இலங்கை கிரிக்கெட் சபையின் அனுசரணையில், எதிர் வரும் சம்பியன் கிண்ண போட்டிகளை இலக்காக கொண்டு நடைபெற்று வருகின்ற மாகாண ரீதியிலான ஒருநாள் போட்டித் தொடரில் இன்றைய தினம் இரண்டு போட்டிகள் நடைபெற்றன.

காலி மற்றும் தம்புள்ளை அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான போட்டியில் தம்புள்ளை அணி ஒரு விக்கெட்டினாலும், கொழும்பு மற்றும் கண்டி அணிகளுக்கு இடையிலான போட்டியில் கொழும்பு அணி 106 ஓட்டங்களாலும் வெற்றியீட்டின.  

IPL இல் கிண்ணத்தை கைப்பற்றப் போகும் அணி எது? பிரபல ஜோதிடர் கணிப்பு

காலி எதிர் தம்புள்ளை

ரங்கிரி, தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்றைய தினம் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய காலி அணித் தலைவர் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.

அந்த வகையில் முதலில் களமிறங்கிய காலி அணிக்கு ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சதீர சமரவிக்ரம ஒரு ஓட்டத்துடன் வெளியேறி அதிர்ச்சியளித்தார். அத்துடன் அணித் தலைவர் உபுல் தரங்க 26 ஓட்டங்களை பெற்றிருந்த போது தில்ருவன் பெரேராவின் பந்து வீச்சில் நேரடியாக போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார்.

அத்துடன் நாளைய தினம் பிறந்த நாளைய கொண்டாடவுள்ள திமுத் கருணாரத்ன உள்ளடங்கலாக அதிரடி துடுப்பாட்ட வீரர் தனஞ்சய டி சில்வா மற்றும் மினோத் பாணுக்க ஆகியோரும் சொற்ப ஓட்டங்களுக்கு வெளியேறிய போது, 24.4 ஓவர்களில் மொத்தமாக 97 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து சொற்ப ஓட்டங்களுக்குள் சுருண்டு விடும் நெருக்கடியான சூழ்நிலையில் காலி அணி காணப்பட்டது.

எனினும், அதனையடுத்து, எட்டாவது விக்கெட்டுக்காக களமிறங்கிய அதிரடி துடுப்பாட்ட வீரர் சீக்குகே பிரசன்ன மற்றும் சதுரங்க டி சில்வா ஆகியோர் இணைந்து தொடர்ச்சியாக 15.1 ஓவர்கள் துடுப்பாடி தங்களுக்கிடையே 90 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக் கொண்ட அதேவேளை அணியை வலுவான நிலைக்கு எடுத்துச் சென்றனர். சதுரங்க டி சில்வா 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 56 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், லஹிறு குமாரவின் அபார பந்து வீச்சின் மூலம் நேரடியாக போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

அத்துடன் சற்று நேரத்துக்கு பின்னர் சீக்குகே பிரசான்னவும் மிலிந்த சிரிவர்தனவின் பந்துவீச்சில் LBW முறையில் ஆட்டமிழந்து சென்ற போதிலும், அவர்களை தொடர்ந்து இணைந்து கொண்ட சாமிக்க கருணாரத்ன மற்றும் சுரங்க லக்மால் ஆகியோர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியதோடு முறையே 24,33 ஓட்டங்களை குவித்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்த பங்களிப்பு செய்தனர்.

இறுதியில் காலி அணி குறித்த 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 250 ஓட்டங்களை பதிவு செய்தது. காலி அணி சார்பாக துடுப்பாட்டத்தில் சதுரங்க டி சில்வா 56 ஓட்டங்களையும் சீகுகே பிரசன்ன 46 ஓட்டங்களையும் குவித்தனர்.

தம்புள்ளை அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய மிலிந்த சிறிவர்தன, தில்ருவன் பெரேரா மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர் 251 என்ற வெற்றி இலக்குடன் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் உதார ஜெயசுந்தர ஆகியோர் தம்புள்ளை அணி சார்பாக சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்காக 58 ஓட்டங்களை பதிவு செய்தனர். எனினும் அவிஷ்க பெர்னாண்டோவின் ஆட்டமிழப்பின் பின்னர் அடுத்தடுத்து இரண்டு விக்கட்டுகள் வீழ்த்தப்பட்டமையினால் தம்புள்ளை அணி சற்று இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது.

அதனை அடுத்து சீரான இடைவெளிகளில் தம்புள்ளை அணி விக்கெட்டுகளை இழந்த போதிலும், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்ஷ குரே மற்றும் மிலிந்த சிறிவர்தன ஆகியோர் இணைந்து இணைப்பாட்டமாக 60 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டதோடு அணியை வலுவான நிலைக்கு எடுத்துச் சென்றனர். இறுதியில், அஷான் ப்ரியஞ்சன், தில்ருவன் பெரேரா மற்றும் நுவன் குலசேகர ஆகியோரின் ஓட்டங்களின் பங்களிப்பின் மூலம் தம்புள்ளை அணி வெற்றி இலக்கை இறுதிப் பந்தில் அடைந்தது.

இறுதி வரை விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், ஒரு விக்கெட்டினால் தம்புள்ளை அணி வெற்றியீட்டியது.

போட்டியின் சுருக்கம்

காலி அணி – 250/8 (50) – சதுரங்க டி சில்வா 56, சீக்குகே பிரசன்னா 46, சுரங்க லக்மால் 33*, உபுல் தரங்க 26, சாமிக்க கருணாரத்ன 24*, திமுத் கருணாரத்ன 24, மிலிந்த சிறிவர்தன 18/2, தில்ருவன் பெரேரா 28/2, லஹிரு குமார 52/2

தம்புள்ளை அணி – 251/9 (50) – ஹர்ஷ குரே 46, மிலிந்த சிறிவர்தன 39, உதார ஜயசுந்தர 33, அஷான் ப்ரியஞ்சன் 33, தில்ருவான் பெரேரா 29, குசல் மெண்டிஸ் 21, நுவன் குலசேகர 11, சாமிக்க கருணாரத்ன 23/2, சதுரங்க டி சில்வா 36/2, சீகுகே பிரசன்ன 46/2, மலிந்த புஷ்பகுமார 47/2

முடிவு – தம்புள்ளை அணி 1 விக்கெட்டினால் வெற்றி.

கொழும்பு எதிர் கண்டி

இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டி கொழும்பு NCC கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

அந்த வகையில், முதலில் துடுப்பாடக் களமிறங்கிய கொழும்பு அணி சார்பாக டில்ஷான் முனவீர மற்றும் லஹிரு திரிமான ஆகியோர் சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர். முதலாவது விக்கெட்டுக்காக 86 ஓட்டங்களை இணைப்பாட்டமாக தங்களுக்கிடையில் பகிர்ந்து கொண்ட நிலையில், டில்ஷான் முனவீர 55 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 52 ஓட்டங்களை பெற்றிருந்த போது சரித அசலங்காவின பந்து வீச்சில், ஹஷான் துமிந்தவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

அதனையடுத்து சொற்ப நேரத்திலேயே, லஹிரு திரிமான தூரதிஷ்டவசமாக 49 ஓட்டங்களுடன், ரமித் ரம்புக்வெல்லவின் பந்து வீச்சில் நேரடியாக போல்ட் முறையில் ஆட்டமிழந்து சென்றார். தொடர்ந்து களமிறங்கிய அணித் தலைவர் தினேஷ் சந்திமால் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓட்டங்களைப் பெற முயற்சித்தாலும், ஷெஹான் ஜயசூரிய ரன் அவுட் மூலமும் கித்ருவான் விதானகே அசலங்கவின் பந்து வீச்சில் அவரிடமே பிடிகொடுத்து ஆட்டமிழந்து சிறிய நேரத்திலேயே ஓய்வறை திரும்பினர்.

எனினும், தொடர்ந்து சிறப்பாக துடுப்பாடிய அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக அதிகபட்ச ஓட்டங்களாக 76 ஓட்டங்களை பதிவு செய்ததோடு அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார். அந்த வகையில் கொழும்பு அணி 50 ஓவர்கள் நிறைவில், 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 288 ஓட்டங்களை குவித்தது.

கொழும்பு அணி சார்பாக துடுப்பாட்டத்தில் தினேஷ் சந்திமால் 76 ஓட்டங்களையும், டில்ஷான் முனவீர 52 ஓட்டங்களையும், வனிது ஹசரங்க மற்றும் லஹிரு திரிமான ஆகியோர் தலா 49 ஓட்டங்களையும் குவித்தனர்.

பின்னர் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய கண்டி அணி 38 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 182 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 106 ஓட்டங்களால் தோல்வியுற்றது. அவ்வணி சார்பாக சச்சித் பத்திரன கூடிய ஓட்டங்களாக 46 ஓட்டங்களை பதிவு செய்த போதிலும் ஏனையோர் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.

கொழும்பு அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய வனிந்து ஹசரங்க மற்றும் சச்சிதர சேனாநாயக்க ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

போட்டியின் சுருக்கம்

கொழும்பு அணி – 288/8 (50) – தினேஷ் சந்திமால் 76, டில்ஷான் முனவீர 52, லஹிரு திரிமான 49, வனிது ஹசரங்க 49), சச்சித்ர சேனநாயக்க 18, நுவன் பிரதீப் 56/3, சரித் அசலாங்க 32/2, ரமித் ரம்புக்வெல 37/1

கண்டி அணி – 182 (38) – சச்சித் பத்திரன 46,  சந்துன் வீரக்கொடி 29, சாமர கப்புகெதர 36, ஹஷான் துமிந்து 10, வணிது ஹசரங்க 37/3, சச்சிதர சேனாநாயக்க 39/3, டில்ஷான் முனவீர 18/2

முடிவு – கொழும்பு அணி 106 ஓட்டங்களால் வெற்றி.