சங்கீத் குரேவின் இரட்டை சதத்தால் கோல்ட்ஸ் அணி வலுவான நிலையில்

113

இலங்கை கிரிக்கெட் சபை நடத்தும் 2017/18 ஆம் ஆண்டுக்கான உள்ளூர் பருவத்திற்கான பிரீமியர் லீக் A நிலை தொடரில் திங்கட்கிழமை (08) இரண்டு போட்டிகள் நிறைவடைந்ததோடு மேலும் ஒரு போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் நடைபெற்றது.

கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் சோனகர் விளையாட்டுக் கழகம்

சங்கீத் குரேவின் இரட்டைச் சதத்தின் உதவியோடு சோனகர் விளையாட்டுக் கழகத்திற்கு எதிரான போட்டியில் கொழும்பு கோல்ட்ஸ் கழகம் வலுவான நிலையில் உள்ளது.

கொழும்பு சோனகர் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் 173 ஓட்டங்களுடன் இரண்டாவது நாள் துடுப்பெடுத்தாட களமிறங்கிய சங்கீத் குரே இந்த தொடரில் இரண்டாவது இரட்டைச் சதத்தை பெற்றார். SSC அணியின் கௌஷால் சில்வா முதல் இரட்டை சதத்தை பெற்றமை குறிப்பிடத்தக்கது. சரியாக 200 ஓட்டங்களை பெற்ற சங்கீத் குரே தரிந்து ரத்னாயக்கவின் பந்துக்கு ஆட்டமிழந்தார்.

11 விக்கெட்டுகளைக் கைப்பற்றி காலி அணியின் வெற்றிக்கு வித்திட்ட கயான் சிரிசோம

இதன்படி கோல்ட்ஸ் அணி முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 463 ஓட்டங்களை பெற்றது. இதன்போது சோனகர் விளையாட்டுக் கழகத்தின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் டிலங்க சந்தகன் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தனது முதல் இன்னிங்சை ஆரம்பித்த சோனகர் விளையாட்டுக் கழகம் இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவின்போது 208 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து காணப்படுகிறது.

போட்டியின் சுருக்கம்

கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 463 (115.2) – சங்கீத் குரே 200, டில்ருவன் பெரேரா 83, பிரியமால் பெரேரா 51, பசிந்து லக்ஷங்க 46, அவிஷ்க பெர்னாண்டோ 28, டிலங்க சந்தகன் 8/184, தரிந்து ரத்னாயக்க 2/102

சோனகர் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 208/7 (63) – இரோஷ் சமரசூரிய 70, சாமர சில்வா 59*, பபசர வாதுகே 50, பிரபாத் ஜயசூரிய 3/82, டில்ருவன் பெரேரா 2/39

போட்டியின் மூன்றாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நாளை தொடரும்.


செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம்  

பிரீமியர் லீக் தொடரின் A குழுவில் கடைசி இடத்தில் இருக்கும் ப்ளூம்பீல்ட் விளையாட்டுக் கழகம், செரசன்ஸ் விளையாட்டுக் கழகத்துடனான போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சோபித்தபோதும் அந்த போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிந்தது.

கொழும்பு ப்ளூம்பீல்ட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் கடைசி நாளில் தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த செரசன்ஸ் அணி 182 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அபாரமாக பந்துவீசிய மலித் டி சில்வா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்படி ப்ளும்பீல்ட் கழகத்திற்கு 210 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டபோதும் அந்த அணிக்கு போதிய கால அவகாசம் இருக்கவில்லை. கடைசி நாள் ஆட்டநேர முடிவின்போது ப்ளும்பீல்ட் அணி 1 விக்கெட்டுகளை இழந்து 73  ஓட்டங்களை பெற்றது.

போட்டியின் சுருக்கம்

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 320 (92.4) – ப்ரமோத் மதுவந்த 86, கமிந்து கனிஷ்க 62, லஹிரு சமரகோன் 59/4, மலித் டி சில்வா 3/75

ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 293 (87) – நிபுன் கருணாநாயக்க 69, சச்சின் ஜயவர்தன 63, பிரமுத் ஹெட்டிவத்த 42, அதீஷ நாணயக்கார 40, ரமேஷ் மெண்டிஸ் 22, ரொஷான் ஜயதிஸ்ஸ 4/92, சாலிய சமன் 2/39, சதுர ரந்துனு 2/78

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 182 (70.1) – பிரமோத் மதுவந்த 59, கமின்து கனிஷ்க 49, சதுர ரந்துனு 31, மலித் டி சில்வா 5/61, லஹிரு சமரகோன் 3/51, கொஷான் தனுஷ்க 2/29

ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 73/1 (16) – நிபுன் கருணாநாயக்க 53*

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது


BRC எதிர் பதுரெலிய விளையாட்டுக் கழகம்

கொழும்பு BRC மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான போட்டியில் வெற்றிபெற பதுரெலிய விளையாட்டு கழகத்திற்கு 35 ஓட்டங்களும் BRC அணிக்கு ஒரு விக்கெட்டும் தேவைப்படும் நிலையில் ஆட்டநேரம் முடிவுற்றதால் போட்டி சமநிலையானது.

கடைசி நாள் ஆட்டத்தில் பதுரெலிய விளையாட்டுக் கழகத்திற்கு 348 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த அந்த அணிக்கு மத்திய வரிசையில் வந்த 18 வயது ஷிரான் ரத்னாயக்க சிறப்பாக ஆடி முதல்தர போட்டிகளில் தனது கன்னி சதத்தை பெற்றார்.

அணித் தலைவராகவுள்ள மெதிவ்ஸ் உடற்தகுதி சோதனையில் தேர்வு

மறுபுறம் BRC பந்துவீச்சாளர்களும் சளைக்காமல் எதிரணி விக்கெட்டுகளை சாய்த்தனர். எனினும் ஆட்டநேர முடிவின்போது பதுரெலிய விளையாட்டு கழகம் 9 விக்கெட்டுகளை இழந்து 313 ஓட்டங்களைப் பெற்றது. ரத்னாயக்க 100 ஓட்டங்களுடன் தொடர்ந்து ஆட்டமிழக்காது களத்தில் இருந்த நிலையில் பதுரெலிய அணிக்கு வெற்றிவாய்ப்பு இருந்ததோடு BRC அணிக்கும் அதே அளவு வெற்றி வாய்ப்பு நிறைந்திருந்தது.

போட்டியின் சுருக்கம்     

BRC (முதல் இன்னிங்ஸ்) – 134 (34.4) – திலகரத்ன சம்பத் 30, சமிகர எதிரிசிங்க 26, அலங்கார அசங்க 5/45, டிலேஷ் குணரத்ன 4/42

பதுரெலிய விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) -133 (57.2) – பதும் நிஸ்ஸங்க 41, சமிகர எதிரிசிங்க 5/20, சுராஜ் ரந்திவ் 3/39

BRC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 346 (96.2) – ஷஷின் டில்ரங்க 97, சுராஜ் ரந்திவ் 60, ருமேஷ் புத்திக 51, ஹர்ஷ விதான 40, பிரவின்த் விஜேசூரிய 23, சாமிகர எதிரிசிங்க 20, டிலேஷ் குணரத்ன 3/69, துவிந்து திலகரத்ன 3/74, அலங்கார அசங்க 3/123   

பதுரெலிய விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 313/9 (74) – ஷிரான் ரத்னாயக்க 100*, டில்ஹான் 61, நாட்ராஸ் பிரசாத் 39, பதும் நிஸ்ஸங்க 35, சன்ஜய சதுரங்க 32, அலங்கார அசங்க 26, ஹிமேஷ் ராமனாயக்க 3/45, ஹஷேன் ராமனாயக்க 2/64

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது.