்து தெரிவித்தார்.

“மக்கள் அவர்கள் விரும்பும் எதனையும் பேச முடியும், ஆனால் அணியின் ஒற்றுமையே இங்கே முக்கியம். அதோடு, எமது பாசறையில் என்ன நடக்கின்றது என்பதும் முக்கியம், நாம் எந்தளவிற்கு பயிற்சி எடுக்கின்றோம் என்பதும் நாம் எந்தளவிற்கு அதனை வெளிப்படுத்துகின்றோம் என்பதும் முக்கியம்”

“இயற்கையாகவே எமது அணி குறித்து எதிர்மறையான கருத்துக்கள் வெளிவரும். ஆனால், எதிர்மறையான விடயங்கள் எதிரணிகளிடமும் இருக்கும்”

“நாம் வீழ்ந்த போதிலும், நாம் எப்படி எழுகின்றோம் மற்றும் போட்டிகளை வெல்வதற்கு நாம் எப்படி திறமை காட்டுகின்றோம் என்பதிலேயே அனைத்தும் இருக்கின்றது.” என்றார்.

உலகக் கிண்ணத் தொடரை 1996ஆம் ஆண்டில் வென்ற இலங்கை அணி, இங்கிலாந்தில் நடைபெறவுள்ள இந்த ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடரினை சிரேஷ்ட பயிற்றுவிப்பாளர் சந்திக ஹதுருசிங்கவின் ஆளுகையில் மீண்டும் வெல்ல எதிர்பார்க்கின்றது.

இதேநேரம், இம்முறைக்கான உலகக் கிண்ணத் தொடருக்கான இலங்கை குழாத்தில் திமுத் கருணாரத்ன அணித்தலைவராக இடம்பெற, லஹிரு திரிமான்ன அனுபவ துடுப்பாட்ட வீரராக களம் காணுகின்றார்.

ஸ்கொட்லாந்து அணியுடனான போட்டிக்கு முன்னர் கடந்த 2015ஆம் ஆண்டின் உலகக் கிண்ணத் தொடர் மூலமே இலங்கை அணிக்காக திமுத் கருணாரத்ன ஒருநாள் போட்டிகளில் ஆடியிருந்ததோடு, திரிமான்ன 2017ஆம் ஆண்டின் பிற்பகுதியிலேயே இலங்கை அணியினை ஒருநாள் போட்டியில் கடைசியாக பிரதிநிதித்துவம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

திமுத் கருணாரத்ன இலங்கை அணியினை தென்னாபிரிக்க மண்ணில் வரலாற்று டெஸ்ட் தொடர் வெற்றி ஒன்றினை சுவைக்க வழிநடாத்தி இருந்ததோடு, லஹிரு திரிமான்ன 2015ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியின் ஓட்ட இயந்திரங்களில் ஒன்றாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இவர்களில் கடந்த நான்கு வருடங்களில் ஒருநாள் போட்டிகளில் திமுத் கருணாரத்ன விளையாடாத போதிலும் அவரின் தலைமை மீது முழு நம்பிக்கை உண்டு என ஜெப்ரி வண்டர்செய் குறிப்பிட்டிருந்தார்.

ஜீவன் மெண்டிஸின் கனவு நனவான உலகக் கிண்ணம்

ஒன்பது ஆண்டுகளுக்கு முன் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் களமிறங்கிய….

“திமுத் அவரது தலைமைத்துவம் மூலம் முன்னுதாரணமாக இருக்கின்றார். அவரால் அணிக்கு ஓட்டங்களை விரைவாக பெற்றுத்தர முடியும் என்பதையும் காட்டியிருக்கின்றார். மேலும், அவர் எங்களுக்கு மைதானத்திற்கு வெளியேயும் உள்ளேயும் மிகவும் முக்கியத்துவமான நபராகவும் இருக்கின்றார்.”

இதேநேரம், இந்த உலகக் கிண்ணத் தொடரின் போது இலங்கை அணியின் வெற்றிக்கு தன்னால் முடிந்த பங்களிப்பினை வழங்குவதையும் 29 வயதான ஜெப்ரி வண்டர்செய் உறுதி செய்திருந்தார்.

“அணிக்கு பங்களிப்பு வழங்குவதில் நான் எப்போதும் உறுதியாக இருக்கின்றேன். சுழல் பந்துவீச்சாளர் என்பதால், குறுகிய பெளண்டரி இருக்கும் திசை ஒன்றில் நீங்கள் எப்போதும் இலக்கு வைக்கப்படுவீர்கள், நீங்கள் அழுத்தங்களை எதிர்கொண்ட போதிலும் விக்கெட்டுக்கான பந்தினை தொடர்ந்தும் வீச வேண்டும்.”

“நான் உலகக் கிண்ணத்தில் எனக்கான நேரத்தை பெற்றுக் கொள்வதற்கான நம்பிக்கையையும், திறமையையும் வைத்திருப்பதாக எண்ணுகின்றேன். இதற்காக நான் தொடர்ந்தும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றேன்.”

இலங்கை அணி, கார்டிப் நகரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஜூன் மாதம் முதலாம் திகதி நடைபெறும் போட்டியுடன் தமது உலகக் கிண்ண பயணத்தினை ஆரம்பம் செய்கின்றது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<