உள்ளுர் T20 போட்டிகளில் கலக்கும் மாலிங்க; NCC, CCC அணிகள் இறுதிப் போட்டியில்

401

இலங்கை உள்ளூர் T20 தொடரின் இறுதிப் போட்டிக்கு கொழும்பு கிரிக்கெட் கழகம் (CCC) மற்றும் NCC அணிகள் தகுதி பெற்றுள்ளன. இலங்கை கிரிக்கெட் சபை (SLC) நடாத்தும் 2017/18 ஆம் ஆண்டின் உள்ளூர் பருவத்திற்கான T20 தொடரின் அரையிறுதிப் போட்டிகள் இன்று (07) நடைபெற்றன.    

NCC எதிர் இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழம்

இலங்கையின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க மீண்டும் ஒருமுறை தனது அதிரடி பந்துவீச்சை வெளிப்படுத்தியதன் மூலம் இராணுவப் படை விளையாட்டுக் கழகத்தை 6 விக்கெட்டுகளால் வீழ்த்தி NCC அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

கொழும்பு பி சரா ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இராணுவப்படை விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. எனினும் அந்த அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து பறிபோனதால் சவாலான ஓட்டங்களை பெறுவதற்கு தவறியது.

குறிப்பாக லசித் மாலிங்க வீசிய மூன்றாவது ஓவரில் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டது இராணுவப்படை அணிக்கு பெரும் பின்னடைவாக இருந்தது. இறுதியில் இராணுவப்படை விளையாட்டுக் கழம் 17.1 ஓவர்களில் 102 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இலங்கை உள்ளூர் T-20 தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெற்ற அணிகள்

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) நடாத்தும் 2017/18 ஆம் ஆண்டின் உள்ளூர் பருவத்திற்கான T-20 தொடரின்…

அபாரமாக பந்துவீசிய மாலிங்க 3.1 ஓவர்களில் 14 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். இதன் மூலம் அவர் இம்முறை உள்ளூர் கிரிக்கெட் தொடரில் மொத்தம் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை சாய்த்த வீரர்கள் வரிசையில் சக அணி வீரர் சதுரங்க டி சில்வாவுடன் முதலிடத்திற்கு முன்னேறினார்.

கடந்த ஆண்டு உள்ளூர் T20 தொடரில் மாலிங்க ஒரு ஹெட்ரிக் சாதனையுடன் 12 விக்கெட்டுகளையே வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் எட்ட முடியுமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய NCC அணிக்கு இலங்கை T20 அணியில் இடம்பெறத் தவறிய நிரோஷன் தக்வெல்ல 19 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 27 ஓட்டங்களை பெற்றதோடு லஹிரு உதாரவும் அதிகபட்சமாக 27 ஓட்டங்களை பெற்றார்.

இறுதியில் NCC அணி 14.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 108 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகம் – 102 (17.1) – ஹிமாஷ லியனகெ 23, லசித் மாலிங்க 3/14, சச்சிந்த பீரிஸ் 2/18

NCC – 108/4 (14.2) – நிரோஷன் திக்வெல்ல 27, லஹிரு உதார 27, பனுக்க ராஜபக்ஷ 25

முடிவு NCC அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி


கொழும்பு கிரிக்கெட் கழகம் (CCC) எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம்

வனிந்து ஹசரங்கவின் அபார துடுப்பாட்டத்தின் மூலம் தமிழ் யூனியன் அணியுடனான அரையிறுதிப் போட்டியில் கொழும்பு கிரிக்கெட் கழகம் 42 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

முதல் அரையிறுதிப் போட்டியாக இன்று காலை கொழும்பு பி சரா ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட கொழும்பு கிரிக்கெட் கழகம் 27 ஓட்டங்களுக்கு முதல் மூன்று விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

எனினும் நான்காவது விக்கெட்டுக்கு இணைந்த ஹசரங்க மற்றும் மாதவ வர்ணபுர 52 பந்துகளுக்கு 72 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர்.

வர்ணபுர 35 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தபோதும் மறுமுனையில் வனிந்து ஹசரங்க வேகமாக துடுப்பெடுத்தாடி அணியின் ஓட்டங்களை அதிகரிக்க உதவினார். 41 பந்துகளுக்கு முகம்கொடுத்த ஹசரங்க 7 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 74 ஓட்டங்களை பெற்றார்.

மத்திய வரிசை சிறப்பாக இல்லாதபோதும் வெற்றி நம்பிக்கைதருகிறது – குசல் பெரேரா

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் குசல் ஜனித் பெரேராவின் வாய்ப்புகள் மட்டுப்படுத்தப்பட்டதற்கு…

இதன் மூலம் கொழும்பு கிரிக்கெட் கழகம் 20 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து 173 ஓட்டங்ளை பெற்றது.

இந்நிலையில் சவாலான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பாடக் clகளமிறங்கிய தமிழ் யூனியன் கழகம் வேகமாக அடித்தாட முயன்று விரைவாகவே விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. முதல் வரிசையில் வந்த மனோஜ் சரச்சந்திர (35) மற்றும் அணித்தலைவர் கித்ருவன் விதானகே (26) வெற்றிக்காக போராடியபோதும் கொழும்பு கிரிக்கெட் கழக பந்துவீச்சாளர்கள் அவர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்தினர்.

இடதுகை சுழல் பந்து வீச்சாளரான சச்சித் பதிரண தனது நான்கு ஓவர்களுக்கும் 17 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் தமிழ் யூனியன் அணி 18.2 ஓவர்களில் 131 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை சந்தித்தது.

இதன்படி இலங்கையின் பிரதான உள்ளூர் T20 போட்டியின் இறுதி ஆட்டத்தில் கொழும்பு கிரிக்கெட் கழகம், NCC அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இந்த போட்டி நாளை பிற்பகல் 2 மணிக்கு கொழும்பு பி சரா ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 173/6 (20) – வனிந்து ஹசரங்க 74, மாதவ வர்ணபுர 35, லஹிரு மதுஷங்க 24, பினுர பெர்னாண்டோ 2/15, பிரமோத் மதுஷங்க 2/39

தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் – 131 (18.2) – மனோஜ் சரத்சந்திர 35, கித்ருவன் விதானகே 26, சச்சித் பதிரண 4/17, நுவன் துஷார 2/28

முடிவு கொழும்பு கிரிக்கெட் கழகம் 42 ஓட்டங்களால் வெற்றி