இலங்கை ரக்பி கால்பந்து சங்கத்தின் (SLRFU) பெயர் இலங்கை ரக்பி (SLR) என மாற்றம்

247
SLRFU

இலங்கை ரக்பி கால்பந்து சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் நேற்று மாலை கொழும்பு நீச்சல் கழக வளாகத்தில் நடைபெற்றது.

உலகின் பல முன்னணி ரக்பி வாரியங்கள் தங்களது பெயர்களை மாற்றியதனைத் தொடர்ந்து, இலங்கை ரக்பி கால்பந்து சங்கமும் (SLRFU) இதன் பின்னர் இலங்கை ரக்பி (SLR) என்று அழைக்கப்படும் என சங்கத்தின் தலைவர் திரு. அசங்க செனவிரத்ன அறிவித்தார்.

சர்வதேச ரக்பி வாரியம் (IRB) உலக ரக்பி (World Rugby) எனவும், ஆசிய ரக்பி கால்பந்து சங்கம் (ARFU) ஆசிய ரக்பி (Asia Rugby) எனவும் அண்மைக்காலத்தில் தனது பெயரை மாற்றம் செய்து கொண்டன. அத்துடன் அவுஸ்திரேலிய, இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து நாட்டு சங்கங்களும் தங்களது பெயர்களிலிருந்து ‘கால்பந்து சங்கம்’ என்ற சொற்றோடரை நீக்கியிருந்தன.

இப்பெயர் மாற்றமானது நிதி அனுசரணைகளில் தாக்கம் செலுத்தும் என தான் எதிர்பார்ப்பதாக திரு. செனவிரத்ன தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“எம்மிடம் மகளிர் அணியொன்று இல்லாதிருந்தால் எம்மால் ஒலிம்பிக் தகுதிகாண் போட்டிகளில் பங்கேற்றிருக்க முடியாது. ஆடவர் மற்றும் மகளிர் அணிகளை கொண்டிருந்தால் மட்டுமே ஒலிம்பிக் தகுதிகாண் போட்டிகளில் கலந்து கொள்ள முடியும்.

எனவே, இலங்கையில் மகளிர் ரக்பியை அபிவிருத்தி செய்வதில் நாம் அக்கறை செலுத்தாவிட்டால் உலக ரக்பி மற்றும் ஆசிய ரக்பி சங்கங்களினால் எமது உறுப்பினர் தகுதியை ரத்து செய்யும் நிலை உருவாகலாம். இதன் காரணமாக, அடுத்த ஆண்டிற்கான வர்த்தக சங்கங்களுக்கிடையிலான ரக்பி தொடர் மற்றும் 7 பேரைக் கொண்ட டயலொக் சுப்பர் ரக்பி தொடர்களில் மகளிருக்கான போட்டிகளையும் நடாத்த ஆலோசனை செய்யப்பட்டு வருகின்றது.” என்றார்.

இலங்கை ரக்பியின் உயர் செயல்திறன் நெறியாளராக திரு. இன்தி மரிக்கார் அவர்களை நியமித்தமையானது, இளம் வீரர்கள் சிறப்பான திறமையை வெளிக்காட்ட ஏதுவாக அமைந்ததாக அவர் குறிப்பிட்டார். பாடசாலை மட்டத்தில் ரக்பி விளையாட்டு முன்னேற்றம் அடைந்து வருகின்ற நிலையில், “இலங்கையை ஆசிய ரக்பியின் பிஜியாக” உருவாக்குவதே தமது எதிர்பார்ப்பு என்றும் அவர் தெரிவித்தார்.

பயிற்சியாளர் திரு. நிக் குரூப் உடன் இணைந்து ரக்பி வீரர்களுக்கு முன்னேற்றகரமான செயல்திறன் விருத்தி முறையொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில், “இவர்கள் இத்துறையில் அனுபவம் மற்றும் சிறந்த அறிவை உடையவர்கள். அத்துடன் விளையாட்டின் மீது அக்கறையும் ஆர்வமும் கொண்டவர்கள்” என்றார்.

அத்துடன் திரு. Y. C. சாங் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட அபிவிருத்தி செயற்றிட்டங்களினால் இலங்கை ரக்பி சரியான பாதை நோக்கி செல்வதையும் அவர் நினைவு கூறினார்.

இலங்கை ரக்பியின் தலைமை நிர்வாக அதிகாரியாக திரு. பிரியந்த ஏக்கநாயக்க பொறுப்பேற்கவுள்ளதோடு, நிர்வாகக் குழுவின் ஒரே மாற்றமாக சங்கத்தின் பொருளாளர் பதவிக்கு திரு. மொஹமட் ரியாஸ் இற்கு பதிலாக திரு. ரே அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

  • தலைவர் – திரு. அசங்க செனவிரத்ன
  • உப தலைவர் – திரு. லசித்த குணரத்ன
  • செயலாளர் – திரு. நஸீம் மொஹமட்
  • பொருளாளர் – திரு. ரே அபேவர்தன
  • நிர்வாக இயக்குனர் – திரு. ரொஹான் குணரத்ன

தெரிவு செய்யப்பட்ட குழு உறுப்பினர்கள்

  • திரு. துவான் டோல்
  • திரு. ரொஷான் டீன்
  • திரு. பஸால் மொஹமட்
  • திரு. ஜூட் பிள்ளை
  • திரு. ஷம்ரத் பெர்னாண்டோ
  • திரு. டெட் முத்தையா
  • பிரிகேடியர். சுனில் ரணசிங்க

அறங்காவலர்கள்

  • திரு. மலிக் சமரவிக்ரம
  • திரு. ஹேமக அமரசூரிய
  • திரு. Y.C. சாங்