சுபர் – 4 மகளிர் தொடரின் சம்பியனாக நாமம் சூடிய கண்டி அணி

86

இலங்கை கிரிக்கெட் சபையினால் முதல்தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட, 23 வயதின் கீழான மகளிர் அணிகளுக்கிடையிலான மாகாண ரீதியிலான “ சுபர் – 4 “ கிரிக்கெட் தொடரின் இறுதி நாளுக்கான போட்டிகள் இரண்டும் இன்று (05) நிறைவடைந்தன.  

நாள் ஒன்றுக்கு நான்கு இன்னிங்ஸ்கள் வைத்து நடாத்தப்படும் இந்தப் போட்டித் தொடரில் கண்டி, காலி, தம்புள்ளை மற்றும் கொழும்பு ஆகிய மாகாண மகளிர் அணிகள் பங்குபற்றியிருந்தன.

கொழும்பு எதிர் கண்டி

பண்டாரகம பொது மைதானத்தில் முடிவடைந்த கொழும்பு மற்றும் கண்டி மகளிருக்கு இடையிலான இப்போட்டியில் கண்டி அணிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி கிடைத்திருக்கின்றது.

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய கொழும்பு மகளிர் அணி 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து முதல் இன்னிங்சில்  117 ஓட்டங்களினைப் பெற்றுக் கொண்டது.

பாகிஸ்தானுடனான T20 தொடரிலும் இலங்கை மகளிர் அணிக்கு தோல்வி

இலங்கை மகளிர் அணியுடனான மூன்றாவதும் கடைசியுமான T20 போட்டியிலும் 38 ஓட்டங்களால் வெற்றியீட்டிய பாகிஸ்தான் மகளிர் அணி இரு அணிகளுக்கும் இடையிலான T20 தொடரை 2-1 என கைப்பற்றியது.

கொழும்பு அணி சார்பாக அணித்தலைவி ஹாசினி பெரேரா 27 ஓட்டங்கள் சேர்த்திருக்க, கண்டி பந்துவீச்சு சார்பில் அணித்தலைவி மல்ஷா ஷெஹானியும், உமேஷா திமேஷானியும் தலா 4 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

இதனையடுத்து, தம்முடைய முதல் இன்னிங்சினை ஆரம்பித்த கண்டி அணி 41 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து 141 ஓட்டங்களினைப் பெற்றிருந்த போது, இன்றைய நாளுக்கான ஆட்ட நேரம் முடிவடைய போட்டி சமநிலை அடைந்தது. எனினும், முதல் இன்னிங்ஸ் புள்ளிகள் அடிப்படையில் கண்டி அணியினர் போட்டியில் வெற்றியினை சுவீகரித்துக் கொண்டனர்.

கண்டி மகளிர் அணி சார்பான துடுப்பாட்டத்தில் அணித்தலைவி மல்ஷா ஷெஹானி ஆட்டமிழக்காது 48 ஓட்டங்களினைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

கொழும்பு – 117 (49.1) ஹாசினி பெரேரா 27, தரக்க செவ்வந்தி 23, மல்ஷா ஷெஹானி 4/29, உமேஷா திமேஷானி 4/36

கண்டி – 141/6 (41) மல்ஷா ஷெஹானி 48*,

முடிவு – ஆட்டம் சமநிலை அடைந்தது. (கண்டி மகளிர் அணி முதல் இன்னிங்ஸ் வெற்றி)  

தம்புள்ளை எதிர் காலி

ஹொரனையில் முடிவடைந்த காலி மகளிர் அணி மற்றும் தம்புள்ளை மகளிர் அணிகள் இடையிலான இந்தப் போட்டியில் காலி மகளிர் அணி முதல் இன்னிங்ஸ் வெற்றியினை சுவைத்தது.

ஆட்டத்தின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய தம்புள்ளை மகளிர் அணியினர் முதல் இன்னிங்சில் 87 ஓட்டங்களுக்குள்ளேயே சுருண்டனர். தம்புள்ளை அணி சார்பாக அதிகபட்ச ஓட்டங்களை (19) சஷினி பெர்ணாந்து பெற, காலி அணியின் பந்து வீச்சில் சத்ய சந்தீப்பணி 4 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்தார்.

இதனையடுத்து தமது முதல் இன்னிங்சினை ஆரம்பித்த காலி அணியும் துடுப்பாட்டத்தில் தடுமாறி, 88 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்த போது ஆட்டத்தின் முடிவு நேரம் வர போட்டி சமநிலை எட்டியது. எனினும், முதல் இன்னிங்ஸ் அடிப்படையில் காலி அணி போட்டியின் வெற்றியாளர்களாக மாறியது.

கொழும்பு (முதல் இன்னிங்ஸ்)  – 87 (49.1) சஷினி பெர்ணாந்து 19, சத்ய சந்தீப்பணி 4/24, கவீஷா தில்ஹாரி 3/19

காலி (முதல் இன்னிங்ஸ்) – 88/9 (47)

முடிவு – போட்டி சமநிலை அடைந்தது. (காலி அணி முதல் இன்னிங்ஸ் வெற்றி)

இத்தொடரில் ஏற்கனவே இடம்பெற்ற போட்டிகளின் முடிவுகளின் அடிப்படையில் 23 வயதின் கீழ்ப்பட்ட மகளிர் அணிகளுக்கிடையிலான மாகாண தொடரின் வெற்றியாளர்களாக மல்ஷா ஷெஹானி தலைமையிலான கண்டி அணி நாமம் சூடிக் கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.