சுமதிபால மீதான குற்றச்சாட்டை நிராகரிக்கும் இலங்கை கிரிக்கெட்

333

இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் திலங்க சுமதிபால சூதாட்ட தொழிலில் ஈடுபட்டு வருதாக தொலைக்காட்சி, வலைத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்திகள் மற்றும் பிரசாரங்களை இலங்கை கிரிக்கெட் சபை கடுமையாக நிராகரித்துள்ளது. இந்த செய்திகள் அவதூறு மற்றும் தீய எண்ணம் கொண்டவை என்று இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி நெருக்கடியை சந்தித்திருக்கும் சூழலில் அதனை சாதகமாக வைத்து சிலர் இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் அதன் தலைவரை இலக்கு வைத்து பிரசாரங்களை முன்னெடுக்க முயற்சிப்பது தெளிவாகத் தெரிகிறது.

இலங்கை அணியை மீண்டும் கட்டி எழுப்புவதற்கான சாதகமான சூழலை ஏற்படுத்துவதற்கு மாறாக அதனை வைத்து பாதகமான செய்திகளை புனைவதில் ஒருசில பிரதான ஊடகங்கள் முயற்சிக்கும்போது சமூக ஊடகங்களில் இதனை பரவலாக பார்க்க முடிகிறது.

குறிப்பாக இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவரை நீண்ட காலமாக இலக்கு வைத்து வரும் தரப்புகளுக்கு இந்த வாய்ப்பு பொன்னான தருணமாக பார்க்க முடிகிறது. அவ்வாறானவர்கள் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூகவலைத் தளங்களில் புதிய குற்றச்சாட்டுகளை பதிவேற்றுவதோடு அதற்கு ஏற்ப, தொலைக்காட்சி, பத்திரிகைகள் போன்ற பிரதான ஊடகங்களும் குற்றச்சாட்டுகளை சுமந்த செய்திகளை வெளியிடுவதில் விருப்பம் காட்டுவதை காணமுடிகிறது.

இதில் கடந்த செப்டம்பர் மாதம் 4ஆம் திகதி சிலோன் டுடே பத்திரிகையிலும் செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி சன்டே டைம்ஸ் பத்திரிகையிலும் வெளியான கட்டுரைகளுக்கு இலங்கை கிரிக்கெட் சபை பதிலளித்துள்ளது.

இந்த இரு பத்திரிகைகளிலும் முறையே “சூதாட்ட நிறுவனங்களுடனான தொடர்பை சுமதிபால ஒப்புக்கொண்டார்” மற்றும் “இது இலங்கை கிரிக்கெட் சபையில் சுமதிபாலவின் இன்னிங்ஸ் முடிவா” என்ற தலைப்புகளில் செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்த கட்டுரைகளில் திலங்க சுமதிபால கூறியதாக மேற்கோளிடப்பட்ட கூற்று ஒன்றிலேயே அவர் சூதாட்ட நிறுவனங்களுடன் தொடர்பு இருப்பதாக ஒப்புக் கொண்டார் என கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்த செய்தி முற்றாக திரிபுபடுத்தப்பட்ட ஒன்று என்பதை இலங்கை கிரிக்கெட் சபை விளக்கியுள்ளது.

“முழுமையான நீதிமன்ற அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் விடயங்களில் தேர்வு செய்யப்பட்ட விடயங்களை மாத்திரம் வேண்டுமென்றே, உண்மையான தகவல் மறைக்கப்பட்டு நியாயமற்ற முறையில் இந்தக் கட்டுரையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே மாறுபட்ட கருத்தொன்றை ஏற்படுத்தும் முயற்சியாகும்” என்று இலங்கை கிரிக்கெட் சபையின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர் தினத்தில் சனத் ஜயசூரியவுக்கு நன்றி தெரிவித்த கோஹ்லி

உலக ஆசிரியர்கள் தினம் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி கொண்டாடப்பட்டு வருகின்றது..

உண்மையில் அந்த வாக்கு மூலத்தில் திலங்க சுமதிபால மேலும் கூறும்போது, ”தாமும் தமது குடும்பத்தினரும் சூதாட்ட தொழிலில் ஈடுபட்டிருப்பதாக பொதுவான கருத்தொன்று மக்களிடம் இருப்பதாகவும், தாம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கூறப்படும் எந்த ஒரு சூதாட்ட வர்த்தகத்திலும் தொடர்புபட்டிருக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த கூற்றுக்கூட அண்மையில் வெளியான ஒன்று போன்று கட்டுரையில் கூறப்பட்டிருக்கிறது. உண்மையில் அது 2011ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் குறித்த வழக்கில் வாக்குமூலம் அளிக்கும்போது குறிப்பிடப்பட்டதாகும். அதாவது சுமதிபால 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைமை பதவியை ஏற்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் கூறிய ஒரு கூற்றாகும்.

“திலங்க சுமதிபால அவர்களின் பெயருக்கு கேடு விளைவிக்கும் வகையில் நீக்கப்பட்ட விளையாட்டு சட்டங்கள் மற்றும் ஒழுங்குகளை அடிப்படையாகக் கொண்டு உண்மையான தகவல்களை மறைத்து, மக்கள் மனதில் இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் மீது தவறான மற்றும் மோசமான எண்ணத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடனேயே இந்த கட்டுரை அமைந்துள்ளது” என்று இலங்கை கிரிக்கெட் சபை கூறியது.

எவ்வாறாயினும் 2015ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமை பதவிக்காக திலங்க சுமதிபால வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். எனவே அன்றைய திகதியில் அவர் குறித்த கட்டுரைகள் அடிப்படையாகக் கொண்டிருக்கும் ஒழுங்கு விதிகளின் அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்திருந்தார் என்பதுவே உண்மை. அதில் அவர் எந்த ஒரு தகுதியின்மைக்கும் முகம் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர, சர்வதேச கிரிக்கெட் சபை (ICC) திலங்க சுமதிபாலவை அதன் இயக்குனர் ஒருவராகவும் ஏற்றுள்ளது. அவ்வாறு உயர் பதவி வழங்கும் முன் அவர் அனைத்து ஒழுக்காற்று விதிகளையும் பூர்த்தி செய்துள்ளார் என்பதை சர்வதேச கிரிக்கெட் சபையின் நிறைவேற்றுக் குழு உறுதி செய்திருக்கிறது. அது பற்றி நெறிமுறை அதிகாரிகளால் முறையான விசாரணைகள் நடத்தப்பட்டு அவரது தகுதி உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி விளையாட்டுத் துறை அமைச்சு மற்றும் சர்வதேச கிரிக்கெட் சபை மூலம் மேற்கொள்ளப்பட்ட முறையான விசாரணைகளின் பின்னர் அவர் சூதாட்ட தொழிலில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புபட்டவர் இல்லை என்பது எந்த சந்தேகமும் இன்றி உறுதியாகிறது.

இந்நிலையில் திலங்க சுமதிபால தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் சபை ஒரு முழுமையான விசாரணையை நடத்தி அவரது தகுதியை உறுதி செய்திருக்கும் நிலையில் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்பதே உண்மை.

இவ்வாறான குழப்பம் விளைவிக்கும் செயல்கள் திலங்க சுமதிபால என்ற தனி ஒருவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் என்பதைக் கடந்து இலங்கை கிரிக்கெட் விளையாட்டில் பாதிப்புகள் செலுத்தக் கூடியதாக இருக்கும் என்று இலங்கை கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டுகிறது. இவ்வாறான அனுமானங்களை வெளியிடுவது, ஆதாரமற்ற செய்திகளை வெளியிடுது போன்றவற்றைத் தவிர்த்துக் கொள்ளும்படியும் அது கேட்டுக்கொள்கிறது.

2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பதவி ஏற்ற தற்போதைய இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் இலங்கை கிரிக்கெட்டில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சிகளை கட்டி எழுப்பும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நேரமிது. ஐந்து ஆண்டு திட்டம் ஒன்றை நோக்கியே தற்போதைய நிர்வாகம் இயங்கி வருகிறது. குறிப்பாக கிரிக்கெட் நிர்வாகம் தற்போது கடன் சுமையில் இருந்து முழுமையாக மீண்டு வருவதோடு அது தொழில்சார் வழிகாட்டலின் கீழ் சிறந்த முறையில் செயற்பட்டு வருவதை காணமுடிகிறது.

தற்போதைய போட்டி சூழலில் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு முழுமையாக மீள்கட்டமைக்கப்பட்டிருக்கும் கிரிக்கெட் விளையாட்டுக்கு தற்போதைய நிர்வாகம் பாரிய நிதி முதலீடு மற்றும் வளங்களை முழுமையாக ஈடுபடுத்தியுள்ளது. இந்த சீர்திருத்தங்களுக்கு பலன்கள் கிடைப்பதற்கு சில காலம் தேவைப்படுவதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலைக் கொண்டு குறுகிய நோக்கங்களை ஈட்டும் நோக்கத்துடன் அவர்களின் சுயநல நோக்கத்திற்காக செயற்படும் தவறான, துவேசம் கொண்ட கட்டுக்கதைகள் மற்றும் பிரசாரங்களால் வழி தவறாது உண்மையான தகவல்கள் அடிப்படையில் செயற்படும்படி இலங்கை கிரிக்கெட் சபை பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.