தென்னாபிரிக்க மகளிர் கிரிக்கெட் வீராங்கனை விபத்தில் பலி

160
CSA Twitter

தென்னாபிரிக்க சர்வதேச மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனையான எல்ரீஸா தியூனிஸன் தனது 25 ஆவது வயதில் கடந்த வெள்ளியன்று (5) ஏற்பட்ட வீதி விபத்தில் உயிரிழந்துள்ளார்.  

1993 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் திகதி தென்னாபிரிக்காவின் க்லேர்க்ஸ்டொர்ப் நகரில் பிறந்தார் எல்ரீஸா தியூனிஸன். ஒரு பெண்ணாக இருந்து தனது ஆற்றலின் மூலம் சர்வதேச அளவில் ஒரு சகலதுறை கிரிக்கெட் வீராங்கனையாக உருவாக வேண்டும் என்ற கனவுடன் இந்த உலகில் வாழ்ந்து வந்தார்.

இவ்வாறு பல சவால்களுக்கு மத்தியில் வாழ்ந்து வந்த தியூனிஸனுடைய கனவு 2013 ஆம் ஆண்டு பலித்தது. 2013 ஜனவரி 19 ஆம் திகதி மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணியுடன் நடைபெற்ற போட்டியில் சர்வதேச கிரிக்கெட் அரங்கிற்கு டி20 போட்டி மூலமாக அறிமுகமானார்.

ஐ.பி.எல். வரலாற்று சாதனையை முறியடித்த அல்ஷாரி ஜோசப்

ஐ.பி.எல். தொடரில் நேற்று (06) நடைபெற்ற சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்கு…

ஒரேயொரு டி20 சர்வதேச போட்டியில் விளையாடிய தியூனிஸனுக்கு அப்போட்டியில் துடுப்பாட்டம் சரி, பந்துவீச்சு சரி இரண்டில் ஒன்றிலாவது சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இருந்தாலும் டி20 அறிமுகம் பெற்ற அதே ஆண்டு பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி இலங்கை மகளிர் அணியுடன் நடைபெற்ற ஐ.சி.சி மகளிர் உலகக்கிண்ண தொடரின் ‘சுப்பர் சிக்ஸ்’ போட்டியில் ஒருநாள் அறிமுகம் பெற்றுக்கொண்டார். அந்த போட்டியில் தென்னாபிரிக்க மகளிர் அணி 110 ஓட்டங்களினால் வெற்றி பெற்றிருந்தது.

பின்னர் செப்டம்பர் மாதம் பங்களாதேஷ் அணியுடன் நடைபெற்ற இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடிய நிலையில், மூன்று ஒருநாள் சர்வதேச போட்டிகளில் மாத்திரம் விளையாடிய நிலையில் ஒருநாள் அணியிலிருந்தும் சிறிது விலகியிருந்தார்.

இருந்தாலும் தொடர்ந்து தென்னாபிரிக்காவின் உள்ளூர் அணிகளில் ஒன்றான நோர்த் வெஸ்ட் மகளிர் அணியில் விளையாடி வந்தார். கடந்த ஆண்டு (2018) மே மாதம் நோர்த் வெஸ்ட் அணிக்காக பங்களாதேஷ் மகளிர் அணியுடன் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியொன்றில் இறுதியாக  விளையாடியிருந்தார்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (05) தென்னாபிரிக்காவின் ஸ்டில்பொன்டைனில்  காரில் பயணம் செய்து கொண்டிருந்த வேளையில் பாதையில் ஏற்பட்ட வாகன விபத்தில் சிக்கி எதிர்பாராத விதமாக  தனது 25 ஆவது வயதில் உலகை விட்டும் பிரிந்து சென்றுள்ளார். இந்த செய்தியானது கிரிக்கெட் உலகில் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவருடைய மரண செய்தி தொடர்பாக தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. மேலும் இவருடைய இறுதிச்சடங்கில் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் அதிகாரி தபாங்க் மோரே கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ”இவரின் இறப்பு செய்தியை அறிந்து மிகவும் மனவருத்தம் அடைகின்றோம். உள்ளூர் கிரிக்கெட் மற்றம் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டில் தனது சிறந்த பங்களிப்பை வழங்கிய எல்ரீஸா தியூனிஸனின் மறைவை ஆழ்ந்த மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.”

மேலும், ”எல்ரீஸா தியூனிஸனின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆகியோருக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கின்றோம்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<