கோல்ட்ஸ், சோனகர் கழகங்களுக்கு இடையிலான ஆட்டம் சமநிலையில் முடிவு

153

இரண்டு இன்னிங்சுளிலும் அதிக ஓட்டங்களை குவித்த கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் சோனகர் விளையாட்டுக் கழகத்துடனான போட்டியை வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடித்துக் கொண்டது.

கோல்ட்ஸ் அணிக்காக முதல் இன்னிங்சில் இரட்டைச் சதம் பெற்ற சங்கீத் குரே இரண்டாவது இன்னிங்சில் இரண்டு ஓட்டங்களால் சதத்தை தவறவிட்டார். எனினும் அந்த அணியின் மற்றைய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பசிந்து லக்‌ஷங்க இரண்டாவது இன்னிங்சில் சதம் குவித்தார்.

இலங்கை கிரிக்கெட் சபை நடத்தும் 2017/18 ஆம் ஆண்டுக்கான உள்ளூர் பருவத்திற்கான பிரீமியர் லீக் A நிலை தொடரின் A குழுவுக்கான போட்டியாகவே இந்த ஆட்டம் நடைபெற்றது. கொழும்பு சோனகர் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் மூன்றாவது மற்றும் கடைசி நாளான இன்று (09) தனது முதல் இன்னிங்சைத் தொடர்ந்த சோனகர் விளையாட்டுக் கழகம் 289 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

>> முத்தரப்பு ஒரு நாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு <<

கடைசி நாள் ஆட்டத்தை 50 ஓட்டங்களுடன் ஆரம்பித்த அணித்தலைவர் சாமர சில்வா சதத்தை நெருங்கியபோதும் 92 பந்துகளில் 98 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். கோல்ட்ஸ் அணிக்காக பிரபாத் ஜயசூரிய 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இதன்படி 174 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற நிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த கோல்ட்ஸ் கழகம் கடைசி நாள் ஆட்ட நேரம் முடியும் வரை துடுப்பெடுத்தாடி 3 விக்கெட்டுகளை இழந்து 269 ஓட்டங்களை பெற்றது.

இதன்போது சங்கீத் குரே 98 ஓட்டங்களை பெற்று பிரிமியர் லீக் தொடரில் அதிக ஓட்டங்கள் பெற்றிருந்த மனோஜ் சரத்சந்திரவை (474 ஓட்டங்கள்) முந்தினார். இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள சங்கீத் குரே 479 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

போட்டியின் சுருக்கம்

கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 463 (115.2) – சங்கீத் குரே 200, டில்ருவன் பெரேரா 83, பிரியமால் பெரேரா 51, பசிந்து லக்ஷங்க 46, அவிஷ்க பெர்னாண்டோ 28, டிலங்க சந்தகன் 8/184, தரிந்து ரத்னாயக்க 2/102

சோனகர் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 289 (85.5) – சாமர சில்வா 98, இரோஷ் சமரசூரிய 70, பபசர வதுகே 50, அன்ட்ரூ பரய்ஸ் 23, பிரபாத் ஜயசூரிய 5/117, டில்ருவன் பெரேரா 2/49, மொஹமட் ஷிராஸ் 2/57

கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 269/3 (53) – பசிந்து லக்ஷங்க 100*, சங்கீத் குரே 98, கவிஷ்க அஞ்சுல 45, டிலங்க சந்தகன் 3/128

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது