டி கொக் இன் அதிரடியால் ஒருநாள் தொடர் தென்னாபிரிக்கா வசம்

257

சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச போட்டி நேற்று (30) தென்னாபிரிக்காவின் கேப் டவுன் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் தென்னாபிரிக்க அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று 3-2 என ஒருநாள் தொடரை கைப்பற்றியது.

இலகு வெற்றியுடன் ஒரு நாள் தொடரை சமன் செய்த பாகிஸ்தான்

சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு ….

ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நடைபெற்று முடிந்த நான்கு போட்டிகளிலும் இரு அணிகளும் இரண்டு போட்டிகள் வீதம் வெற்றி பெற்றிருந்த நிலையில் தொடரை வெற்றி கொள்ள இரு அணிகளும் நேற்றைய போட்டியில் களமிறங்கின. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை பாகிஸ்தான் அணிக்கு வழங்கியிருந்தது.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பகர் சமான் பெற்றுக் கொண்ட 70 ஓட்டங்கள் மற்றும் இறுதியில் இமாத் வசீம் ஆட்டமிழக்காமல் பெற்ற 47 ஓட்டங்கள் ஆகியவற்றின் பங்களிப்புடன் 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 240 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. சிறப்பாக பந்து வீசிய பெலுக்வாயோ மற்றும் ப்ரிடோரியஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதமும் ஏனைய மூன்று பந்து வீச்சாளர்கள் தலா ஒரு விக்கெட் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.

டெஸ்ட் தொடரை 3-0 என கைப்பற்றியிருந்த நிலையில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் நோக்கில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய தென்னாபிரிக்கா, ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டி கொக்கின் அதிரடியின் மூலம் வெற்றியிலக்கை இலகுவாக கடந்து 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று 3-2 என ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது.  

மீண்டும் தனது அதிரடியை ஆரம்பித்துள்ள ஏபி டி வில்லியர்ஸ்

பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் (BPL) கிரிக்கெட் தொடர் …

துடுப்பாட்டதில் தென்னாபிரிக்க அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டி கொக் அதிரடியாக 58 பந்துகளில் 3 சிக்சர்கள் மற்றும் 11 பௌண்டரிகள் அடங்களாக 83 ஓட்டங்களை பெற்று அணியின் வெற்றிக்கு வித்திட்டார். பின்னர் டு ப்ளெசிஸ் மற்றும் வேன் டேர் டஸ்ஸன் ஆகியோர் ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்ட அரைச்சதங்களுடன் 10 ஓவர்கள் மீதமிருக்க வெற்றியை சுவைத்து தொடரை கைப்பற்றியது தென்னாபிரிக்க அணி.

போட்டியின் ஆட்ட நாயகனாக டி கொக் தெரிவு செய்யப்பட்டிருந்ததுடன் தொடர் நாயகன் விருதை பாகிஸ்தான் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் இமாம் உல் ஹக் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர் நிறைவடைந்துள்ள நிலையில் சுற்றுப் பயணத்தின் இறுதித் தொடரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி நாளை முதலாம் திகதி நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

பாகிஸ்தான் அணி – 240/8 (50) – பகர் சமான் 70, இமாத் வசீம் 47* பெலுக்வாயோ 42/2, ப்ரிடோரியஸ் 46/2

தென்னாபிரிக்கா அணி 241/3 (40) – டி கொக் 83, டஸ்ஸன் 50*, டு ப்ளெசிஸ் 50*, ஷஹீன் அஃப்ரிடி 34/1

முடிவு : தென்னாபிரிக்கா அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<