ஷெஹான் ஜயசூரிய 237: சிலாபம் மேரியன்ஸ் அணிக்கு இலகு வெற்றி

269
Club Cricket

இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் பிரீமியர் லீக் தொடரின் ‘A’ மட்டத்திற்கான போட்டிகளில் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் மற்றும் SSC கழக அணிகள் வெற்றிகளை சுவீகரித்துக் கொண்டன.

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம்

இப்போட்டி புளூம்பீல்ட் கழக மைதானத்தில் இடம்பெற்றதுடன், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடியது.

தொடக்க வீரர் ஷெஹான் ஜயசூரிய 49 ஓட்டங்களை பெற்று சிறந்த ஆரம்பம் ஒன்றை பெற்றுக் கொடுத்தார். அத்துடன் கீழ்வரிசை வீரர் அரோஷ் ஜனோத அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 55 பந்துகளில் 4 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 80 ஓட்டங்களை விளாசினார்.

இவர் 9ஆவது விக்கெட்டிற்காக மதுக லியனபதிரனகேவுடன் 105 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துகொள்ள, சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் முதல் இன்னிங்சுக்காக 291 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பந்து வீச்சில் அசத்திய சுழற்பந்து வீச்சாளர் லஹிரு பெர்னாண்டோ 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் மலிந்த புஷ்பகுமாரவின் திறமையான சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள இயலாத நிலையில் 136 ஓட்டங்களுக்கு சுருண்டது. மலிந்த புஷ்பகுமார 78 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அத்துடன் சச்சித்ர சேரசிங்க 3 விக்கெட்டுகளை பெற்றுக் கொண்டார். துடுப்பாட்டத்தில் அதீஷ நாணயக்கார அதிகபட்சமாக 32 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

155 ஓட்டங்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த சிலாபம் மேரியன்ஸ் அணி, ஷெஹான் ஜயசூரியவின் அபார இரட்டை சதத்தின் உதவியுடன் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 437 ஓட்டங்களை குவித்திருந்த போது ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.

அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ஷெஹான் ஜயசூரிய 218 பந்துகளில் 27 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உள்ளடங்கலாக 237 ஓட்டங்களை விளாசினார். மேலும் அணித்தலைவர் மஹேல உடவத்த 63 ஓட்டங்களையும் சச்சித்ர சேரசிங்க 55 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர். பந்துவீச்சில் ஷஷ்ரிக புஸ்ஸேகொல்ல 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இதன்படி புளூம்பீல்ட் அணிக்கு 593 என்ற பாரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இம்முறை சிலாபம் மேரியன்ஸ் விளையாட்டுக் கழகத்தின் மற்றுமொரு சுழற்பந்து வீச்சாளரான மதுக லியனபதிரனகே 5 விக்கெட்டுகளை வீழ்த்த, புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் 214 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. துடுப்பாட்டத்தில் லஹிரு ஜயகொடி அதிகபட்சமாக 70 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

போட்டியின் சுருக்கம்

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 291 (60.5) – அரோஷ் ஜனோத 80, ஷெஹான் ஜயசூரிய 49, மஹேல உடவத்த 38, லஹிரு பெர்னாண்டோ 6/93, வினோத் பெரேரா 2/30, மலித் டி சில்வா 2/48

புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 136 (53.2) – அதீஷ நாணயக்கார 32, லஹிரு ஜயகொடி 21, மலிந்த புஷ்பகுமார 5/78, சச்சித்ர சேரசிங்க 3/29

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 437/6d (81.1) – ஷெஹான் ஜயசூரிய 237, மஹேல உடவத்த 63, சச்சித்ர சேரசிங்க 55, ஷஷ்ரிக்க புஸ்ஸேகொல்ல 3/139

புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 214 (54.4) – லஹிரு ஜயகொடி 70, மதுக லியனபதிரனகே 5/86

முடிவு: சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் 378 ஓட்டங்களினால் வெற்றி.

அணிகள் பெற்றுக் கொண்ட புள்ளிகள்

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 18.455

புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம்  – 4.15


SSC கழகம் எதிர் காலி கிரிக்கெட் கழகம்

இவ்விரண்டு அணிகளுக்கிடையிலான போட்டி நேற்று முன்தினம் காலி கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வென்ற காலி கிரிக்கெட் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

எனினும் சிறப்பாக பந்து வீசிய SSC அணியின் பந்து வீச்சாளர்கள் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை வீழ்த்த, காலி கிரிக்கெட் கழகம் 128 ஓட்டங்களுக்கே சுருண்டது. தரிந்து ரத்நாயக்க 25 ஓட்டங்களை மாத்திரம் வழங்கி 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். துடுப்பாட்டத்தில் டில்ஹான் குரே அதிகபட்சமாக 50 ஓட்டங்கள் குவித்தார்.

அடுத்து தமது முதல் இன்னிங்சிற்காக களமிறங்கிய SSC அணி சார்பில் மினோத் பானுக 21 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 148 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். மேலும் இளம் வீரர் சரித் அசலங்க 76 ஓட்டங்களையும் தசுன் ஷானக 50 ஓட்டங்களையும் குவிக்க, SSC அணி 92.5 ஓவர்களில் 379 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. காலி கிரிக்கெட் கழகம் சார்பாக பந்துவீச்சில் ருவன் ஹேரத் மற்றும் ரொஷான் ஜயதிஸ்ஸ ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

251 ஓட்டங்கள் பின்னிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த காலி கிரிக்கெட் கழகத்தின் தொடக்க வீரர் மின்ஹாஜ் ஜலீல் 144 ஓட்டங்கள் குவித்து சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்தார். எவ்வாறாயினும் மற்றைய வீரர்களில் சதுரங்க டி சில்வா மாத்திரமே 60 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட காரணத்தினால், அவ்வணி 312 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

பந்துவீச்சில் SSC கழகத்தின் தரிந்து ரத்நாயக்க 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்படி SSC அணிக்கு 62 என்ற இலகுவான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

காலி கிரிக்கெட் கழகத்தின் ரொஷான் ஜயதிஸ்ஸ அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதனால் சற்று தடுமாறிய போதிலும், SSC அணி 14.1 ஓவர்களில் வெற்றிகரமாக இலக்கைக் கடந்தது.

போட்டியின் சுருக்கம்

காலி கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 128 (59.1) – டில்ஹான் குரே 50, தரிந்து ரத்நாயக்க 4/25, சச்சித்ர சேனநாயக்க 2/30, விமுக்தி பெரேரா 2/35

SSC கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 379 (92.5) – மினோத் பானுக 148, சரித் அசலங்க 76, தசுன் ஷானக 50, ருவன் ஹேரத் 3/44, ரொஷான் ஜயதிஸ்ஸ 3/93

காலி கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 312 (70.4) – மின்ஹாஜ் ஜலீல் 144, சதுரங்க டி சில்வா 60, தரிந்து ரத்நாயக்க 3/104

SSC கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 66/5 (14.1) – கவிந்து குலசேகர 23*, ரொஷான் ஜயதிஸ்ஸ 3/28

முடிவு: SSC கழகம் 5 விக்கெட்டுகளினால் வெற்றி.

அணிகள் பெற்றுக் கொண்ட புள்ளிகள்

SSC கழகம் – 17.225

காலி கிரிக்கெட் கழகம் – 4.45


செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் இலங்கை இராணுவ விளையாட்டுக் கழகம்

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் இலங்கை இராணுவ விளையாட்டுக் கழக அணிகள் மோதிக்கொண்ட இப்போட்டி சோனகர் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய செரசன்ஸ் விளையாட்டுக் கழகம், மிலிந்த சிறிவர்தனவின் சதத்தின் உதவியுடன் 358 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. மேலும் உமேஷ் கருணாரத்ன 49 ஓட்டங்களையும், ஹர்ஷ குரே 43 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் இராணுவ விளையாட்டுக் கழகத்தின் துஷான் விமுக்தி மற்றும் விராஜ் புஷ்பகுமார ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

அடுத்து துடுப்பெடுத்தாடிய இராணுவ விளையாட்டுக் கழகம் சார்பாக தொடக்க வீரர் லக்ஷித மதுஷான் சிறப்பான துடுப்பாட்டத்தில் ஈடுபட்டார். அவர் 152 ஓட்டங்கள் பெற்றுக் கொள்ள, இராணுவ அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 361 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.

மேலும் இராணுவ அணியின் டில்ஷான் டி சொய்சா 69 ஓட்டங்களையும், கசுன் டி சில்வா 43 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட செரசன்ஸ் விளையாட்டுக் கழகத்தின் சுராஜ் ரந்திவ் 6 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

3 ஓட்டங்கள் பின்னிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த செரசன்ஸ் அணியினர் துரிதமாக ஓட்டங்கள் குவிப்பதில் கவனம் செலுத்தினர். தொடக்க வீரர் சங்கீத் குரே 78 ஓட்டங்கள் விளாச, அவ்வணி 23 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 179 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.

இராணுவ விளையாட்டுக் கழகத்திற்கு 44 ஓவர்களில் 177 என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்ட போதிலும், இலக்கை கடப்பதில் ஆர்வம் காட்டாத அவ்வணியின் வீரர்கள் போட்டி நிறைவடையும் போது 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ஓட்டங்களை பெற்றிருந்தனர். துடுப்பாட்டத்தில் துஷான் விமுக்தி 55 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதுடன், பந்துவீச்சில் மீண்டும் சிறப்பித்த சுராஜ் ரந்திவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்படி போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

போட்டியின் சுருக்கம்

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 358 (87.2) – மிலிந்த சிறிவர்தன 121, உமேஷ் கருணாரத்ன 49, ஹர்ஷ குரே 43, விராஜ் புஷ்பகுமார 3/72, துஷான் விமுக்தி 3/118

இராணுவ விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 361 (116.2) – லக்ஷித மதுஷான் 152, டில்ஷான் டி சொய்சா 69, கசுன் டி சில்வா 43, சுராஜ் ரந்திவ் 6/85

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 179/5d (23) – சங்கீத் குரே 78*, துஷான் விமுக்தி 3/72

இராணுவ விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 146/5 (44) – துஷான் விமுக்தி 55, லக்ஷித மதுஷான் 43, சுராஜ் ரந்திவ் 3/60

முடிவு: போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

அணிகள் பெற்றுக் கொண்ட புள்ளிகள்

இராணுவ விளையாட்டுக் கழகம் – 12.785

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் – 4.935


கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் BRC கழகம்

இவ்விரண்டு அணிகளுக்கிடையிலான போட்டி நேற்று முன்தினம் கொழும்பு கிரிக்கெட் கழக மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற கொழும்பு கிரிக்கெட் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அபாரமாக துடுப்பெடுத்தாடி எதிரணியை துவம்சம் செய்த டில்ஷான் முனவீர 21 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 191 ஓட்டங்கள் விளாச, கொழும்பு கிரிக்கெட் கழகம் சகல விக்கெட்டுகளையும் இழந்து 326 ஓட்டங்களை குவித்துக் கொண்டது. பந்து வீச்சில் BRC கழகத்தின் தினுக ஹெட்டியாரச்சி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்து ஆடுகளம் பிரவேசித்த BRC அணி திலகரத்ன சம்பத்தின் சதம் (123) மற்றும் லசித் லக்ஷான் (61), ஹர்ஷ விதான (51) ஆகியோரின் அரைச்சதங்களின் உதவியுடன் 465 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் கொழும்பு கிரிக்கெட் கழகத்தின் ஷாலுக சில்வா 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

139 ஓட்டங்கள் பின்னிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த கொழும்பு கிரிக்கெட் கழகம் இன்றைய ஆட்ட நேர முடிவின் போது 7 விக்கெட்டுகளை இழந்து 222 ஓட்டங்களை பெற்று போட்டியை சமநிலையில் நிறைவு செய்து கொண்டது.

ரொன் சந்திரகுப்த ஆட்டமிழக்காது 102 ஓட்டங்களை பெற்றிருந்ததுடன், லசித் அபேரத்ன 41 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். BRC அணியின் ஹஷென் ராமநாயக்க மற்றும் நிரஞ்சன் வன்னியாரச்சி 2 விக்கெட்டுகள் வீதம் சாய்த்தனர்.

போட்டியின் சுருக்கம்

கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 326 (72.1) – டில்ஷான் முனவீர 191, தினுக ஹெட்டியாரச்சி 6/137, அண்டி சொலமன்ஸ் 3/70

BRC கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 465 (118.4) – திலகரத்ன சம்பத் 123, அண்டி சொலமன்ஸ் 63, லசித் லக்ஷான் 61, ஹர்ஷ விதான 51, லிசுல லக்ஷான் 45, ரமேஷ் புத்திக 44, ஷாலுக சில்வா 3/86

கொழும்பு கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 222/7 (61) – ரொன் சந்திரகுப்த 102*, லசித் அபேரத்ன 41, ஹஷென் ராமநாயக்க 2/22, நிரஞ்சன் வன்னியாரச்சி 2/57

முடிவு: போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

அணிகள் பெற்றுக் கொண்ட புள்ளிகள்

BRC கழகம் – 12.55

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 4.24


கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் ராகம கிரிக்கெட் கழகம்

இவ்விரண்டு அணிகளுக்கிடையிலான போட்டி NCC மைதானத்தில் இடம்பெற்றதுடன், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

தொடக்க வீரர் சதீர சமரவிக்ரம 96 ஓட்டங்களையும் அகில தனஞ்சய 92 ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள, கோல்ட்ஸ் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 366 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. அத்துடன் கீழ்வரிசை வீரர் பிரபாத் ஜயசூரிய சிறப்பாக துடுப்பெடுத்தாடி 79 ஓட்டங்களை குவித்தார். இதேவேளை பந்துவீசில் பிரகாசித்த அமில அபொன்சோ 85 ஓட்டங்களை வழங்கி 7 விக்கெட்டுகளை கைப்பற்றிக் கொண்டார்.

இதனை தொடர்ந்து ஆடுகளம் பிரவேசித்த ராகம கிரிக்கெட் கழகம் எதிரணி பெற்றுக் கொண்ட அதே ஓட்ட எண்ணிக்கையான 366 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. தொடர்ந்து துடுப்பாட்டத்தில் அசத்தி வரும் உதார ஜயசுந்தர 144 ஓட்டங்களை குவித்தார்.

அத்துடன் அணித்தலைவர் லஹிரு திரிமான 70 ஓட்டங்களையும், ரொஷேன் சில்வா 65 ஓட்டங்களையும் பெற்று அணிக்கு வலுவளித்தனர். பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட நிசல தாரக 70 ஓட்டங்களை வழங்கி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்து கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் தமது இரண்டாவது இன்னிங்சிற்காக 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ஓட்டங்களை பெற்றிருந்தது. மீண்டும் அபாரமாக துடுப்பெடுத்தாடிய சதீர சமரவிக்ரம ஆட்டமிழக்காது 112 ஓட்டங்களை குவித்தார். அதன்படி போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

போட்டியின் சுருக்கம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 366 (113.4) – சதீர சமரவிக்ரம 96, அகில தனஞ்சய 92, பிரபாத் ஜயசூரிய 79, விஷாத் ரந்திக 53, அமில அபொன்சோ 7/85

ராகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 366 (115.4) – உதார ஜயசுந்தர 144, லஹிரு திரிமான 70, ரொஷேன் சில்வா 65, நிசல தாரக 5/70, இஷான் ஜயரத்ன 3/63

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 170/2 (34.3) – சதீர சமரவிக்ரம 112*, சதுர பீரிஸ் 2/54

முடிவு: போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

அணிகள் பெற்றுக் கொண்ட புள்ளிகள்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 8.18

ராகம கிரிக்கெட் கழகம் – 7.63