இன்று, இரண்டாம் நாளாக இலங்கை பிரிமியர் லீக் B மட்டத்திலான மூன்று போட்டிகள் நடைபெற்றன. குருநாகல இளையோர் கிரிக்கெட் கழகம் மற்றும் களுத்துறை பௌதீக கலாச்சார கழக அணிகளுக்கிடையிலான போட்டியில் களுத்துறை அணி வெற்றிபெற 6 விக்கெட்டுகள் எஞ்சிய நிலையில் இன்னும் 68 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது.

முதல் இன்னிங்சில் 96 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்த பொலிஸ் அணி இரண்டாம் இன்னிங்சில் 93 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களால் பின்னிலை பெற்ற நிலையில் இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க போராடி வருகிறது.

இலங்கை விமானப்படை விளையாட்டு கழகம் மற்றும் லங்கன் கிரிக்கெட் கழகம் ஆகிய அணிகள் சமபலம் கொண்ட அணிகளாக இருக்கின்றபடியால் போட்டி சமநிலையில் முடியும் நிலையே காணப்படுகிறது.

விறுவிறுப்பான ஆட்டத்தின் பின் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த பாணதுறை, களுத்துறை நகர கழக போட்டி

குருநாகல இளையோர் கிரிக்கெட் கழகம் எதிர் களுத்துறை பௌதீக கலாச்சார கழகம்

இரண்டாம் நாளாக தொடர்ந்த இந்தபோட்டியில் 143 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் ஆட்டத்தினை ஆரம்பித்த களுத்துறை பௌதீக கலாச்சார கழகம் இன்றைய நாள் 54 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 192 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

அணியின் சார்பாக கூடிய ஓட்டங்களாக பதிவு செய்த பத்தும் நிஸ்ஸங்க 64 ஓட்டங்களுடன் நேற்றே ஆட்டமிழந்திருந்ததுடன் அதன் பின்னர் துடுப்பாட வந்த ஏனையோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து சென்றனர். எனினும் ஒன்பதாவது விக்கெட்டுக்காக களமிறங்கிய சதுர தமித் 27 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். அத்துடன் தில்ஷான் மென்டிஸ் ஆட்டமிழக்காமல் 23 ஓட்டங்களைப் பெற்று ஓட்ட எண்ணிக்கையை சற்று உயர்த்தினார். பந்து வீச்சில் நேற்றைய தினம் ஏற்கனவே மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த ருவந்த ஏக்கநாயக்க இன்றைய தினம் மேலும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி மொத்தமாக 40 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை பெற்றுக்கொண்டார். சமிந்த பத்திரன மற்றும் சரங்க ராஜகுரு தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதன்படி 5 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற குருநாகல இளையோர் கிரிக்கெட் கழகம் தமக்கு கிடைத்த இரண்டாவது வாய்ப்பை சரியாக பயன்படுத்தாமையினால் இரண்டாம் இன்னிங்ஸில் 151 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஷ்க தர்மசிறி 39 ஓட்டங்களையும், ஹஷான் பிரபாத் ஆட்டமிழக்காமல் 39 ஓட்டங்களையும் கூடிய ஓட்டங்களாக பதிவு செய்த போதிலும் மறுமுனையில் ஏனையோர் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றனர்.

எனினும், முதல் இன்னிங்சில் 82 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட ஹஷான் பிரபாத் இரண்டாவது இன்னிங்சில் இறுதி வரை போராடி ஆட்டமிழக்காமல் 39 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய ரமேஷ் செல்வராஜ் இரண்டாவது இன்னிங்ஸில் 71 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை மாத்திரமே வீழ்த்தினார். அத்துடன், முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டினை வீழ்த்திய ரசிக பெர்னாண்டோ இரண்டாவது இன்னிங்சில் 46 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்படி ஒரு நாள் எஞ்சிய நிலையில், 156 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய களுத்துறை பௌதீக கலாச்சார கழகம் இன்றைய நாள் நிறைவின் போது 27 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து 88 ஓட்டங்களை பெற்ற நிலையில் உள்ளது. நான்காவது விக்கெட்டுக்காக களமிறங்கிய சத்துர தமித் ஆட்டமிழக்காமல் 33 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

தோல்வியினை தவிர்த்துக்கொள்ள போராடும் நிலையில், குருநாகல இளையோர் கிரிக்கெட் கழகம் சார்பாக சிறப்பாக பந்து வீசிய மிதுன் ஜெயவிக்ரம 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தி களுத்துறை பௌதீக கலாச்சார கழகதை அச்சுறுத்தினார்.

இன்னும் 6 விக்கெட்டுகள் எஞ்சிய நிலையில் வெற்றி பெறுவற்கு 68 ஓட்டங்ள் தேவைப்படுகின்ற நிலையில் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுற்றது.    

போட்டியின் சுருக்கம்

குருநாகல இளையோர் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 197 (55.4) – ஹஷான் பிரபாத் 82, ருவந்த ஏக்கநாயக்க 46, தர்ஷன மஹவத்த 30, சாரங்க ராஜகுரு 19, ரமேஷ் செல்வராஜ் 63/6

களுத்துறை பௌதீக கலாச்சார கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 192 (54)  – பத்தும் நிஸ்ஸங்க 64, சதுர தமித் 27, பஹாட் பாபர் 24, தில்ஷான் மென்டிஸ் 23, ருவந்த ஏக்கநாயக்க 40/5, சாரங்க ராஜகுரு 20/2, சமிந்த பத்திரன 30/2

குருநாகல இளையோர் கிரிக்கெட் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 151 (40.4) – ஹஷான் பிரபாத் 39*, தனுஷ்க தர்மசிறி 39, சாரங்க ராஜகுரு 33, தாரக வடுகே 11, ரசிக பெர்னாண்டோ 46/3, ரமேஷ் செல்வராஜ், 71/3, பஹாட் பாபர் 7/2

களுத்துறை பௌதீக கலாச்சார கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 88/4 (27) –  சதுர தமித் 33*, தமிண்து அஷான் 12, பஹாட் பாபர் 13, மிதுன் ஜெயவிக்ரம 13/2, சரித் மாபடுன 22/1, ருவந்த ஏக்கநாயக்க 17/1


இலங்கை கடற்படை விளையாட்டு கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டு கழகம்

முதலாம் நாள் 289 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்த இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகம் இன்றைய நாள் மேலும் 87 ஓட்டங்களால் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தியதோடு, 117.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து மொத்தமாக 376 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. சிறப்பாக துடுப்பாடிய குசல் எதுசூரிய 145 ஓட்டங்களையும் இஷான் அபேசேகர ஆட்டமிழக்காமல் 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.  

பந்து வீச்சில் நேற்றைய நாள் 76 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த சுவஞ்சி மதநாயக்க இன்று, மொத்தமாக 108 ஓட்டங்களைக் கொடுத்து மேலும் இரண்டு விக்கெட்டுகளை பெற்றுகொண்டார். கயந்த விஜயதிலக்க, மகேஷ் பிரியதர்ஷன, சசிந்து பெரேரா மற்றும் துஷிற மதனயக்க தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பாடக் களமிறங்கிய பொலிஸ் விளையாட்டு கழகம் 36.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 96 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. அசேல அழுத்கே மற்றும் மகேஷ் பிரியதர்ஷன கூடிய ஓட்டங்களாக முறையே 23, 22 ஓட்டங்களைப் பதிவு செய்துகொண்டனர். ஏனையோர் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சென்றனர்.

280 ஓட்டங்களால் பின்னிலை பெற்ற நிலையில் பொலிஸ் விளையாட்டுக் கழகம் மீண்டும் களமிறங்கி, இன்றைய நாள் நிறைவின் போது 24 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 93 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட அதே நேரம், 187 ஓட்டங்களால் பின்னிலை அடைந்த நிலையில் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் காணப்படுகிறது.

பந்து வீச்சில் இலங்கை கடற்படை விளையாட்டு கழகம் சர்பாக பந்து வீசிய அஷான் ரணசிங்க முதல் இன்னிங்சில் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளையும், இரண்டாம் இன்னிங்சில் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை கடற்படை விளையாட்டு கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 376 (117.2) – குசல் எதுசூரிய 145, இஷான் அபேசேகர 46*, புத்திக்க ஹசரங்க 55, சுவஞ்சி மதநாயக்க 108/5, கயந்த விஜயதிலக்க 63/1, மகேஷ் பிரியதர்ஷன 83/1, சசிந்து பெரேரா 57/1, துஷிற மதனயக்க 16/1

பொலிஸ் விளையாட்டு கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 96 (36.1) – அசேல அழுத்கே 23, மகேஷ் பிரியதர்ஷன 22, சமித் துசந்த 10, ஹேஷான் பெரேரா 10, அஷான் ரணசிங்க 20/3, திலங்க ஆவர்ட் 25/2, டினுஷ்க மாலன் 4/2

பொலிஸ் விளையாட்டு கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 93/5 (24) – சமித் துசந்த 32*, தறிந்து டில்ஷான் 18, அகில லக்ஷான் 19, ஹேஷான் பெரேரா 7*, அஷான் ரணசிங்க 16/2, டினுஷ்க மாலன் 24/1, மதுர மதுசங்க 6/1, இஷான் அபேசேகர 31/1


இலங்கை விமானப்படை விளையாட்டு கழகம் எதிர் லங்கன் கிரிக்கெட் கழகம்

நேற்றைய நாள் போட்டி நிறைவின் போது 30 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டினை இழந்த நிலையில் போட்டியை ஆரம்பித்த லங்கன் கிரிக்கெட் கழகம் முதல் இன்னிங்சுகாக, 86.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 315 ஓட்டங்களை பெற்று 85 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுக்கொண்டது.

சிறப்பாக துடுப்பாடிய ரஜீவ வீரசிங்க ஆட்டமிழக்காமல் 77 ஓட்டங்களை பெற்ற அதே நேரம் மதுரங்க சொய்சா 68 ஒட்டங்களை லங்கன் கிரிக்கெட் கழகம் சார்பாக பதிவு செய்திருந்தனர்.

சிறப்பாக பந்து வீசிய நிலான் பிரியநாத் 64 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அத்துடன் லஹிறு லக்மால் 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைப் பெற்றுக்கொண்டார். சஹான் ஜயவர்தன, புத்திக்க சந்தருவன், ஹஷான் ஜேம்ஸ் மற்றும் லக்ஷான் பெர்னாண்டோ தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.

85 ஓட்டங்கள் பின்னிலை பெற்ற நிலையில் களமிறங்கிய இலங்கை விமானப்படை விளையாட்டு கழகம் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் இருவரையும் 7 ஓட்டங்களுக்குள் இழந்து அதிர்ச்சிக்குள்ளானது. எனினும் அதனை தொடர்ந்து களமிறங்கிய ஹஷான் ஜேம்ஸ் மற்றும் லஹிறு ஸ்ரீ லக்மால் இன்றைய நாள் ஆட்டம் நிறைவு பெறும் வரை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியதோடு ஆட்டமிழக்காமல் முறையே 8,14 ஓட்டங்களை பெற்று களத்தில் இருந்தனர்.

சிறப்பாக பந்து வீசிய நவீன் கவிகார மற்றும் ரஜீவ வீரசிங்க தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர். இன்னும் 56 ஓட்டங்களால் பின்னிலை பெற்றுள்ள இலங்கை விமானப்படை விளையாட்டு கழகம் போட்டியினை சமப்படுத்த கடுமையாகப் போராடவேண்டிய நிலையில் இருக்கும் அதே சமயம் நாளை போட்டியின் இறுதி நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை விமானப்படை விளையாட்டு கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 230 (73) – அசிர எறங்க 59, ரங்க திசாநாயக்க 41, லஹிறு ஸ்ரீ லக்மால் 36, ஹஷான் ஜேம்ஸ் 32, நவீன் கவிகார 63/5, ஷிரான் பெர்னாண்டோ 47/3, ரஜீவ வீரசிங்க 70/2

லங்கன்  கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 315 (86.4) – ரஜீவ வீரசிங்க  77*, மதுரங்க சொய்சா 68, லால் குமார் 35, பசிந்து பிம்சார 18, நிலான் பிரியநாத் 64/4, லஹிறு லக்மால் 40/2, சஹன் ஜயவர்தன 31/1

இலங்கை விமானப்படை விளையாட்டு கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 29/2 (12) – ஹஷான் ஜேம்ஸ் 8*, லஹிறு ஸ்ரீ லக்மால் 14*, நவீன் கவிகார 12/1, ரஜீவ வீரசிங்க 11/1

Points Table