23 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான கிரிக்கட் கிண்ணம் சிலாபம் மேரியன்ஸ் அணிக்கு

193
Chilaw Marians CC

ராஜீக தில்ஷானின் அற்புதப் பந்து வீச்சாலும், கசுன் விதுரவின் அட்டகாச துடுப்பெடுத்தாட்டத்தினாலும் இராணுவ அணியை 5 விக்கட்டுகளால் வெற்றிகொண்டு, 23 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான பிரிவு 1 கிரிக்கட் கிண்ணத்தை சிலாபம் மேரியன்ஸ் அணி கைப்பற்றியது.

எஸ் எஸ் சி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிலாபம் மேரியன்ஸ் அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தது. இராணுவ அணிக்காக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள்  86 ஓட்டங்களை இணைப்பாகக் குவித்து ஒரு சிறந்த ஆரம்பத்தைப் பெற்றுக் கொடுத்தனர். முதலாவது விக்கட்டாக அஷான் ரந்திக 46 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து ஹிமாச லியனகே 29 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க இராணுவ அணி 20.2 ஓவர்களில் 2 விக்கட்டுகளை  இழந்து 130 ஓட்டங்களைப் பெற்றுக் காணப்பட்டது.

இரண்டாவது விக்கட்டை இழந்த பின்பு நிலைத்து நின்று ஆடத் தவறிய துடுப்பாட்ட வீரர்கள் சக வீரர்களோடு ஒரு சிறந்த இணைப்பாட்டத்தைப் பேண  முடியாமல் தடுமாறினார். நடு வரிசைத் துடுப்பாட்ட வீரர்கள் தமது கடமையை சரிவர நிறைவேற்றத் தவறியமையால் 30 ஓவர்களில் 5 விக்கட்டுகளை 165 ஓட்டங்களுக்கு இழந்தது. தொடர்ந்து வந்த துடுப்பாட்ட வீரர்களும் பிரகாசிக்கத் தவற இறுதியில் 37.2 ஓவர்களில் 191 ஓட்டங்களுக்கு இராணுவ அணி சகல விக்கட்டுகளையும் இழந்தது.

சிலாபம் அணி சார்பாக ராஜிக டில்ஷான் சிறப்பாகப் பந்து வீசி வெறும் 30 ஓட்டங்களுக்கு 6 விக்கட்டுகளைக் கைப்பற்றி முதல் இனிங்ஸின் நாயகனானார். இராணுவ அணி சார்பாக லியோ பிரான்ஸிஸ்கொ 63 ஓட்டங்களைப் பெற்று இராணுவ அணியைத் தாங்கினார்.

192 ஓட்டங்கள் எனும் இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாட வந்த மேரியன்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக துடுப்பெடுத்தாடி முதல் விக்கட்டுக்காக 94 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். ருக்ஷான் பெர்னாண்டோ 48 ஓட்டங்களைப் பெற்று இருந்த நிலையில் முதலாவதாக ஆட்டமிழந்தார். தொடர்ந்து 3 விக்கட்டுகள் வெறும் 8 ஓட்டங்களுக்குள் கைப்பற்றப்பட மேரியன்ஸ் அணி சற்றுத் தடுப்பாட்டத்திற்கு உள்ளானது. எனினும் கசுன் விதுர மேரியன்ஸ் அணியை தாங்கிப் பிடித்து வெற்றிக்கு வழி அமைத்துக் கொடுத்தார்.

கசுன் விதுர சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி 111 பந்துகளில் 94 ஓட்டங்களைப் பெற்றார். விதுர 9 பவுண்டரிகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 3 விக்கட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் காணப்பட்ட மேரியன்ஸ் அணியை  தனி மனிதனாகத் தாங்கி பிடித்து வெற்றியின்பால் அழைத்து சென்ற பெருமை விதுரவையே சாறும்.  மல்க மதுஷங்க 2 விக்கட்டுகளைக் கைப்பற்றிய பொழுதும் அவரால் இராணுவ அணியை வெற்றியின் பக்கம் அழைத்துச் செல்ல முடியவில்லை.

இறுதியில் மேரியன்ஸ் அணி 37.3 ஓவர்களில் 5 விக்கட்டுகளை மட்டும் இழந்து 196 ஓட்டங்களைப்பெற்று 5 விக்கட்டுகளால் வெற்றியீட்டிக் கிண்ணத்தை சுவீகரித்தது.

போட்டியின் சுருக்கம்

இராணுவ அணி 191 (37.2) – லியோ பிரான்ஸிஸ்கொ 63, அஷான் ரந்திக 46,ஹிமாஷ லியனகே 29
ராஜிக டில்ஷான் 6/30 , சலன டி சில்வா 1/30

சிலாபம் மேரியன்ஸ் அணி 196/5 – கசுன் விதுர 94*, ருக்ஷான் பெர்னாண்டோ 48, மல்க மதுஷங்க 2/43, யொஹான் டி சில்வா 1/40