முதல்தர தென்னாபிரிக்காவுக்கு முட்டுக்கட்டையாக இருக்குமா இலங்கை?

2140
South Africa vs Sri Lanka

லண்டனில் நடைபெறவுள்ள தென்னாபிரிக்க அணியுடனான போட்டியுடன் இலங்கை அணி, பாரிய சவால்களுக்கு மத்தியில்  இம்முறைக்கான சம்பியன்ஸ் கிண்ணத் தொடரை ஆரம்பிக்கவுள்ளது.

ஏற்கனவே கடந்த ஜனவரி மாத தென்னாபிரிக்க சுற்றுப் பயணத்தின்போது தென்னாபிரிக்க அணி,  5 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரை 5-0 என்ற கணக்கில் வெற்றி கொண்டு இலங்கை அணியை திணறடித்திருந்தது. இலங்கையை மட்டுமன்றி, குறித்த காலப்பகுதியில் தென்னாபிரிக்க அணி விலிமைமிக்க அவுஸ்திரேலிய அணிக்கு எதிராகவும் பாரிய வெற்றியைப் பெற்றிருந்தது

வலிமை மிக்க அணிகளை வீழ்த்த புது வியூகத்துடன் உள்ள இலங்கை அணி

குறித்த தொடர் வெற்றிகளால் ஐசிசி தர வரிசையில் தென்னாபிரிக்க அணி முதலிடத்தை பிடித்திருந்தாலும், அவ்வணி ஐசிசி போட்டித் தொடர்களின் முக்கிய தருணங்களில் கோட்டை விடுவது வழக்கமாகும். எனினும், 1998ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது சம்பியன்ஸ் கிண்ண தொடரை வென்று சர்வதேச தொடர் ஒன்றின் முதலாவது கிண்ணத்தை தன்வசப்படுத்தியது அவ்வணி. இன்று வரை அந்த ஒரே கிண்ணமே அவர்களுக்கு சொந்தமான சர்வதேச தொடர் ஒன்றின் கிண்ணமாகும்.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணி

லண்டனில் நடைபெறவுள்ள போட்டியில் உலக தர வரிசையில் முதலாவது மற்றும் முதல் 10 இடங்களுக்குள் இருக்கும் நான்கு துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் பந்து வீச்சில் முதலிரண்டு இடத்தில் இருக்கும் பந்து வீச்சாளர்களுடன்கூடிய அதி சக்திவாய்ந்த அணியாகவே இம்முறை தென்னாபிரிக்கா களம் காணவுள்ளது.

துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் தென்னாபிரிக்க அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஏபி.டி. வில்லியர்ஸ் முதல் இடத்திலும், குயிண்டன் டி கொக், டுப்ளசிஸ் மற்றும் ஹசிம் அம்லா ஆகியோர் முறையே 3ஆம், 6ஆம் மற்றும் 10ஆவது இடங்களில் உள்ளனர். மேலும், பந்து வீச்சில் காகிஸோ றபாடா மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் முறையே முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.

எனினும் அவ்வணியை எதிர்கொள்ள துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சில் முதல் 10 இடங்களுக்குள் எவருமே இல்லாத நிலையில் இலங்கை அணி களமிறங்கவுள்ளது.

எனினும், சர்வதேச ஒரு நாள் போட்டிகளின் சகலதுறை ஆட்டக்காரர் வரிசையில் நான்காவது இடத்திலிருக்கும் இலங்கை அணியின் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் மீது பலருக்கும் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. எனினும், அவர் மீண்டும் உபாதைக்கு உள்ளாகியுள்ளமையினால் நாளைய போட்டியில் விளையாடுவது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது.

சம்பியன்ஸ் கிண்ண முதல் போட்டியில் இலங்கை அணி மெதிவ்சை இழக்கும் நிலை

எனினும் சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளுக்கு முன்னதாக நடைபெற்ற இங்கிலாந்து அணியுடனான மூன்று ஒரு நாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் தென்னாபிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் தோல்வியுற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், பாரிய சவால்களுக்கு மத்தியில் களமிறங்கவுள்ள இலங்கை அணியில், காயம் காரணமாக கடந்த 2015 ஆண்டிலிருந்து சர்வதேச போட்டிகளிலிருந்து விலகியிருந்த லசித் மாலிங்க மீண்டும் இணைந்திருப்பது அணியை மேலும் வலுப்படுத்தியிருக்கின்றது. தென்னாபிரிக்க துடுப்பாட்ட வீரர்களை மட்டுமல்லாது உலகிலுள்ள அனைத்து சிறந்த துடுப்பாட்ட வீரர்களையும் தனது யோக்கர் பந்து வீச்சினால்  அச்சுறுத்திய அனுபவமும் மாலிங்கவுக்கு உண்டு.

அதேநேரம், அணித் தலைவர் அஞ்செலோ மெதிவ்சுக்கு காலில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக தென்னாபிரிக்காவுடனான போட்டியிலிருந்து விலக நேர்ந்தால், அது இலங்கை அணிக்கு மிகுந்த பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. இறுதியாக நடைபெற்றிருந்த நியூசிலாந்து அணியுடனான  பயிற்சிப் போட்டியிலும் மெதிவ்ஸ் பங்கெடுக்கவில்லை.

எனினும், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து  மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய அணிகளுடனான பயிற்சிப் போட்டிகளில் இலங்கை தோல்வியுற்றிருந்தாலும், துடுப்பாட்டத்தில் பிரகாசித்திருந்தது.  அவுஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுடன் 300 ஓட்டங்களை விட அதிக ஓட்டங்களைப் பெற்றமை இலங்கை வீரர்கள் சிறந்த துடுப்பாட்ட திறமையை கொண்டுள்ளமைக்கு சான்றாக உள்ளது.

தென்னாபிரிக்காவுடனான போட்டியில் சுழற்பந்து வீச்சாளரான லக்ஷன் சண்டகன் களமிறக்கப்படக்கூடிய சாத்தியங்கள் உள்ளன. இதுவரை 6 சர்வதேச போட்டிகளில் பங்குபற்றியுள்ள சண்டகன் மொத்தமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவருடைய வித்தியாசமான பந்து வீச்சு தென்னாபிரிக்க அணியை அச்சுறுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜோ ரூட்டின் அபார துடுப்பாட்டத்தினால் பங்களாதேஷை வீழ்த்திய இங்கிலாந்து

அனுபவமற்ற மற்றும் இளம் வீரர்களை கொண்டிருந்தாலும் எங்களில் சிலர் இங்கிலாந்து களங்களில் விளையாடிய அனுபவத்தைக் கொண்டுள்ளனர். அந்த வகையில், அணியில் யாரும் போட்டியின் நிலைமையை மாற்றியமைக்கலாம். எங்களிடம் திறமை உள்ளது. எனினும் எதிர்வரும் போட்டிகளில் சவால்களை எதிர்கொள்வோம் என்று அணித் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இளம் குழாம் ஒன்றைக் கொண்ட இலங்கை வீரர்கள் இத்தொடரில் சிறந்த முறையில் பிரகாசிக்க வேண்டும் என்று நாமும் வாழ்த்துகின்றோம்.

இந்த போட்டி குறித்த உடனுக்குடனான தகவல்கள், ஓட்ட விபரங்கள், புகைப்படங்கள் மற்றும் ஐசிசி யின் உத்தியோகபூர்வ வீடியோக்கள் என்பவற்றை ThePapare.com ஊடாகப் பெற்றுக்கொள்ளலாம்.

பேஸ்புக் கிரிக்கெட் பக்கம்

பேஸ்புக் தமிழ் பக்கம்