5ஆவது கட்புலனற்றோர் உலகக்கிண்ணம் ஜனவரி 9 முதல் டுபாயில்

150

டுபாய் மற்றும் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள கட்புலனற்றோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி எதிர்வரும் 6 ஆம் திகதி டுபாய் நோக்கி புறப்படவிருக்கிறது.

ஐந்தாவது முறையாக நடைபெறவுள்ள கட்புலனற்றோருக்கான (40 ஓவர்கள்) உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் எதிர்வரும் 9 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இம்முறை போட்டிகளை நடாத்தும் நாடாக பாகிஸ்தான் விளங்கினாலும், பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்திற்கொண்டு லீக் மற்றும் அரையிறுதிப் போட்டிகளை ஐக்கிய அரபு இராச்சியத்தின் அஜ்மானில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. இதன்படி, சுமார் மூன்று வாரங்கள் நடைபெறவுள்ள இத்தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் 22 ஆம் திகதி பாகிஸ்தானில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக 1998 இல் நடைபெற்ற அங்குரார்ப்பண உலகக் கிண்ணப் போட்டியில் தென்னாபிரிக்காவும், 2002 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தானும், இறுதியாக 2014 இல் இந்தியாவும் கட்புலனற்றோருக்கான உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இத்தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணிக்கு சந்தன தேசப்பிரிய தலைமை தாங்கவுள்ளார். அவருடன் மொத்தமாக 17 வீரர்களும் 3 அதிகாரிகளும் டுபாய் புறப்படவுள்ளனர்.

முன்னதாக நடைபெற்ற 4 உலகக் கிண்ணப் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய ஒன்றாக விளங்குகின்ற இலங்கை கட்புலனற்றோர் அணி, கடந்த 2002 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற கட்புலனற்றோருக்கான 2ஆவது உலகக் கிண்ண போட்டியில் பிரபல இங்கிலாந்து அணியை வீழ்த்தி வரலாறு படைத்தது.

சச்சித்ர சேரசிங்கவின் சதத்தால் சிலாபம் மேரியன்ஸ் ஆதிக்கம்

அதனையடுத்து 2012 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற கட்புலனற்றோருக்கான அங்குரார்ப்பண டி20 உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் 3ஆவது இடத்தையும் இலங்கை அணி பெற்றுக்கொண்டது. இதனையடுத்து இறுதியாக 2014 இல் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற 4ஆவது உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் இலங்கை அணியின் ஐ.பி சமன் குமார சிறந்த பந்துவீச்சாளராகவும் தெரிவானார்.

இந்நிலையில், இவ்வருடம் இந்தியாவில் நடைபெற்ற கட்புலனற்றோருக்கான டி20 உலகக்கி ண்ணத்தில் இலங்கை அணியின் சுரங்க சம்பத், தொடர்ச்சியாக 5 இன்னிங்சுகளில் 5 சதங்களைக் குவித்து புதிய உலக சாதனையும் படைத்தார்.

இத்தொடரில் இலங்கை தவிர இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள், தென்னாபிரிக்கா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளுடன் முதன்முறையாக நேபாளமும் களமிறங்கவுள்ளது.

இதேவேளை, இம்முறை நடைபெறவுள்ள கட்புலனற்றோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணிக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் பூரண அனுசரணை வழங்கவுள்ளது. இதன்படி, 17 வீரர்கள் மற்றம் 3 அதிகாரிகளுடன் இத்தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணிக்குத் தேவையான விளையாட்டு உபகரணங்கள், விமானப் பயணச்சீட்டு உள்ளிட்டவைகளைப் பெற்றுக்கொடுக்க 11 இலட்சம் ரூபாவை வழங்கவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நவடிக்கை எடுத்துள்ளது.

அதேநேரம், உலக கட்புலனற்றோருக்கான சங்கத்திற்கு கடந்த வருடம் செலுத்த வேண்டியிருந்த உறுப்புரிமை பணத்தையும் (40 ஆயிரம் ரூபா), பங்களாதேஷில் நடைபெறவுள்ள வருடாந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக 2 உறுப்பினர்களை அனுப்பிவைப்பதற்கான விமானப் பயணச்சீட்டையும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற கிரிக்கெட் எய்ட் நிதி உதவியின் (2 இலட்சத்து 19 ஆயிரம் ரூபா) மூலம் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபாலவின் ஆலோசனைக்கமைய கிரிக்கெட் எய்ட் நிதி உதவியின் பொறுப்பாதிகாரியும், உபதலைவருமான கே. மதிவாணனினால், கட்புலனற்றோருக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணிக்கான காசோலை, அணியின் முகாமையாளர் எச்.ஜி சமிந்த புஷ்பகுமாரவுக்கு அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது

போட்டி அட்டவணை

  • ஜனவரி 09 – இலங்கை எதிர் அவுஸ்திரேலியா
  • ஜனவரி 12 – இலங்கை எதிர் பங்களாதேஷ்
  • ஜனவரி 13 – இலங்கை எதிர் இந்தியா
  • ஜனவரி 15 – இலங்கை எதிர் நேபாளம்