நான் செய்த குற்றத்தின் தன்மை இப்போது புரிகிறது – ஸ்மித்

381
AFP/Getty Images

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தலைவனாக தான் தோற்றுவிட்டேன் எனவும், ஒரு மனிதனாக தான் செய்த தவறில் இருந்து திருந்த முயன்று வருவதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்காவுடன் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது உப்புக்காகிதத்தை உபயோகித்து பந்தை சேதப்படுத்தியதாக அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வோர்னர், கெமரூன் பேங்கிராப்ட் ஆகியோர் சர்ச்சையில் சிக்கினர். இதனையடுத்து தங்கள் தவறை அவர்கள் ஒப்புக்கொண்டதை தொடர்ந்து, பேங்கிராப்ட்டுக்கு 9 மாத தடையும், ஏனைய இருவருக்கும் ஓராண்டு தடையும் விதிக்கப்பட்டது.

“ஸ்டீவ் ஸ்மித் விளையாட முடியாது” ; பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அதிரடி

பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL)…

எனவே பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கி ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ள ஸ்டீவ் ஸ்மித்தின் போட்டித் தடை முடிவடைய இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் மீண்டும் அணிக்குத் திரும்பும் வகையில் உள்ளூர் போட்டிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில், கிரிக்கெட் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் குறித்து அவுஸ்திரேலிய மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட ஸ்டீவ் ஸ்மித்,  நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேற்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேட்டியளித்தார். அங்கு அவர் கருத்து வெளியிடுகையில்,

”வீரர்கள் அறையில் இதற்கான திட்டம் தயாரானபோது அதை தடுத்து நிறுத்தும் வாய்ப்பு எனக்கு இருந்தது. ஆனால், அதை கண்டுகொள்ளாமல் கடந்து சென்றதே நான் செய்த மிகப் பெரிய தவறு. ஒரு தலைவனாக எனது கடமையில் இருந்து தவறிவிட்டேன். அதற்கான பொறுப்பையும் ஏற்றுக் கொண்டேன். எனக்கு தெரிந்து அவுஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்தியது அது தான் முதல் முறை. மற்ற அணிகள் பற்றி என்னால் எதுவும் கூற முடியாது. பந்து நன்றாக ஸ்விங் ஆக வேண்டும் என எல்லோருமே விரும்புவோம். அதற்காக எது செய்தாலும் விதிமுறைகளுக்குட்பட்டு இருக்க வேண்டும் என்பதை இப்போது உணர்ந்துவிட்டேன்.

எனது செயலால் ஏமாற்றம், கோபம் அடைந்துள்ள சக வீரர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் என அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் மன்னிக்க முடியாத குற்றத்தைச் செய்துள்ளேன். தற்போது நான் செய்த குற்றத்தின் தன்மை புரிகிறது. இது என்னுடைய தலைமைக்கான மிகப்பெரிய தோல்வி. ஒரு மனிதனாக நான் செய்த தவற்றில் இருந்து திருந்த முயன்று வருகிறேன்.

தடை நாட்கள் மிகவும் கடுமையாக இருந்தது. சில நாட்களில் எல்லாம் படுக்கையிலிருந்து வெளி வர முடியாத அளவுக்கு மன இறுக்கம் ஏற்பட்டது. ஆனால், என்னைச் சுற்றி இருந்தவர்கள் அந்த நெருக்கடியிலிருந்து வெளிவர உதவியாக இருந்தார்கள். தடை குறித்து மேல் முறையீடு செய்யும் எண்ணமில்லை. எனக்குத் தெரியும் நான் தவறு செய்துள்ளேன். அதை ஒப்புக்கொண்டு அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறேன். மக்களின் நம்பிக்கையையும் மரியாதையையும் பெறுவதற்காக தொடர்ந்து உழைத்து வருகிறேன்” என ஸ்மித் தெரிவித்தார்.

AFP/Getty Images

பெருமைக்குரிய வெற்றி

அவுஸ்திரேலிய அணி கடந்த சில போட்டிகளில் மோசமாக விளையாடியதை பார்க்க மிகவும் கடினமாக இருந்தது. அணிக்கு நம்மால் உதவி செய்ய முடியவில்லையே என்று நினைத்து வருந்தினேன். பெர்த் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணியினர் அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது பெருமைக்குரியதாகும். டிம் பெய்ன் அணியை சிறப்பாக வழி நடத்தினார். இக்கட்டான தருணங்களில் அவர் நேர்த்தியாக செயல்பட்டார்.

அகில தனன்ஞயவின் போட்டித் தடையும், இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலமும்

இலங்கையின் நட்சத்திர சுழற்பந்து…

தற்போது நான் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறேன். அவுஸ்திரேலிய அணிக்காக மீண்டும் விளையாட முடியும் என்று நம்புகிறேன். அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக்கிண்ணப் போட்டி மற்றும் ஆஷஸ் தொடரை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறேன். அந்த போட்டிக்கான அணியில் இடம் பிடிக்க முடியும் என்று நம்பிக்கை இருக்கிறது. அதேநேரத்தில் எதையும் உறுதியாக கூற முடியாது. வாய்ப்பு கிடைத்தால் அவுஸ்திரேலிய அணியின் வெற்றிக்காக கடுமையாக உழைப்பேன் என அவர் கூறினார்.

இது இவ்வாறிருக்க, கெமரூன் பேங்கிராப்ட்டுக்கு விதிக்கப்பட்ட தடை எதிர்வரும் டிசம்பர் 29ஆம் திகதியுடன் முடிவடையும் நிலையில், அவர், தற்போது ஆரம்பமாகியுள்ள பிக் பேஷ் டி20 போட்டித் தொடரில் களமிறங்கத் தயாராகி வருகிறார். ஸ்மித், வோர்னர் இருவரும் பங்களாதேஷ் பீரிமியர் லீக், பாகிஸ்தான் சுப்பர் லீக் மற்றும் ஐ.பி.எல் டி20 தொடரில் விளையாடும் வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<