இலங்கையின் முதல்தர கிரிக்கெட் சுற்றுப்போட்டியான பிரீமியர் லீக் தொடரில் B பிரிவுக்கான சில போட்டிகளின் இறுதி நாளான இன்று குருநாகல இளையோர் விளையாட்டுக் கழகம் மற்றும் லங்கன் கிரிக்கெட் கழகம் வெற்றி பெற்ற அதே நேரம் மற்றைய இரு போட்டிகளும் சமநிலையில் முடிவுற்றன.

லங்கன் கிரிக்கெட் கழகம் எதிர் களுத்துறை நகர கழகம்

மூன்றாவதும் இறுதியுமான நாளான இன்று, இவ்விரு அணிக்களுக்கைடயிலான இந்த போட்டியில் லங்கன் கிரிக்கெட் கழகம் மதுரங்க சொய்சாவின் இரட்டைச் சதம் மற்றும் நவீன் கவிகாரவின் சிறந்த பந்து வீச்சின் மூலமும் 10 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

நேற்றைய நாள் இரண்டாம் இன்னிங்சுக்காக மீண்டும் துடுப்பாடுமாறு பணிக்கப்பட்ட களுத்துறை நகர கழகம் ஆட்ட நேர முடிவின் போது இரண்டு விக்கெட்டுகளை இழந்து 23 ஓட்டங்களை பெற்றிருந்தது. 134 ஓட்டங்களால் பின்னிலையுற்றுள்ள நிலையில் கடின இலக்குடன் இன்றைய நாள் களமிறங்கிய அவ்வணி 55.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 178 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

நிபுன கமகே களுத்துறை நகர கழகம் அணி சார்பாக 38 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட போதிலும் ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சென்றனர். சிறப்பாக பந்து வீசிய நவீன் கவிக்கர மற்றும் ரஜீவ வீரசிங்க தலா நான்கு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

லங்கன் கிரிக்கெட் கழகம் சார்பாக பந்து வீச்சில் ரஜீவ வீரசிங்க மற்றும் நவின் கவிகார ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

அதனை தொடர்ந்து இலகுவான 22 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய லங்கன் கிரிக்கெட் கழகம் விக்கெட் இழப்பின்றி 3.3 ஓவர்களில் 24 ஓட்டங்களை பெற்று 10 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.  

போட்டியின் சுருக்கம்

லங்கன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) : 446/9 (91) – மதுரங்க சொய்சா 203, லால் குமர 107, அனீக் ஹசன் 56, யொஹான் டி சில்வா 137/5, மங்கல குமார 120/3

களுத்துறை நகர கழகம் (முதல் இன்னிங்ஸ்) : 289 (82.3) – யொஹான் டி சில்வா 68, தரிந்து சிறிவர்தன 52, நவீன் கவிகார 76/4, சரித் பெர்னாண்டோ 21/2, ரஜீவ வீரசிங்க 98/2

களுத்துறை நகர கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) : 178 (55.1) – நிபுன கமகே 38, சுலான் ஜயவர்தன 32, தரிந்து சிறிவர்த்தன 24, கீத் பெரேரா 21*, ரஜீவ வீரசிங்க 60/4, நவீன் கவிகார 70/4

லங்கன் கிரிக்கெட் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) : 24/0 (3.3) – லக்ஷான் ரொட்ரிகோ 13*, அனீக் ஹசன் 11*

போட்டி முடிவு : லங்கன் கிரிக்கெட் கழகம் 10 விக்கெட்டுகளால் வெற்றி


இலங்கை விமானப்படை விளையாட்டுக் கழகம் எதிர் குருநாகல இளையோர் விளையாட்டுக் கழகம்

திலின ஹேரத் மற்றும் அனுருத்த ராஜபக்ச ஆகியோரின் சிறந்த பந்து வீச்சின் மூலம் 7 விக்கெட்டுகளால் குருநாகல இளையோர் விளையாட்டுக் கழகம் இலகுவாக வெற்றி பெற்றது.

முதல் இன்னிங்சில் 107 ஓட்டங்களால் பின்னிலையுற்ற நிலையில் களமிறங்கிய  விமானப்படை விளையாட்டுக் கழகம் 62.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்சில் பெற்றுக்கொண்ட ஓட்டங்களை விட 10 ஓட்டங்களை குறைவாக 190 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. விமானப்படை விளையாட்டுக் கழகம் சார்பில் இரண்டாவது விக்கெட்டுக்காக களமிறங்கிய உதயவன்ஷ பராக்ரம 44 ஓட்டங்களை கூடிய ஓட்டங்களாக பதிவு செய்த போதிலும் ஏனையோர் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றனர்.

குருநாகல இளையோர் விளையாட்டுக் கழகம் சர்பாக பந்து வீச்சில் அனுருத்த ராஜபக்ச 4 விக்கெட்டுகளையும் திலின ஹேரத் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அந்த வகையில், 83 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய குருநாகல இளையோர் விளையாட்டுக் கழகம் 17.1 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. சிறப்பாக துடுப்பாடிய தாரக வடுகே 29 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸ்சர் உள்ளடங்கலாக 31 ஓட்டங்களை விளாசினார்.

விமானப்படை விளையாட்டுக் கழகம் சார்பாக பந்து வீச்சில் புத்திக்க சந்தருவன் 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம்

விமானப்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) : 200 (61.5) – புத்திக்க சந்தருவன் 70, லஹிரு லக்மால் 44, திலின ஹேரத் 66/7, துமிந்த தசனாயக்க 71/2

குருநாகல இளையோர் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) : 307 (91.4) – ஹஷான் பிரபாத் 81*, தர்ஷன மகவத்த 44, அச்சிற எறங்க 48/3, லக்ஷான் பெர்னாண்டோ 59/3, புத்திக்க சந்தருவன் 81/2

விமானப்படை விளையாட்டுக் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) : 190 (62.1) – உதயவன்ஷ பராக்கிரம 44, சஹான் ஜயவர்தன 29, அனுருத்த ராஜபக்ஷ 21/4, திலின ஹேரத் 69/3, ருவந்த ஏக்கநாயக்க 23/2

குருநாகல இளையோர் விளையாட்டுக் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) : 84/3 (17.1) – தாரக வடுகே 31, தர்ஷன மஹவத்த 22*, புத்திக்க சந்தருவன் 29/3

போட்டி முடிவு : குருநாகல இளையோர் விளையாட்டுக் கழகம் 7 விக்கெட்டுகளால் வெற்றி


இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகம் எதிர் களுத்துறை பௌதிக கலாசார கழகம்

இரண்டாம் நாள் ஆட்ட முடிவின் போது 112 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் இறுதி நாளான இன்று இலங்கை கடற்படை விளையாட்டு கழகம் தொடர்ந்து துடுப்பாடியது. இரண்டாவது இன்னிங்சுக்காக முதலிரண்டு விக்கெட்டுக்களையும் ஓட்டமெதுவும் பெறாமால் இழந்திருந்தாலும் நான்கவது விக்கெட்டுக்காக களமிறங்கிய புத்திக்க ஹசரங்க சிறப்பாக துடுப்பாடி 10 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 94 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

அத்துடன், எட்டாவது விக்கெட்டுக்காக களமிறங்கிய அமித் எறந்த 67 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 97 ஓட்டங்களுக்கு துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இலங்கை கடற்படை விளையாட்டு கழகம் 77.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 325 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது. களுத்துறை பௌதிக கலாசார கழகம் சார்பாக சிறப்பாக பந்து வீசிய ரமேஷ் செல்வராஜ் மற்றும் ருசிர தறிந்ர ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

360 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய களுத்துறை பௌதிக கலாசார கழகம் 43 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை 3ஆவது நாள் ஆட்டம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டு, போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தது. களுத்துறை பௌதிக கலாசார கழகம் சார்பாக சிறப்பாக துடுப்பாடிய அமல் புத்திக்க பிரிஸ் ஆட்டமிழக்காமல் 55 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகம் சார்பாக இஷான் அபேசேகர 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) : 258 (66) – சமீர சந்தமால் 79, அஷான் ரணசிங்க 37, புத்திக்க ஹசரங்க 33, குசல் எதுசுரிய 33, ரமேஷ் செல்வராஜ் 4/58

களுத்துறை பௌதிக கலாசார கழகம் (முதல் இன்னிங்ஸ்) : 224 (75.5) – ரசிக பெர்னாண்டோ 44, க்ரிஷான் திணிது 40, டிலன்க ஆவர்த் 4/52, டினுஷ்க மாலன் 3/52

இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) : 325/7d (77.2) – அமித் எறந்த 97, புத்திக்க ஹசரங்க 94, அஷான் ரணசிங்க 58*, குசல் எதுசுரிய 52, ரமேஷ் செல்வராஜ் 2/32, ருசிர தறிந்ர 2/79

களுத்துறை பௌதிக கலாசார கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) : 165/4 (43) – அமல் புத்திக்க பீரிஸ் 55*, ஃபஹாத் பாபர் 36, தமிந்து அஷான் 30, இஷான் அபேசேகர 2/48

போட்டி முடிவு : போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.


பாணதுறை விளையாட்டுக் கழகம் எதிர் இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம்

நேற்றைய நாள் இரண்டாம் இன்னிங்சுக்காக களமிறங்கிய பாணதுறை விளையாட்டுக் கழகம் ஆட்ட நேர முடிவின் போது 63 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

தொடர்ந்து இன்றைய நாள் ஆட்டத்தை தொடர்ந்த அவ்வணி 65 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுக்களை இழந்து 202 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 159 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற நிலையில் ஆட்டத்தினை நிறுத்தி இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் அணியை துடுப்பாடுமாறு பணித்தது.

இரண்டாம் இன்னிங்சுக்காக மாதவ நிமேஷ் கூடிய ஓட்டங்களாக 30 ஓட்டங்களை பாணதுறை விளையாட்டுக் கழகம் சார்பாக பதிவு செய்தார். இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய சமிக்கற எதிரிசிங்க ஓட்டங்களை கட்டுப்படுத்திய அதே நேரம் 86 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

299 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் 48 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை 3ஆம் நாள் ஆட்ட நேரம் முடிவுற்றமையினால் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தது.

இரண்டாவது இன்னிங்சுக்காக கயான் மனீஷன் 38 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டார். அதேநேரம் பாணதுறை விளையாட்டுக் கழகம் சார்பாக கயான் சிறிசோம 59 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம்

பாணதுறை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) : 306 (83) – ஹசந்த பெர்னாண்டோ 84, சஞ்சய சத்துரங்க 51, நிசல் ரந்திக 44, சமிக்கற எதிரிசிங்க 101/5

இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) : 210 (69.1) – இஷான் ரங்கன 75, சமிக்கற எதிரிசிங்க 40, கயான் சிரிசோம 7/95 லசித் பெர்னாண்டோ 2/19

பாணதுறை விளையாட்டுக் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) : 202/9d (65) – அருண தர்மசேன 36 *, மாதவ நிமேஷ் 30, நிசல் ரந்திக்க 27, ஹஷந்த பெர்னாண்டோ 27, சமிக்கற எதிரிசிங்க 6/86

இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) : 172/5 (48) – கயான் மனீஷன் 38*, சமிக்கற எதிரிசிங்க 31*, இஷான் ரங்கன 37, கயான் சிரிசோம 3/59

போட்டி முடிவு : போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.