சச்சித்ர சேரசிங்கவின் சதத்தால் சிலாபம் மேரியன்ஸ் ஆதிக்கம்

136

இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் 2017/18 ஆம் ஆண்டுக்கான உள்ளூர் பருவத்திற்கான பிரீமியர் லீக் A நிலை தொடரின் இரு முக்கிய போட்டிகள் இன்று (02) ஆரம்பமாகின.

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் பதுரெலிய விளையாட்டுக் கழகம்

பிரீமியர் லீக் தொடரின் B குழுவில் முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கும் சிலாபம் மேரியன்ஸ் கழகம் மீண்டும் ஒரு முறை தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடும் சிலாபம் மேரியன்ஸ் அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 356 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் உள்ளது.

பதுரெலிய விளையாட்டுக் கழகம் 68 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி கொடுத்தபோதும் சிலாபம் மேரியன்ஸ் அணியின் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர் சச்சித்ர சேரசிங்க சிறப்பாக ஆடி சதம் பெற்றார். 138 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 12 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 103 ஓட்டங்களை பெற்றார். அதே போன்று புலின தரங்க நிதானமாக ஆடி 70 ஓட்டங்களை பெற்றார்.

பதுரெலிய விளையாட்டுக் கழகம் சார்பில் அணித் தலைவர் அலங்கார அசங்க 4 விக்கெட்டுகளை  வீழ்த்தினார். இவர் கடந்த வாரம் நடந்த இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகத்திற்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகளை பதம்பார்த்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்   

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 356/9 (84) – சச்சித்ர சேரசிங்க 103, புலின தரங்க 70, இசுரு உதான 41, மலிந்த புஷ்பகுமார 31, அலங்கார அசங்க 4/74, டிலேஷ் குணரத்ன 3/76, துவிந்து திலகரத்ன 2/80


SSC எதிர் கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்

கொழும்பு கோல்ட்ஸ் கழக மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழத்தை SSC பந்துவீச்சாளர்கள் 267 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தினர். சிறப்பாக பந்து வீசிய ஆகாஷ் சேனாரத்ன கோல்ட்ஸ் அணிக்கு நெருக்கடி கொடுத்து 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

பாடசாலை கிரிக்கெட் செயற்திட்டம் மஹேலவினால் வெளியீடு

நாணய சுழற்சியில் வென்ற SSC அணித் தலைவர் சச்சித்ர சேனநாயக்க எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தார். இதன்படி களமிறங்கிய கோல்ட்ஸ் அணி ஆரம்ப விக்கெட்டை 13 ஓட்டங்களுக்கு இழந்ததோடு மேலும் 13 ஓட்டங்களை பெறுவதற்குள் அடுத்த விக்கெட்டையும் பறிகொடுத்தது.

எனினும் அணித் தலைவர் டில்ருவன் பெரேரா 3 ஆவது விக்கெட்டுக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சங்கீத் பெரேராவுடன் சேர்ந்து 64 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டார். குரே 53 ஓட்டங்களுக்கும், பெரேரா 45 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழக்க கோல்ட்ஸ் அணியின் பின்வரிசை வீரர்கள் விக்கெட்டை காத்துக்கொண்டு துடுப்பாடத் தவறினர்.

பின்னர் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை ஆரம்பித்த SSC அணி முதல் நாள் ஆட்ட நேர முடியில் 23 ஓட்டங்களை பெற்றுள்ளது.

போட்டியின் சுருக்கம்

கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 267 (82.3) – சங்கீத் குரே 53, டில்ருவன் பெரேரா 45, கவிஷ்க அஞ்சுல 37*, பிரியமால் பெரேரா 32, அவிஷ்க பெர்னாண்டோ 32, விஷாத் ரன்திக்க 21, நிசல தாரக்க 20, ஆகாஷ் சேனாரத்ன 4/76, சச்சித்ர சேனநாயக்க 3/70, கசுன் மதுஷங்க 2/53

SSC (முதல் இன்னிங்ஸ்) – 23/0 (5) – திமுத் கருணாரத்ன 8*

நாளை போட்டிகளின் இரண்டாம் நாள் ஆட்டம் தொடரும்.