ஸ்மித், வோர்னர், பான்க்ரொப்ட் அவுஸ்திரேலியாவுக்கு திரும்ப அழைப்பு

778
AFP

கேப்டவுனில் நடந்த தொன்னாபிரிக்காவுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித், உப தலைவர் டேவிட் வோர்னர் மற்றும் துடுப்பாட்ட வீரர் கெமரூன் பான்க்ரொப்ட் மூவரையும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை நாட்டுக்கு திருப்பி அழைத்துள்ளது.

தலைமை பயிற்சியாளர் டெரன் லீமன் இந்த சர்ச்சையில் தொடர்பில்லை என்றும் அவர் தொடர்ந்து தனது பதவியில் இருப்பார் என்றும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் தலைமை நிறைவேற்று அதிகாரி ஜேம்ஸ் சதர்லாண்ட் குறிப்பிட்டார்.  

இந்த விவகாரம் தொடர்பான விசாரணை பூர்த்தியான அடுத்த 24 மணி நேரத்திற்குள் தண்டனைகள் அறிவிக்கப்படும் என்றும் சதர்லாண்ட் செவ்வாய்கிழமை (27) குறிப்பிட்டிருந்தார்.

”இது போட்டி உணர்வை கொண்டதல்ல. இது அவுஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு நல்ல நாள் அல்ல” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.   

தென்னாபிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் அவுஸ்திரேலிய அணியின் எஞ்சிய போட்டிகளுக்கு விக்கெட் காப்பாளர் டிம் பெயின் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நாடு திரும்பும் இந்த வீரர்களுக்கு மாற்றாக மத்தியூ ரென்ஷோ, கிளென் மெக்ஸ்வெல் மற்றும் ஜோ பேர்ன் ஆகியோர் அவுஸ்திரேலிய அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஜொஹன்னஸ் பேர்க்கில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (30) ஆரம்பமாகும் நான்காவது டெஸ்ட் போட்டிக்கு அவுஸ்திரேலிய அணியுடன் இணையவுள்ளனர்.

வாழ்நாள் தடைக்கு முகம்கொடுக்கும் நெருக்கடியில் ஸ்மித், வோர்னர்

தென்னாபிரிக்கா சென்றிருக்கும் சதர்லாண்ட் செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது கூறியதாவது, ”சனிக்கிழமை கேப்டவுனில் சம்பவம் இடம்பெற்றதை அடுத்து அவுஸ்திரேலிய ரசிகர்கள் மற்றும் அவுஸ்திரேலிய மக்களிடம் எனது ஏமாற்றத்தையும் கோபத்தையும் பகிர்ந்துகொண்டேன்.  

இந்த நிகழ்வுக்காக அவுஸ்தியரேலிய கிரிக்கெட் சார்பில் அனைத்து அவுஸ்திரேலியர்களிடமும், குறிப்பாக கிரிக்கெட்டை விரும்பும், வீரர்களை தமது முன் உதாரணமாக கொண்ட அனைத்து சிறுவர்களிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.   

சிறந்த கிரிக்கெட் தொடர் ஒன்று இந்த விடயத்தால் பாதிக்கப்பட்டதையிட்டு தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை மற்றும் தென்னாபிரிக்க ரசிகர்களிடமும் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

விசாரணைகள் இன்னும் பூர்த்தியாகவில்லை. ஆரம்பக்கட்ட கண்டுபிடிப்புகள் பற்றி அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை ஆலோசனை நடத்தும்” என்றார்.