இலங்கையுடன் மோதவுள்ள தென்னாபிரிக்க டெஸ்ட் குழாம் அறிவிப்பு

1037

இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக ஆரம்பமாகவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 14 பேர்கொண்ட தென்னாபிரிக்க அணிக் குழாம் இன்று (07) அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அறிவிக்கப்பட்டுள்ள தென்னாபிரிக்க குழாத்தில், டெஸ்ட் அறிமுக வீரராக சகலதுறை வீரர் வியாம் முல்டர் இணைக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணியில் மொஹமட் சிராஸ் – உத்தியோகபூர்வ அறிவிப்பு

பங்களாதேஷ் அணிக்கு எதிராக 2017ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் தொடரில் சர்வதேச அறிமுகத்தைப் பெற்ற வியாம் முல்டர், 8 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய பின்னர், கடந்த வருடம் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடருக்கான குழாத்தில் இணைக்கப்பட்டார். இந்த தொடரில் விளையாடாத இவர், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக கடந்த வருடம் நடைபெற்ற ஒருநாள் தொடரின் போது ஏற்பட்ட கணுக்கால் உபாதை காரணமாக அணியிலிருந்து வெளியேறினார்.

தொடர்ந்தும் உபாதையால் அவதிப்பட்டு வந்த இவர், பாகிஸ்தான் அணிக்கு எதிராக கடந்த மாதம் நடைபெற்ற ஒருநாள் தொடரின் ஐந்தாவது போட்டிக்கு முன்னர் வரை, சர்வதேச போட்டிகளிலிருந்து விலகியிருந்தார். எனினும், இறுதியாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் விளையாடிய இவர், தற்போது டெஸ்ட் குழாத்தில் இடம் பிடித்துள்ளார். இவர், தென்னாபிரிக்காவில் நடைபெற்ற உள்ளூர் முதற்தர போட்டிகள் மூன்றில் விளையாடி, 146 ஓட்டங்களை குவித்திருந்ததுடன், இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.

வியாம் முல்டரின் டெஸ்ட் வருகை குறித்து கருத்து வெளியிட்ட அந்த அணியின் அமைப்பாளர் லிண்டா ஷொண்டி, “எமது டெஸ்ட் குழாத்தில் துடுப்பாட்ட சகலதுறை வீரர் ஒருவரை தக்கவைத்துக் கொள்வதற்கான திட்டத்தை நகர்த்தி வருகின்றோம். வியாம் முல்டர் சிறந்த துடுப்பாட்ட சகலதுறை வீரர் என்றாலும், அவரது உபாதை எமக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. எனினும், அவரின் உபாதையை சரி செய்வதில் கவனம் செலுத்தி, நாம் மீண்டும் அவரை அணிக் குழாத்தில் இணைத்துள்ளோம்” என்றார்.

இந்த நிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும், உபாதை காரணமாக நீக்கப்பட்டிருந்த லுங்கி என்கிடி, இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். அவரின் முழங்கால் உபாதை முழுமையாக குணமடையாத நிலையிலேயே, அவர் அணியில் இணைக்கப்படவில்லை என லிண்டா ஷொண்டி குறிப்பிட்டுள்ளார்.  இதேவேளை, பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் குழாம்களில் இணைக்கப்பட்டிருந்த வேகப்பந்து வீச்சாளர் டேன் பெட்டர்சன் இலங்கை அணிக்கு எதிரான தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும், பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான குழாத்தில் இணைக்கப்பட்டிருந்த ஏனைய தென்னாபிரிக்க வீரர்கள், இலங்கை தொடரில் இணைக்கப்பட்டுள்ளதுடன், வேறு எந்த மாற்றங்களையும் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை ஏற்படுத்தவில்லை.

ஆறுதல் வெற்றியுடன் தொடரை முடித்தது பாகிஸ்தான்

அணித் தலைவர் பெப் டு ப்ளெசிஸுடன் இணைந்து, ஹசிம் அம்லா, எய்டன் மர்க்ரம், டெம்பா புவ்மா, தியூனிஸ் டி பிரைன், டீன் எல்கர், குயின்டன் டி கொக் மற்றும் சுபைர் ஹம்ஷா ஆகியோர் துடுப்பாட்டத்தை வலுப்படுத்தவுள்ளனர்.

இதேவேளை, வேகப்பந்து வீச்சாளர்களாக டேல் ஸ்டெய்ன், காகிஸோ றபாடா, வெரொன் பில்லெண்டர், டவுன்னே ஒலிவியர் மற்றும் வியாம் முல்டர் செயற்படவுள்ளதுடன், ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளராக கேஷவ் மஹராஜ் இணைக்கப்பட்டுள்ளார்.

தென்னாபிரிக்க குழாம்

பெப் டு பிளசிஸ் (தலைவர்), ஹசிம் அம்லா, எய்டன் மர்க்ரம், டெம்பா புவ்மா, தியூனிஸ் டி பிரைன், டீன் எல்கர், குயின்டன் டி கொக், சுபைர் ஹம்ஷா, டேல் ஸ்டெய்ன், காகிஸோ பாடா, வெரொன் பில்லெண்டர், டவுன்னே ஒலிவியர், வியாம் முல்டர், கேஷவ் மஹராஜ்

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க