இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் ஏற்பாட்டில் மாகாண ரீதியிலான 19 வயதுக்கு உட்பட்ட கனிஷ்ட அணிகள் பங்குகொள்ளும் ஒரு நாள் கிரிக்கெட்  தொடரின் நான்கு போட்டிகள் இன்று நிறைவடைந்துள்ளன.

மேல் மாகாணம் (தெற்கு) எதிர் மத்திய மாகாணம்

NCC மைதானத்தில் இடம்பெற்றிருந்த இப்போட்டியில், சிறப்பான பந்து வீச்சினை வெளிக்காட்டியிருந்த மேல் மாகாண தெற்கு கனிஷ்ட அணியினர் 120 ஓட்டங்களால் அபார வெற்றியினைப் பெற்றுக்கொண்டனர்.

முதலில் துடுப்பாடியிருந்த மேல் மாகாண தெற்குப் பிராந்திய அணியினர் நுவனிது பெர்னாந்து (68) மற்றும் நிப்புன் தேஷான் (66) ஆகியோரின் அரைச்சதங்களுடன் 203 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர்.

சவால் குறைந்த வெற்றி இலக்கினை பெறுவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய மத்திய மாகாண கனிஷ்ட அணியினர் தாஷிக் பெரேராவின் அபார பந்து வீச்சினால் வெறும் 83 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு மேல் மாகாண தெற்கு கனிஷ்ட அணியிடம் 120 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தனர்.

தாஷிக் பெரேரா 40 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார்.

போட்டியின் சுருக்கம்

மேல் மாகாணம் (தெற்கு) – 203 (48.4) – நுவனிது பெர்னாந்து 68, நிப்புன் தேஷான் 66, ஜனிது ஹிம்சார 2/12, நிம்சார அத்தரகல்ல 2/50

மத்திய மாகாணம் – 83 (26.4) – தாஷிக் பெரேரா 5/40, நுவனிது பெர்னாந்து 2/03

போட்டி முடிவு – மேல் மாகாண தெற்கு அணி 120 ஓட்டங்களால் வெற்றி.


வட மத்திய மாகாணம் எதிர் மேல் மாகாணம் (வடக்கு)

சோனகர் மைதானத்தில் நடைபெற்றிருந்த இப்போட்டியில், 7 விக்கெட்டுகளால் இலகு வெற்றியை மேல் மாகாண வடக்கு அணியினர் சுவீகரித்துக் கொண்டனர்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய வட மத்திய மாகாண கனிஷ்ட அணியினர் எதிரணியின் சவாலான பந்து வீச்சினால் 145 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தனர்.

இதில் மஹேஷ் தீக்ஷன 24 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் அசெல் சிகெரா 3 விக்கெட்டுகளையும் சாமிக குணசேகர 2 விக்கெட்டுகளையும் மேல் மாகாண வடக்கு அணி சார்பாக கைப்பற்றியிருந்தனர்.

தொடர்ந்து வெற்றி இலக்கினை தொடுவதற்கு களமிறங்கிய மேல் மாகாண வடக்கு அணி, அஷான் பெர்னாந்து ஆட்டமிழக்காது பெற்றுக்கொண்ட அபார அரைச்சதத்துடன் (84) வெற்றி இலக்கை இலகுவாக அடைந்துகொண்டது.

போட்டியின் சுருக்கம்

வட மத்திய மாகாணம் – 145 (42.3) – கவிந்து மதரசிங்க 32, விஹான் குணசேகர 25, மஹேஸ் தீக்ஷன 4/24, அசெல் சிகெரா 3/21

மேல் மாகாணம் (வடக்கு) – 147/3 (24) – அஷான் பெர்னாந்து 84*, மொஹமட் சமாஷ் 27

போட்டி முடிவு – மேல் மாகாண வடக்கு அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி.


ஊவா மாகணம் எதிர் வட மாகாணம்

வெலிசரை கடற்படை மைதானத்தில் தொடங்கியிருந்த இப்போட்டியில் வட மாகாண கனிஷ்ட அணி 8 விக்கெட்டுகளால் ஊவா மாகாண கனிஷ்ட அணியை வீழ்த்தி தொடரில் தமது முதல் வெற்றியைப் பதித்தனர்.

நாணய சுழற்சியை வென்று முதலில் துடுப்பாடியிருந்த ஊவா மாகாண அணியினர் G. ரதீஷன் மற்றும் V. ஜதுஷன் ஆகியோரின் அபார பந்து வீச்சினால், 134 ஓட்டங்களுக்கு சுருண்டு கொண்டனர்.

ரதீஷன் 32 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் ஜதுஷன் 3 விக்கெட்டுகளையும் வட மாகாண அணி சார்பாக சாய்த்திருந்தனர்.

பதிலுக்கு வெற்றி இலக்கினை பெறுவதற்கு மைதானம் விரைந்த வட மாகாண அணி, உமேஷ் லக்ஷானின் அபார அரைச்சதத்துடன் 26.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கினை அடைந்தனர்.

போட்டியின் சுருக்கம்

ஊவா மாகாணம் – 134 (47.4) – சஷிக துல்ஷான் 39, G. ரதீஷன் 4/32, V. ஜதுஷன் 3/17

வட மாகாணம் – 135/2 (26.2) – உமேஷ் லக்‌ஷான் 77*, I.D. அஸ்மிக்க 30

போட்டி முடிவு – வட மாகாணம் 8 விக்கெட்டுகளால் வெற்றி.


கிழக்கு மாகணம் எதிர் மேல் மாகாணம் (மத்திய)

CCC மைதானத்தில் இன்று முடிவடைந்த இப்போட்டியில், 7 விக்கெட்டுகளால் கிழக்கு மாகாண கனிஷ்ட அணியை வீழ்த்தி மேல் மாகாண மத்தியப் பிராந்திய அணியினர் இலகு வெற்றியைப் பெற்றுக்கொண்டனர்.

முதலில் துடுப்பாட்டத்தினை மேற்கொண்டிருந்த கிழக்கு மாகாண கனிஷ்ட அணியினர் 40.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 120 ஓட்டங்களை மாத்திரமே குவித்திருந்தனர்.

அபார பந்து வீச்சினை வெளிக்காட்டிய விமுக்தி குலத்துங்க 26 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுகளை மேல் மாகாண மத்திய பிராந்திய அணிக்காகப் பெற்றிருந்தார்.

பதிலுக்கு துடுப்பாடிய, மேல் மாகாண மத்திய அணியினர் சந்துஷ் குணத்திலக்க ஆட்டமிழப்பின்றி பெற்றுக்கொண்ட அரைச்சதத்துடன் (53), 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 123 ஓட்டங்களைக் குவித்து போட்டியின் வெற்றியாளர்களாகப் பதிவு செய்தனர்.

போட்டியின் சுருக்கம்

கிழக்கு மாகாணம் – 120 (40.4) – உஷான் இமன்த 22, விமுக்தி குலதுங்க 4/26, சவன் பிரபாஷ் 2/14

மேல் மாகாணம் (மத்திய) – 123/3 (27.2) – சந்துஷ் குணதிலக்க 53*, இரங்க ஹஷான் 48*, உஷான் இமன்த 2/13

போட்டி முடிவு – மேல் மாகாண மத்திய அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி.