SLC T-20 தொடரில் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்கள்

1263

இலங்கை தேசிய மற்றும் உள்ளூர் கிரிக்கெட் வீரர்களின் பங்கேற்புடன் இலங்கை கிரிக்கெட் ரசிகர்களது எதிர்பார்ப்புகளுடன் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற SLC T 20 கிரிக்கெட் தொடர் கடந்த வாரம் நிறைவுக்கு வந்தது.

கொழும்பு, கண்டி, தம்புள்ளை மற்றும் காலி என நான்கு அணிகள் பங்குபற்றிய இம்முறை போட்டித் தொடரின் இறுதிப் போட்டி கொழும்பு, ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் இசுரு உதான தலைமையிலான தம்புள்ளை அணியை வீழ்த்திய உபுல் தரங்க தலைமையிலான கொழும்பு அணி சம்பியனாகத் தெரிவாகியது.

உபுல் தரங்கவின் அதிரடி சதத்தால் சம்பியன் கிண்ணத்தை வென்றது கொழும்பு

இலங்கை கிரிக்கெட் சபை ஏற்பாட்டில் நடைபெற்ற SLCT-20 லீக்கின் இறுதிப் போட்டியில் உபுல் தரங்கவின்…

இதேநேரம், அஞ்செலோ மெதிவ்ஸ் தலைமையிலான கண்டி அணி மூன்றாவது இடத்தையும், திமுத் க ருணாரத்ன தலைமையிலான காலி அணி நான்காவது இடத்தையும் பெற்றுக்கொண்டன.

இதுஇவ்வாறிருக்க, இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாக, கொழும்பு அணியின் வெற்றிக்கு துணை நின்ற உபுல் தரங்க தெரிவு செய்யப்பட்டார். அதேபோல, தொடரின் நாயகனாக தனுஷ்க குணதிலக்க தெரிவு செய்யப்பட்டார்.

இதேநேரம், இம்முறை போட்டிகளில் கண்டி அணியின் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ், தம்புள்ளை அணியின் தலைவர் திசர பெரேரா மற்றும் கண்டி அணிக்காக விளையாடி குசல் ஜனித் பெரேரா ஆகியோர் 4 போட்டிகளில் மாத்திரம் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதில், அஞ்செலோ மெதிவ்ஸ், தனது மருத்துவ பரிசோதனைக்காக போட்டியின் ஆரம்பத்தில் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றிருந்தார். அதேபோல, குசல் ஜனித பெரேரா, 4 வருடங்களுக்கு முன் இடம்பெற்ற ஊக்கமருந்து விவகாரத்தில் இழப்பீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக இங்கிலாந்துக்கு புறப்பட்டுச் சென்றிருந்தார்.

அதேபோல, காலி அணியின் தலைவர் சுரங்க லக்மாலுக்கு முதலிரண்டு போட்டிகளிலும் விளையாடிய பின்னர் ஓய்வு வழங்கப்பட்டது. அத்துடன் கொழும்பு அணிக்காக முதல் நான்கு போட்டிகளிலும் விளையாடியிருந்த அணித் தலைவர் தினேஷ் சந்திமால், கைவிரலில் ஏற்பட்ட முறிவு காரணமாக இறுதி ஆட்டங்களில் விளையாடவில்லை.

அத்துடன், இலங்கை தேசிய அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகின்ற குசல் மெண்டிஸ், நான்கு போட்டிகளில் விளையாடி 81 ஓட்டங்களையும், நிரோஷன் திக்வெல்ல நான்கு போட்டிகளில் விளையாடிய வெறுமனே 24 ஓட்டங்களையும் பெற்று ஏமாற்றம் அளித்தனர்.

ஆசிய கிண்ணத்தின் முதலிரண்டு போட்டிகளிலிருந்து விலகும் அகில தனன்ஜய

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக வலம் வரும் அகில தனன்ஜய…

இதேநேரம், தேசிய அணியில் இடம்பெறும் நோக்கில் கண்டி அணிக்காக களமிறங்கிய லசித் மாலிங்க, 6 போட்டிகளில் விளையாடி 24 ஓவர்களை வீசியிருந்ததுடன், 11 அகலப் பந்துகளை வீசி வெறுமனே 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.

இந்த நிலையில், இம்முறை மகாண அணிகளுக்கிடையிலான உள்ளூர் டி-20 தொடரில் துடுப்பாட்டம், பந்துவீச்சு என்பவற்றில் திறமைகளை வெளிப்படுத்தியிருந்த வீரர்களின் விபரங்களை ஆராய்ந்து பார்ப்போம்.

உபுல் தரங்க

இம்முறை போட்டித் தொடரில் அதிகளவு ஓட்டங்களைக் குவித்த வீரர்களின் பட்டியலில் கொழும்பு அணி வீரர் உபுல் தரங்க முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதில், 6 போட்டிகளில் விளையாடிய அவர், 2 சதங்கள் உள்ளடங்கலாக 414 ஓட்டங்களைக் குவித்தார். அத்துடன், இம்முறை போட்டித் தொடரின் முதலாவது மற்றும் இறுதிப் போட்டிகளில் சதங்களைக் குவித்து கொழும்பு அணியின் வெற்றிக்கு காரணமாகவும் இருந்தார். 103.00 என்ற துடுப்பாட்ட சராசரியைக் கொண்ட தரங்க, இப்போட்டித் தொடரில் 28 சிக்ஸர்களைக் குவித்திருந்தமை சிறப்பம்சமாகும்.

டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ள உபுல் தரங்க, இலங்கையின் ஒரு நாள் அணியில் தொடர்ந்து விளையாடி வருகின்றார். எனினும், இறுதியாக கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சுதந்திர கிண்ண முத்தரப்பு டி-20 தொடரில் இலங்கைக்காக விளையாடியிருந்த அவருக்கு எதிர்பார்த்தளவு சோபிக்க முடியாமல் போனது. இதில் பங்களாதேஷ் அணிக்கெதிரான தீர்மானமிக்க லீக் போட்டியில் வெறும் 5 ஓட்டங்களை மாத்திரம் பெற்று அவர் ஏமாற்றம் அளித்தார்.

இதுஇவ்வாறிருக்க, கடந்த மே மாதம் நடைபெற்ற மாகாண அணிகளுக்கிடையிலான ஒரு நாள் போட்டியில் காலி அணிக்கு தலைவராகச் செயற்பட்ட உபுல் தரங்க, அதிகூடிய ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டார். குறித்த தொடரில் 5 போட்டிகளில் விளையாடி, ஒரு சதம் மற்றும் 2 அரைச்சதங்களுடன் 272 ஓட்டங்களை அவர் பெற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், 2006ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிராக டி-20 அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட உபுல் தரங்க, இதுவரை 26 போட்டிகளில் விளையாடி 407 ஓட்டங்களையும், ஒரு போட்டியில் அதிகபட்சமாக 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனவே, இம்முறை மாகாண அணிகளுக்கிடையிலான டி-20 தொடரில் துடுப்பாட்டத்தில் அசத்தி அதிகளவு ஓட்டங்களைக் குவித்த உபுல் தரங்கவிற்கு எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள இங்கிலாந்து அணிக்கெதிரான ஒற்றை டி-20 போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பு வழங்கப்படுமா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

தசுன் ஷானக்க

இலங்கை அணியின் அதிரடி ஆட்டக்காரரும், சகலதுறை வீரருமான தசுன் ஷானக்க, இம்முறை உள்ளூர் டி-20 போட்டித் தொடரில் அதிகளவு ஓட்டங்களைக் குவித்த இரண்டாவது வீரராக இடம்பிடித்தார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர்களை கௌரவிக்கவுள்ள இலங்கை கிரிக்கெட் சபை

விளையாட்டுத் துறை அமைச்சர் பைசர் முஸ்தபாவின் வழிகாட்டலில் இலங்கை ICC முழு அங்கத்துவத்தை…

கண்டி அணிக்காக விளையாடிய அவர், 6 போட்டிகளில் கலந்துகொண்டு 78.00 என்ற துடுப்பாட்ட சராசரியுடன் 312 ஓட்டங்களையும் குவித்துள்ளார். காலி அணியுடன் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் தசுன் ஷானக்க, 52 பந்துகளில் 102 ஓட்டங்களைக் குவித்து தனது அதிசிறந்த டி-20 இன்னிங்ஸை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதுமாத்திரமின்றி இம்முறை போட்டிகளில் அவர் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தார்.

அஷான் பிரியன்ஞன்

இலங்கை மற்றும் தேசிய அணிக்காக மத்திய வரிசையில் களமிறங்கி சிறப்பாகத் துடுப்பெடுத்தாடும் திறமைகொண்ட வீரர்களில் அஷான் பிரியன்ஞன் முக்கிய இடத்தை வகிக்கின்றார்.

இம்முறை மாகாண அணிகளுக்கிடையிலான டி-20 தொடரில் உபுல் தரங்க, தசுன் ஷானக்க ஆகிய வீரர்களைத் தொடர்ந்து சதம் அடித்த பெருமையையும், அதிகளவு ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் நான்காவது இடத்தையும் தம்புள்ளை அணிக்காக விளையாடிய அஷான் பிரியன்ஞன் பெற்றுக்கொண்டார்.

ஏழு போட்டிகளில் விளையாடிய அவர், 27.71 என்ற துடுப்பாட்ட சராசரியுடன் 194 ஓட்டங்களைக் குவித்தார். இதில் கண்டி அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் 49 பந்துகளில் சதத்தை குவித்த அஷான் பிரியன்ஞனுக்கு, இறுதி லீக் ஆட்டங்களில் எதிர்பார்த்தளவு திறமைகளை வெளிப்படுத்த முடியாமல் போனது.

ஆசிய கிண்ணமும் லசித் மாலிங்கவின் அசத்தல் பந்து வீச்சும்

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரையடுத்து சற்று எழுச்சியும், நம்பிக்கையும்…

எனினும், அண்மையில் நடைபெற்ற மாகாண அணிகளுக்கிடையிலான ஒரு நாள் போட்டித் தொடரில் துடுப்பாட்ட வீரர்களின் வரிசையில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட அஷான் பிரியன்ஜன், 5 லீக் போட்டிகளில் விளையாடி, ஒரு சதம், 2 அரைச்சதங்களுடன் 279 ஓட்டங்களைக் குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தனுஷ்க குணதிலக்க

இலங்கை அணியில் அடிக்கடி சர்ச்சைகளுக்கு முகங்கொடுத்து போட்டித் தடைகளுக்கு ஆளாகி வருகின்ற இளம் வீரரான தனுஷ்க குணதிலக்கவும், இம்முறை உள்ளூர் டி-20 போட்டித் தொடரில் துடுப்பாட்டம், பந்துவீச்சில் அபாரம் காட்டியிருந்தார்.

இம்முறை போட்டிகளில் தம்புள்ளை அணியை இறுதிப் போட்டி வரை அழைத்து வருவதற்கு முக்கிய காரணமாக இருந்த தனுஷ்க குணதிலக்க, 7 லீக் ஆட்டங்களில் விளையாடி, 2 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 247 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். அத்துடன், பந்துவீச்சில் 7 விக்கெட்டுக்களையும் அவர் வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சரித் அசலங்க

இலங்கை அணியின் மற்றுமொரு வளர்ந்து வரும் வீரர்களில் ஒருவரான சரித் அசலங்க, இம்முறை உள்ளூர் டி-20 போட்டித் தொடரில் கண்டி அணிக்காக விளையாடி சகலதுறையிலும் பிரகாசித்திருந்தார். இம்முறை போட்டிகளில் அதிகளவு விக்கெட்டுக்களை வீழ்த்திய நான்காவது பந்துவீச்சாளராக இடம்பிடித்த அவர், 6 போட்டிகளில் விளையாடி 195 ஓட்டங்களுக்கு 10 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆசிய கிண்ணமும் லசித் மாலிங்கவின் அசத்தல் பந்து வீச்சும்

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரையடுத்து சற்று எழுச்சியும், நம்பிக்கையும்…

அதிலும் குறிப்பாக, காலி அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் 14 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை வீழ்த்திய அசலங்க, தனது அதிசிறந்த டி-20 பந்துவீச்சுப் பிரதியையும் பெற்றுக்கொண்டார்.

அதேபோல, துடுப்பாட்டத்திலும் அசத்திய அவர், 105 ஓட்டங்களைக் குவித்து அசத்தியிருந்தார்.

கசுன் ராஜித

இம்முறை உள்ளூர் டி-20 போட்டித் தொடரில் காலி அணிக்கு ஒருசில வெற்றிகளைப் பெற்றுக்கொடுக்க வேகப்பந்து வீச்சாளரான கசுன் ராஜித முக்கிய காரணமாக இருந்தார். அதுமாத்திரமின்றி அதிகளவு விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்களில் முன்னிலை பெற்ற அவர், 6 போட்டிகளில் விளையாடி 231 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 13 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

அத்துடன், தம்புள்ளை அணிக்கெதிரான போட்டியில் 28 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை வீழ்த்தி தனது அதிசிறந்த டி-20 பந்துவீச்சுப் பிரதியையும் பெற்றுக்கொண்டார்.

25 வயதுடைய இடது கை மித வேகப்பந்து வீச்சாளரான கசுன் ராஜித, 2016ஆம் ஆண்டு இந்திய அணிக்கெதிரான போட்டியில் டி-20 அறிமுகத்தைப் பெற்றுக்கொண்டார். இதுவரை 4 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 4 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜீவன் மெண்டிஸ்

இலங்கை அணியின் அனுபவமிக்க சகலதுறை வீரர்களில் ஒருவரான ஜீவன் மெண்டிஸ், இம்முறை உள்ளூர் டி-20 போட்டித் தொடரில் அதிகளவு விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.  

இந்த தொடரில் சம்பியன் பட்டத்தை வென்ற கொழும்பு அணிக்காக விளையாடியிருந்த ஜீவன் மெண்டிஸ், 7 போட்டிகளில் கலந்துகொண்டு 11 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். எனினும், 13.72 என்ற பந்துவீச்சு சராசரியைப் பெற்றுக்கொண்ட அவர், எதிரணிக்கு 151 ஓட்டங்களை விட்டுக் கொடுத்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதில் தம்புள்ளை அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை வீழ்த்த்தி, இம்முறை போட்டிகளில் தனது சிறந்த பந்துவீச்சுப் பிரதியையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அகில தனன்ஜய

இம்முறை போட்டிகளில் அதிகளவு விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய வீரர்களில் மூன்றாவது இடத்தை அகில தனன்ஜய பெற்றுக்கொண்டார். ஏழு போட்டிகளில் விளையாடி 16.26 என்ற சராசரியுடன் 11 விக்கெட்டுக்களை அவர் வீழ்த்தினார். இந்தப் போட்டித் தொடரின் ஆரம்ப லீக் ஆட்டங்களில் அபாரமாக பந்துவீசிய அகில தனன்ஜய, இறுதி லீக் ஆட்டங்களில் எதிரணி வீரர்களுக்கு அதிகளவு ஓட்டங்களை விட்டுக்கொடுத்திருந்தார்.  

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க