இலங்கை பிரீமியர் லீக்கில் B மட்ட கழக அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் நிறைவுற்றுள்ளன. இதில் பந்து வீச்சில் முழுத்திறமையினையும் வெளிப்படுத்தியிருந்த கயான் சிறிசோமவின் சிறப்பான ஆட்டத்தினால் பாணதுறை விளையாட்டுக் கழகம் குருநாகல் இளையோர் அணியினை வீழ்த்தியதுடன், இன்று நிறைவடைந்த மற்றைய போட்டி சமநிலை அடைந்துள்ளது.

அதிரடி அரைச்சதம் விளாசிய அருண தர்மசேன; மழையின் காரணமாக போட்டிகளில் இடையூறு

பாணதுறை விளையாட்டுக் கழகம் எதிர் குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம்

நேற்று அதிரடி துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தியிருந்த அருண தர்மசேன 70 பந்துகளில் 6 சிக்ஸர்கள் 8 பவுண்டரிகளை விளாசி ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட 90 ஓட்டங்களின் துணையுடன் பாணதுறை விளையாட்டு கழகம் 245 ஓட்டங்களிற்கு 9 விக்கெட்டுக்களை இழந்தவாறு இன்றைய நாள் ஆட்டத்தைத் தொடர்ந்து, 309 ஓட்டங்களுடன் தமது இன்னிங்சை முடித்துக்கொண்டது.

இன்றைய நாளில் பறிபோன விக்கெட்டினை குருநாகல் இளையோர் அணியின் சரங்க ராஜகுரு கைப்பற்றியிருந்தார்.

பின்னர், தமது முதலாவது இன்னிங்சினை ஆரம்பித்த குருநாகல் அணி, கயான் சிறிசோமவின் அதிரடிப் பந்து வீச்சில் வெறும் 131 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.

குருநாகல் இளையோர் அணியில் அதிகபட்சமாக தனுஷ் தர்மசிறி 44 ஓட்டங்களினை குவித்ததுடன், பந்து வீச்சில் ஏற்கனவே சிறப்பாக செயற்பட்டிருந்த சுழல் வீரரான சிறிசோம 7 விக்கெட்டுக்களை மொத்தமாக சாய்த்திருந்தார்.

பின்னர், பெற்ற ஓட்டங்கள் போதாது என்பதால் மீண்டும் பலோவ் ஒன் முறையில் இரண்டாவது இன்னிங்சினை ஆடிய குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம், மீண்டும் கயான் சிறிசோமவின் சுழலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 147 ஓட்டஙளுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து இன்னிங்ஸ் மற்றும் 31 ஓட்டங்களால் பாணதுறை விளையாட்டுக் கழகத்திடம் தோல்வியினை தழுவியது.

இந்த இன்னிங்சில் போராடிய ருவன்த ஏக்கநாயக்க (58), ஹஸன் பிரபாத்(50) ஆகியோர் அரைச்சதங்களினை கடந்ததுடன் பந்து வீச்சில் கலக்கிய கயான் சிறிசோம இந்த இன்னிங்சிலும் 7 விக்கெட்டுக்களை சாய்த்தார்.

போட்டியின் சுருக்கம்

பாணதுறை விளையாட்டுக் கழகம்(முதல் இன்னிங்ஸ்): 309 (60.3) அருண தர்மசேன 90, சாமர சில்வா 49, திலின ஹேரத் 64/4, அனுருத்த ராஜபக்ஷ 72/3, சரங்க ராஜகுரு 21/2

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம்(முதல் இன்னிங்ஸ்): 131 (40.5) தனுஷ்க தர்மசிரி 44, கயான் சிறிசோம 42/7

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் f/o (இரண்டாவது இன்னிங்ஸ்): 147 (49) ருவந்த ஏக்கநாயக்க 58, ஹஸன் பிரபாத் 50, கயான் சிறிசோம 24/7

போட்டி முடிவு – பாணதுறை விளையாட்டு கழகம் இன்னிங்ஸ் மற்றும் 31 ஓட்டங்களால் வெற்றி

இப்போட்டியில் அணிகள் பெற்றுக்கொண்ட புள்ளிகள்

  • பாணதுறை விளையாட்டு கழகம் – 18.55
  • குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் – 2.89

லங்கன் கிரிக்கெட் கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டுக் கழகம்

இப்போட்டியின் இரண்டாம் நாள் மோசமான காலநிலையினால் கைவிடப்பட்பட்டிருந்தது. இதனையடுத்து போட்டியின் இறுதி நாளான இன்று தமது முதல் இன்னிங்சினை தொடர்ந்த பொலிஸ் கழகம் வெறும் 118 ஓட்டங்களுடன்  இன்னிங்சை நிறைவு செய்துகொண்டது.

பொலிஸ் அணி சார்பாக அதிகபட்சமாக சமித் துஷ்மந்த 46 ஓட்டங்களினை குவித்துக்கொண்டிருந்த இவ்வேளையில், லங்கன் கிரிக்கெட் கழகத்தின் நவின் கவிகர பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்டு 5 விக்கெட்டுக்களை சாய்த்ததோடு, ரஜீவ வீரசிங்கவும் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

பின்னர், துடுப்பாட ஆரம்பித்த லங்கன் கிரிக்கெட் கழகம் 4 விக்கெட்டுக்களை இழந்து 108 ஓட்டங்களினைப் பெற்றிருந்தபோது தமது இரண்டாவது இன்னிங்சினை நிறுத்திக்கொண்டு பொலிஸ் அணிக்கு வெற்றி இலக்காக 150 ஓட்டங்களினை நிர்ணயித்தது. இந்த இன்னிங்சில் பறிபோன இரண்டு விக்கெட்டுக்களை மஞ்சுல ஜயவர்தன தன்வசப்படுத்தியிருந்தார்.

வெற்றி இலக்கினை பெறுவதற்காக மைதானம் நோக்கி விரைந்த பொலிஸ் விளையாட்டுக் கழகம், 3.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 45 ஓட்டங்களினை பெற்றிருந்த வேளையில் போட்டியின் ஆட்ட நேரம் நிறைவுற்றது. இதனால் இப்போட்டி சமநிலையில் நிறைவுற்றது.

போட்டியின் சுருக்கம்

லங்கன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்): 159 (64.5)  மதுரங்க சொய்ஸா 47, அசேல அளுத்கே 17/4, சுவஞ்சி மதநாயக்க 55/3

பொலிஸ் விளையாட்டுக் கழகம்(முதல் இன்னிங்ஸ்): 118 (47.3) சமித் துஷந்த 46, நவீன் கவிகர 41/5, ரஜீவ வீரசிங்க 35/4

லங்கன் கிரிக்கெட் கழகம்(இரண்டாவது இன்னிஸ்): 108/4 dec (28.3) சஷீன பெர்னாந்து 27, மஞ்சுல ஜயவர்த்தன 29/2

பொலிஸ் விளையாட்டுக் கழகம்(இரண்டாவது இன்னிங்ஸ்): 45/3 (3.3) அசேல அளுத்கே 33*

போட்டி முடிவு போட்டி சமநிலை அடைந்தது.

இப் போட்டியின் மூலம் அணிகள் பெற்ற புள்ளிகள்

  • லங்கன் கிரிக்கெட் கழகம் – 11.14
  • பொலிஸ் விளையாட்டுக் கழகம் – 2.92

களுத்துறை நகர கழகம் எதிர் இலங்கை விமானப்படை விளையாட்டுக் கழகம்

நேற்று ஆரம்பமாகியிருந்த இந்த போட்டியின் முதலாம் நாள் மழை காரணமாக முழுமையாக கைவிடப்பட்டிருந்தது. இதனையடுத்து இன்றைய இரண்டாம் நாளிலேயே இப்போட்டியின் நாணய சுழற்சி இடம்பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுக்கொண்ட விமானப்படை முதல் துடுப்பாட்ட சந்தர்ப்பத்தினை களுத்துறை நகர கழகத்திற்கு வழங்கியது.

இதன்படி, களமிறங்கிய அவ்வணி ஆரம்பம் முதலே விக்கெட்டுக்களை பறிகொடுத்து தமது முதல் இன்னிங்சுக்காக 44.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 147 ஓட்டங்களினை மாத்திரமே குவித்துக்கொண்டது.

இந்த துடுப்பாட்டத்தில் மத்திய தரவரிசை வீரராக களுத்துறை அணியின் தலைவர் சுலான் ஜயவர்தன மாத்திரம் 30 ஓட்டங்களினை குவித்துக்கொண்டதுன், தனது வேகப்பந்து வீச்சு மூலம் மிரட்டியிருந்த அச்சிர எரங்க 4 விக்கெட்டுக்களையும், புத்திக்க சந்தருவன் 3 விக்கெட்டுக்களையும் விமானப்படைக்காக கைப்பற்றியிருந்தனர்.

பின்னர், முதல் இன்னிங்சினை ஆரம்பித்த விமானப்படை 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 78 ஓட்டங்களினைப் பெற்றிருந்த போது, இப்போட்டியின் இன்றைய ஆட்ட நேரம் நிறைவுற்றது.

போட்டியின் சுருக்கம்

களுத்துறை நகர கழகம்: 147 (44.1) சுலான் ஜயவர்தன 30, மங்கல குமார 24, அச்சிர எரங்க 56/4, புத்திக்க சந்தருவன் 20/3

இலங்கை விமானப்படை விளையாட்டு கழகம்: 78/4 (20)

போட்டியின் மூன்றாவது மற்றும் இறுதி நாள் ஆட்டம் நாளை தொடரும்


இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் எதிர் இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகம்

போட்டியின் இரண்டாம் நாளான இன்று, 171 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுக்களை இழந்தவாறு தமது முதல் இன்னிங்சினை தொடர்ந்த இலங்கை துறைமுக அதிகாரசபை அணியானது, மத்தியவரிசை, பின்வரிசை வீரர்களின் மந்தமான துடுப்பாட்டத்தின் காரணமாக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 260 ஓட்டங்களினை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

நேற்றைய துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயற்பட்டிருந்த யோஹன் டி சில்வா 96 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சதமடிக்கத் தவறினார். பந்து வீச்சில் திறம்பட செயற்பட்டிருந்த இஷான் அபசேகர 3 விக்கெட்டுக்களையும், தினுஷ்க மாலன் 2 விக்கெட்டுக்களையும் மொத்தமாக கடற்படையின் சார்பில் சாய்த்திருந்தனர்.

பின்னர், தமது முதல் இன்னிங்சினை தொடங்கிய கடற்படை அணியானது மதுர மதுரசங்கவின் அரைச்சதம்(56), புத்திக்க ஹஸரங்க ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட அரைச்சதம்(57) என்பவற்றின் உதவியுடன் 4 விக்கெட்டுக்களை இழந்து 143 ஓட்டங்களினை பெற்றிருந்த வேளையில், போட்டி போதிய வெளிச்சம் இன்மை காரணமாக நிறுத்தப்பட்டது. தொடர்ந்தும் இதே நிலை நீடித்த காரணத்தினால் போட்டியின் ஆட்ட நேரம் முடிவுற்றதாக மத்தியஸ்தர்களால் அறிவிக்கப்பட்டது.

இன்று பறிபோன விக்கெட்டுக்களை ஆளுக்கு இரண்டு வீதம் துறைமுக அதிகார சபை அணியின், சாணக்க கோமசரு, சமிகர எதிரிசிங்க ஆகியோர் பகிர்ந்து கொண்டனர்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை துறைமுக அதிகார சபை விளையாட்டுக் கழகம்: 260 (93.2) யோஹன் டி சில்வா 96, ரனேஷ் பெரேரா 36, இஷான் அபயசேகர 58/3, தினுஷ்க மாலன் 38/2

இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகம்: 143/4 (50) புத்திக்க ஹஸரங்க 57*, மதுர மதுசங்க 56, சமிகர எதிரிசிங்க 29/2

போட்டியின் மூன்றாவது மற்றும் இறுதி நாள் நாளை தொடரும்