பெலுக்வாயோவின் சகலதுறை ஆட்டத்தால் பாகிஸ்தானை வீழ்த்தியது தென்னாபிரிக்க்கா

6

தென்னாபிரிக்காவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் தென்னாபிரிக்க அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று மூன்று போட்டிகள் எஞ்சியிருக்கும் நிலையில் தொடரை  1-1 என சமப்படுத்தியுள்ளது.

தொடர் தோல்விகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தது பாகிஸ்தான்அணி

சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு …

முதலாவது போட்டியில் தோல்வியடைந்த தென்னாபிரிக்க அணி நேற்றைய (22) போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை பாகிஸ்தான் அணிக்கு வழங்கியிருந்தது. பாகிஸ்தான் அணி சார்பாக ஹுஸைன் தலாத் சகலதுறை வீரராக ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகியிருந்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, தென்னாபிரிக்க பந்து வீச்சாளர்களின் துல்லியமான பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 203 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. ஒரு கட்டத்தில் அவ்வணி 112 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் இருந்த போது 9 ஆவது விக்கெட்டுக்காக அணித்தலைவர் சர்ப்ராஸ் அஹமட்டுடன் இணைந்த பந்து வீச்சாளர் ஹசன் அலி அதிரடியாக துடுப்பெடுத்தாடி ஒருநாள் போட்டிகளில் தனது சிறந்த ஓட்ட பிரதியை பதிவு செய்திருந்தார்.

இருவரும் இணைந்து 90 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளை 41 ஓட்டங்களுடன் சர்ப்ராஸ் அஹமட் ஆட்டமிழந்ததை தொடர்ந்து அதே ஓவரில் ஹசன் அலியும் 59 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க பாகிஸ்தான் அணி 203 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பந்து வீச்சில் அன்டில் பெலுக்வாயோ 22 ஓடங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றி தனது சிறந்த ஒருநாள் பந்து வீச்சு பிரதியை பதிவு செய்திருந்தார். அது தவிர ஷம்ஸி மூன்று விக்கெட்டுக்கள் மற்றும் றபாடா இரண்டு விக்கெட்டுக்கள் என கைப்பற்றியிருந்தனர்.

ஒருநாள் அரங்கில் கோஹ்லியின் சாதனையை முறியடித்த ஹசிம் அம்லா

ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் வேகமாக 27 சதங்களை பெற்ற …

சொந்த மண்ணில் 204 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கு இலகுவானதாக இருந்த போதும் அபாரமாக பந்து வீசிய பாகிஸ்தான் அணியின் 18 வயது இளம் வேகப் பந்து வீச்சாளர் ஷஹீன் அஃப்ரிடி  29 ஓட்டங்களுக்கு முதல் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தி தென்னாபிரிக்க அணியை நிலைகுலையச் செய்திருந்தார். பின்னர் களமிறங்கிய டேவிட் மில்லர் மற்றும் கடந்த போட்டியில் அறிமுகமான வேன் டேர் டஸ்ஸன் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டெடுக்கும் முயற்சியாக சிறப்பாக துடுப்பெடுத்தாடினர்.

எனினும், இவர்களது இணைப்பாட்டம் 51 ஓட்டங்களை தாண்டி நீடிக்கவில்லை. மொத்த ஓட்ட எண்ணிக்கை 80 ஆக இருந்த போது சதாப் கான் வீசிய முதலாவது ஓவரிலே மில்லர் மற்றும் க்லாசன் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க அவ்வணி 80 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் களமிறங்கிய பெலுக்வாயோ, டஸ்ஸனுடன் இணைந்து அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றார்.

இருவரும் இணைந்து 6ஆவது விக்கெட்டுக்காக பிரிக்கப்படாத இணைப்பாட்டமாக 127 ஓட்டங்களை பெற்று அணியின் வெற்றியை உறுதி செய்தனர். டஸ்ஸன் ஒருநாள் போட்டிகளில் தனது இரண்டாவது அரைசதம் கடந்து 80 ஓட்டங்களுடனும்,  ஒருநாள் போட்டிகளில் தனது முதலாவது அரைச்சதம் பெற்ற பெலுக்வயோ 69 ஓட்டங்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். எனவே, 42 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்த தென்னாபிரிக்கா, வெற்றியிலக்கை அடைந்ததன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமப்படுத்தப்பட்டுள்ளது.

பகலிரவு டெஸ்ட் போட்டியில் நம்பிக்கையுடன் களமிறங்கும் இலங்கை

சுற்றுலா இலங்கை – அவுஸ்திரேலியா அணிகளுக்கு ….

போட்டியின் ஆட்ட நாயகனாக பந்து வீச்சு மற்றும் துடுப்பாட்டத்தில் தனது சிறந்த பிரதிகளை பதிவு செய்து சகலதுறை ஆட்டக்காரராக தன்னை அறிமுகமாக்கிய பெலுக்வாயோ தெரிவு செய்யப்பட்டார். தொடரின் மூன்றாவது போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (25) நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

பாகிஸ்தான் அணி – 203 (45.5) – ஹசன் அலி 59, சர்ப்ராஸ் அஹமட் 41, பெலுக்வாயோ 22/4, ஷம்ஸி 56/3

தென்னாபிரிக்கா அணி 207/5 (42) – டஸ்ஸன் 80*, பெலுக்வாயோ 69*, ஷஹீன் அஃப்ரிடி 44/3, சதாப் கான் 46/2

முடிவு : தென்னாபிரிக்கா அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி