இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் ஏற்பாட்டில் 19 வயதுக்கு உட்பட்ட கனிஷ்ட அணிகள் பங்குகொள்ளும் மாகாண ரீதியிலான ஒரு நாள் கிரிக்கெட்  போட்டிகளில், இரண்டு குழுக்களிலிருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பெற்றுக்கொண்ட அணிகள் அரையிறுதிப் போட்டிகளுக்குத் தெரிவாகின. அந்த வகையில், இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ரவிஷ்க விஜேசிறியின் அதிரடி ஆட்டத்தின் மூலம் தென் மாகாண அணி டக்வத் லூயிஸ் முறைப்படி 42 ஒட்டங்களால் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது.

ஏற்கனவே முதலாவது அரையிறுதிப் போட்டியில் மேல் மாகாண தெற்கு அணி வெற்றியீட்டி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள நிலையில், இறுதிப் போட்டிக்கு அவ்வணியுடன் மோதும் மற்றைய அணியை தீர்மானிக்கும் இரண்டாவது அரையிறுதி போட்டி, இன்றைய தினம் கொழும்பு கோல்ட்ஸ் மைதானத்தில் தென் மாகாணம் மற்றும் வட மேல் மாகாண அணிகளுக்கிடையே நடைபெற்றது.  

இறுதிப் போட்டிக்குத் தெரிவான மேல் மாகாண தெற்கு அணி

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென் மாகாணம் துடுப்பாட்டத்துக்கு உகந்த இந்த மைதானத்தில், முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அந்த வகையில் முதலில் துடுப்பாடக் களமிறங்கிய தென் மாகாண அணி முதலாவது விக்கெட்டுக்காக 54 ஓட்டங்களைப் பெற்று சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொண்டது.

எனினும், முதலாவது விக்கெட்டாக ஹன்சிக வெலிஹிந்த 18 ஓட்டங்களை பெற்றிருந்த போது துரதிஷ்டவசமாக ரந்தீர ரணசிங்கவின் அதிரடி பந்து வீச்சில் நேரடியாக போல்ட் முறையில் ஆட்டமிழந்து சென்றார்.  

தொடர்ந்து அதிரடி துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய தனஞ்சய லக்க்ஷான் 31 பந்துகளை எதிர் கொண்டு 6 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உள்ளடங்கலாக 38 ஓட்டங்களை வேகாமாக பெற்றுக்கொண்ட நிலையில், நிபுன் தனஞ்சயவின் பந்து வீச்சில் LBW முறையில் ஆட்டமிழந்து ஓய்வறை திரும்பினார்.

அதனையடுத்து, களமிறங்கிய திமுத் சந்தருவன், ரவீந்து சஞ்சன மற்றும் சசித் மதுரங்க ஆகியோர் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, தென் மாகாண அணி சற்று தடுமாறிய நிலையில், 6ஆவது விக்கெட்டுக்காக இணைந்து கொண்ட ரவின் யசஸ் மற்றும் ரவிஷ்க விஜேசிறி ஆகியோர் இணைந்து அணியை வலுப்படுத்தி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.

அந்த வகையில், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரவின் யசஸ் 91 பந்துகளை எதிர் கொண்டு 2 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 42 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதோடு மறு முனையில் அதிரடியாக துடுப்பாடிய ரவிஷ்க விஜேசிறி அரைச்சதம் கடந்தார்.

வேகமாக ஓட்டங்களைக் குவித்த ரவிஷ்க விஜேசிறி 6 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 67 பந்துகளுக்கு 78 ஓட்டங்களை விளாசினார். அதனையடுத்து இறுதி ஓவர்களில் களமிறங்கிய பின்வரிசை வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த போதிலும், அதிரடி துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய அவிந்து தீக்‌ஷன 27 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 40 ஓட்டங்களை விளாசினார்.

மாகாணங்களுக்கு இடையிலான தொடரில் அசத்திய வீரர்கள் யார்?

இறுதியில், 49.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 260 ஓட்டங்களை தென் மாகாண அணி பெற்றுக்கொண்டது. வட மேல் மாகாண அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய ரந்தீர ரணசிங்க 46 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் நிபுன் தனஞ்சய 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அதனையடுத்து வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடக் களமிறங்கிய வட மேல் மாகாண அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. ஆரம்ப விக்கெட் வெறும் இரண்டு ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்ட நிலையில் வீழ்த்தப்பட்டது. அதனையடுத்து அவ்வணி தொடர்ந்தும் விக்கெட்டுகளை சீரான இடைவெளிகளில் பறிகொடுத்தது.

எனினும், ஐந்தாவது விக்கெட்டுக்காக இணைந்து கொண்ட துலாஜ் ரணதுங்க மற்றும் நிபுன் தனஞ்சய ஆகியோர் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுக்க முயற்சி செய்தனர். அந்த வகையில் சிறப்பாக துடுப்பாடிய நிபுன் தனஞ்சய 45 ஓட்டங்களுக்கும் துலாஜ் ரணதுங்க 38 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்தனர்.  

இலங்கை கிரிக்கெட் செயற்குழுவிலிருந்து அரவிந்த டீ சில்வா விலகல்

அதனை தொடர்ந்து 44ஆவது ஓவரின் போது 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ஓட்டங்களை பெற்ற நிலையில் சீரற்ற காலநிலை காரணமாக போட்டி இடைநிறுத்தப்பட்டது. தொடர்ந்தும் போட்டிக்கு உகந்த காலநிலை இல்லாததால் டக்வத் லூயிஸ் முறைப்படி 42 ஒட்டங்களால் தென் மாகாணம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதன்படி, தென் மாகாணம் மற்றும் மேல் மாகாண தெற்கு அணிகள் இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.

போட்டியின் சுருக்கம்

தென் மாகாணம் – 260 (49.5) – ரவிஷ்க விஜேசிறி 78, ரவின் யசஸ் 42, அவிந்து தீக்ஷன 40, தனஞ்சய லக்ஷான் 38, ஹன்சிக வெலிஹிந்த 18, ரந்தீர ரணசிங்க 3/46, நிபுன் தனஞ்சய 2/40

வட மேல் மாகாணம் – 207/9 (44) – நிபுன் தனஞ்சய 45, துலாஜ் ரணதுங்க 38, வணித வன்னிநாயக்க 32, சமித்த டில்ஷான் 24, ரந்தீர ரணசிங்க 22*, திசர டில்ஷான் 2/21, ரவிஷ்க விஜேயசிறி 2/22

முடிவு – தென் மாகாணம் 42 ஓட்டங்களால் வெற்றி (டக்வத் லூயிஸ் முறை)

Highlights - SLC U19 Provincial Limited Over Tournament - 2nd S/F