இலங்கை பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் ‘A’ மட்டத்திற்கான போட்டிகளில் ராகம கிரிக்கெட் கழகம், பதுரேலிய விளையாட்டுக் கழகம் மற்றும் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழக அணிகள் வெற்றிகளை சுவீகரித்தன.

இராணுவ விளையாட்டுக் கழகம் மற்றும் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழக அணிகள் வெற்றிகளை தவறவிட்டதுடன், அப்போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்தன.

SSC கழகம் எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம்

இவ்விரண்டு அணிகளுக்கிடையிலான போட்டி நேற்று முன்தினம் கட்டுநாயக்கவில் ஆரம்பமானதுடன், நாணய சுழற்சியில் வென்ற சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

தொடர்ந்து அபார பந்துவீச்சின் மூலம் அசத்தி வரும் ஜெப்ரி வெண்டர்சே 5 விக்கெட்டுகளை கைப்பற்ற, சிலாபம் மேரியன்ஸ் அணி 193 ஓட்டங்களுக்கு சுருண்டது. தொடக்க வீரர்களான அஷென் சில்வா 61 ஓட்டங்களையும் ஷெஹான் ஜயசூரிய 45 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

அதற்கு பதிலளிக்கும் முகமாக களமிறங்கிய SSC அணியை, இடதுகை சுழற்பந்துவீச்சாளரான மலிந்த புஷ்பகுமார தனது பந்துவீச்சினால் துவம்சம் செய்தார். அவர் 52 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை பதம்பார்க்க, SSC கழகம் 179 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

அவ்வணியின் ரமேஷ் மெண்டிஸ் ஆட்டமிழக்காது 53 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதுடன், தசுன் ஷானக 48 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். இதன்படி சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் முதல் இன்னிங்சில் 14 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றுக் கொண்டது.

தமது இரண்டாவது இன்னிங்சிற்காக ஆடுகளம் பிரவேசித்த சிலாபம் மேரியன்ஸ் அணி திக்ஷில டி சில்வா பெற்றுக் கொடுத்த 92 ஓட்டங்களின் உதவியுடன் 309 ஓட்டங்களை குவித்தது. மேலும் சச்சித்ர சேரசிங்க 73 ஓட்டங்களையும் ஷெஹான் ஜயசூரிய 50 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

மீண்டும் பந்துவீச்சில் பிரகாசித்த ஜெப்ரி வெண்டர்சே 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், இப்போட்டியில் மொத்தமாக 10 விக்கெட்டுகளை கைப்பற்றிக் கொண்டார். அதன்படி SSC அணிக்கு 324 என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

கோசல குலசேகர 68 ஓட்டங்களையும், துடுப்பாட்டத்திலும் திறமையை வெளிக்காட்டிய ஜெப்ரி வெண்டர்சே 69 ஓட்டங்களையும் குவித்து அணிக்கு நம்பிக்கையளித்தனர். எவ்வாறாயினும், மதுக லியனபதிரனகே மற்றும் மலிந்த புஷ்பகுமார 3 விக்கெட்டுகள் வீதம் சாய்க்க, SSC அணி 289 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 34 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது. மலிந்த புஷ்பகுமார இப்போட்டியில் மொத்தமாக 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம்

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 193 (54.1) – அஷென் சில்வா 61, ஷெஹான் ஜயசூரிய 45, ஜெப்ரி வெண்டர்சே 5/61

SSC கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 179 (65.3) – ரமேஷ் மெண்டிஸ் 53*, தசுன் ஷானக 48, மலிந்த புஷ்பகுமார 7/52, சச்சித்ர சேரசிங்க 3/26

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 309 (71.1) – திக்ஷில டி சில்வா 92, சச்சித்ர சேரசிங்க 73, ஷெஹான் ஜயசூரிய 50, ஜெப்ரி வெண்டர்சே 5/94, தரிந்து ரத்நாயக்க 3/86

SSC கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 289 (78.2) – ஜெப்ரி வெண்டர்சே 69, கோசல குலசேகர 68, தனுஷ்க குணதிலக 40*, மதுக லியனபதிரனகே 3/76, மலிந்த புஷ்பகுமார 3/92

முடிவு: சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் 34 ஓட்டங்களினால் வெற்றி

அணிகள் பெற்றுக் கொண்ட புள்ளிகள்

 • சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 17.51
 • SSC கழகம் – 5.34

காலி கிரிக்கெட் கழகம் எதிர் பதுரேலிய விளையாட்டுக் கழகம்

சர்ரே விலேஜ் மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பதுரேலிய விளையாட்டுக் கழகம் முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்தது.

சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்த நிலுஷன் நோனிஸ் மற்றும் தமித ஹுனுகும்புர முறையே 62 மற்றும் 55 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட போதிலும் மற்றைய வீரர்கள் பெரிதாக சோபிக்காத காரணத்தால், காலி கிரிக்கெட் கழகம் 218 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பந்துவீச்சில் அலங்கார அசங்க மற்றும் திலேஷ் குணரத்ன 3 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய பதுரேலிய விளையாட்டுக் கழகத்தின் அலங்கார அசங்க, நதீர நாவல மற்றும் சஹன் விஜேரத்ன ஆகியோர் அரைச்சதங்கள் கடக்க, அவ்வணி 316 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. அணித்தலைவர் அலங்கார அசங்க அதிகபட்சமாக 85 ஓட்டங்கள் குவித்தார். பந்து வீச்சில் சஜீவ வீரகோன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்படி 98 ஓட்டங்கள் பின்னிலையில் காலி கிரிக்கெட் கழகம் தமது இரண்டாவது இன்னிங்சை ஆரமபித்தது. நுவன் கருணாரத்ன மற்றும் திலேஷ் குணரத்ன 3 விக்கெட்டுகள் வீதம் பெற்றுக் கொள்ள, காலி கிரிக்கெட் கழகம் 233 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. அவ்வணி சார்பில் ஷாலிக கருணாநாயக்க அதிகபட்சமாக 81 ஓட்டங்கள் குவித்தார்.

136 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பதுரேலிய அணி 17.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியை சுவீகரித்துக் கொண்டது. சாலிய சமன் 54 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

போட்டியின் சுருக்கம்

காலி கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 218 (78.2) – நிலுஷன் நோனிஸ் 62, தமித ஹுனுகும்புர 55, அலங்கார அசங்க 3/44, திலேஷ் குணரத்ன 3/53

பதுரேலிய விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 316 (114.3) – அலங்கார அசங்க 85, நதீர நாவல 67, சஹன் விஜேரத்ன 56, சஜீவ வீரகோன் 5/96

காலி கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 233 (63.5) – ஷாலிக கருணாநாயக்க 81, திலேஷ் குணரத்ன 3/42, நுவன் கருணாரத்ன 3/59

பதுரேலிய விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 139/3 (17.5) – சாலிய சமன் 54

முடிவு: பதுரேலிய விளையாட்டுக் கழகம் 7 விக்கெட்டுகளினால் வெற்றி.

அணிகள் பெற்றுக் கொண்ட புள்ளிகள்

 • பதுரேலிய விளையாட்டுக் கழகம் – 17.275
 • காலி கிரிக்கெட் கழகம் – 4.205

BRC கழகம் எதிர் ராகம கிரிக்கெட் கழகம்

BRC மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற BRC கழகம் முதலில் துடுப்பெடுத்தாடியது.

பந்துவீச்சில் அசத்திய அமில அபொன்சோ 5 விக்கெட்டுகளை பதம்பார்க்க, BRC கழகம் 194 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் லசித் லக்ஷான் 46 ஓட்டங்களையும், பானுக ராஜபக்ஷ 44 ஓட்டங்களையும் குவித்தனர்.

தொடர்ந்து தமது முதல் இன்னிங்சிற்காக களமிறங்கிய ராகம அணியினர், ரொஷேன் சில்வாவின் 91 ஓட்டங்கள் மற்றும் ஜனித் லியனகேவின் 44 ஓட்டங்களின் உதவியுடன் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 254 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் கைவரிசையை காட்டிய திலகரத்ன சம்பத் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

60 ஓட்டங்கள் பின்னிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த BRC கழகம், இம்முறையும் மோசமான துடுப்பாட்டத்தின் காரணமாக 152 ஓட்டங்களுக்கே சுருண்டது. அவ்வணியின் 8 வீரர்கள் ஒற்றை இலக்கங்களுக்கு ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது.

அணித்தலைவர் ஹர்ஷ விதான அதிகபட்சமாக 47 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்துவீச்சில் அமில அபொன்சோ மற்றும் சஹன் நாணயக்கார 3 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

இதன்படி 93 என்ற சுலபமான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ராகம கிரிக்கெட் கழகம், 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்த நிலையில் இலக்கைக் கடந்து வெற்றியை தமதாக்கினர்.

போட்டியின் சுருக்கம்

BRC கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 194 (60.1) – லசித் லக்ஷான் 46, பானுக ராஜபக்ஷ 44, அமில அபொன்சோ 5/34, சஹன் நாணயக்கார 3/29

ராகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 254 (84.3) – ரொஷேன் சில்வா 91, ஜனித் லியனகே 44, திலகரத்ன சம்பத் 5/98, தினுக ஹெட்டியாரச்சி 3/92

BRC கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 152 (51) – ஹர்ஷ விதான 47*, பானுக ராஜபக்ஷ 45, ரமேஷ் புத்திக 39, சஹன் நாணயக்கார 3/35, அமில அபொன்சோ 3/31

ராகம கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 93/2 (19.3) – உதார ஜயசுந்தர 56*

முடிவு: ராகம கிரிக்கெட் கழகம் 8 விக்கெட்டுகளினால் வெற்றி.

அணிகள் பெற்றுக் கொண்ட புள்ளிகள்

 • ராகம கிரிக்கெட் கழகம் – 16.74
 • BRC கழகம் – 3.53

இராணுவ விளையாட்டுக் கழகம் எதிர் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்

இன்றைய தினம் விறுவிறுப்பாக முடிவடைந்த இப்போட்டி கோல்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்றதுடன், நாணய சுழற்சியில் வென்ற கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.

சீக்குகே பிரசன்ன, துஷான் விமுக்தி மற்றும் ஹிமாஷ லியனகே அரைச்சதங்கள் குவிக்க, இராணுவ அணி 297 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. சிறப்பாக பந்துவீசிய சரித் சுதாரக 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அதற்கு பதிலளிக்கும் முகமாக களமிறங்கிய கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம், ஒன்றன் பின் ஒன்றாக விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டதால் 112 ஓட்டங்களுக்கே சுருண்டது. விஷாத் ரந்திக அதிகபட்சமாக 36 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் நுவன் லியனபதிரன 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

185 ஓட்டங்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த இராணுவ விளையாட்டுக் கழகம், லியோ பிரான்சிஸ்கோ மற்றும் டில்ஷான் டி சொய்சா ஆகியோரின் 163 ஓட்டங்கள் இணைப்பாட்டத்தின் உதவியுடன் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 288 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.

லியோ பிரான்சிஸ்கோ ஆட்டமிழக்காது 116 ஓட்டங்களையும், டில்ஷான் டி சொய்சா 88 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். இதன்படி கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்திற்கு 474 என்ற பாரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

எனினும் அபாரமான துடுப்பாட்டத்துடன், துரிதமாக ஓட்டங்கள் குவித்த கோல்ட்ஸ் அணி வீரர்கள் வெற்றி இலக்கை நெருங்கி வந்தனர். சதீர சமரவிக்ரம 130 ஓட்டங்களையும், ஹஷான் துமிந்து 73 ஓட்டங்களையும் விளாசி சிறப்பான ஆரம்பம் ஒன்றை பெற்றுக் கொடுத்தனர்.

தொடர்ந்து எஞ்சலோ ஜயசிங்க (51) மற்றும் நிசல தாரக (77) அரைச்சதங்கள் குவிக்க, கோல்ட்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்தது 400 ஓட்டங்களை கடந்தது. எனினும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய இராணுவ அணியினர் வெற்றிவாய்ப்பை தம்பக்கம் திருப்பினர்.

எவ்வாறாயினும் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் 9 விக்கெட்டுகளை இழந்து 445 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டம் நிறைவுக்கு வந்ததால், போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. பந்துவீச்சில் இராணுவ விளையாட்டுக் கழகத்தின் நுவன் லியனபதிரன 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம்

இராணுவ விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 297 (72.4) – சீக்குகே பிரசன்ன 58, துஷான் விமுக்தி 54, ஹிமாஷ லியனகே 52, சரித் சுதாரக 5/98

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 112 (35.3) – விஷாத் ரந்திக 36, நுவன் லியனபதிரன 3/34

இராணுவ விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 288/5d (73.2) – லியோ பிரான்சிஸ்கோ 116*, டில்ஷான் டி சொய்சா 88

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 445/9 (80) – சதீர சமரவிக்ரம 130, நிசல தாரக 77, ஹஷான் துமிந்து 73, எஞ்சலோ ஜயசிங்க 51, நுவன் லியனபதிரன 3/115

முடிவு: போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

அணிகள் பெற்றுக் கொண்ட புள்ளிகள்

 • இராணுவ விளையாட்டுக் கழகம் – 13.775
 • கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 4.81

கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் சோனகர் விளையாட்டுக் கழகம்

இவ்விரண்டு அணிகளுக்கிடையிலான போட்டி நேற்று முன்தினம் சோனகர் கழக மைதானத்தில் ஆரம்பமானது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு கிரிக்கெட் கழகம், லசித் அபேரத்ன மற்றும் அஷான் பிரியஞ்சனின் அபார சதங்களின் உதவியுடன் 560 என்ற பாரிய ஓட்ட எண்ணிக்கையை பெற்றுக் கொண்டது.

லசித் அபேரத்ன ஆட்டமிழக்காது 156 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதுடன், அணித்தலைவர் அஷான் பிரியஞ்சன் 124 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். மேலும் கீழ்வரிசை வீரர் லக்ஷான் சந்தகன் மற்றும் மாதவ வர்ணபுர ஆகியோர் அரைச்சதம் கடந்தனர். பந்து வீச்சில் சந்தன சமரசிங்க மற்றும் திலான் துஷார 3 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

அடுத்து தமது முதல் இன்னிங்சிற்காக களமிறங்கிய சோனகர் விளையாட்டுக் கழகம் 275 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. நிலங்க சந்தகன் ஆட்டமிழக்காது 70 ஓட்டங்களை குவித்திருந்தார். கொழும்பு கிரிக்கெட் கழகம் சார்பில் சச்சித் பதிரன மற்றும் டில்ஷான் முனவீர 3 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

இதன்படி 285 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றுக் கொண்ட கொழும்பு கிரிக்கெட் கழகத்திற்கு, எதிரணியை மீண்டும் துடுப்பெடுத்தாடப் பணித்து வெற்றிக்கு முயற்சிக்க வாய்ப்பிருந்த போதிலும் அவ்வணி தொடர்ந்து துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

பந்துவீச்சில் திறமையை வெளிக்காட்டிய நிலங்க சந்தகன் 6 விக்கெட்டுகளை சாய்க்க, கொழும்பு கிரிக்கெட் கழகம் 137 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் ரொன் சந்திரகுப்த அதிகபட்சமாக 43 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

423 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய சோனகர் விளையாட்டுக் கழகத்திற்கு 41 ஓவர்களையே எதிர்கொள்ள வேண்டி இருந்ததால், 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 141 ஓட்டங்களை பெற்று போட்டியை சமநிலையில் நிறைவு செய்து கொண்டது. தொடக்க வீரர் ருவிந்து குணசேகர அதிகபட்சமாக 53 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

போட்டியின் சுருக்கம்

கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 560 (116.4) – லசித் அபேரத்ன 156*, அஷான் பிரியஞ்சன் 124, லக்ஷான் சந்தகன் 64, மாதவ வர்னபுர 50, வனிது ஹசரங்க 47,  திலான் துஷார 3/82, சந்தன சமரசிங்க 3/135

சோனகர் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 275 (64.4) – நிலங்க சந்தகன் 70*, திலான் துஷார 46, தரிந்து மெண்டிஸ் 41, டில்ஷான் முனவீர 3/26, சச்சித் பதிரான 3/91

கொழும்பு கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 137 (26.4) – ரொன் சந்திரகுப்த 43, டில்ஷான் முனவீர 41, நிலங்க சந்தகன் 6/72, பிரமோத் மதுவந்த 3/39

சோனகர் விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 141/6 (41) – ருவிந்து குணசேகர 53

முடிவு: போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

அணிகள் பெற்றுக் கொண்ட புள்ளிகள்

 • கொழும்பு கிரிக்கெட் கழகம் – 13.085
 • சோனகர் விளையாட்டுக் கழகம் – 5.08

NCC கழகம் எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம்

இப்போட்டி பி. சரவணமுத்து மைதானத்தில் இடம்பெற்றதுடன், நாணய சுழற்சியில் வென்ற NCC அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

மேல்வரிசை வீரர்கள் அனைவரும் சிறந்த பங்களிப்புகளை வழங்க, NCC அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 268 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. எஞ்சலோ பெரேரா அதிகபட்சமாக 59 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்துவீச்சில் ரமித் ரம்புக்வெல்ல மற்றும் சாமிக கருணாரத்ன 3 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

அடுத்து ஆடுகளம் பிரவேசித்த தமிழ் யூனியன் அணி ஜீவன் மெண்டிசின் அபார இன்னிங்சின் உதவியுடன் 446 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. ஜீவன் மெண்டிஸ் ஆட்டமிழக்காது 151 ஓட்டங்கள் குவித்ததுடன், தொடக்க வீரர் சித்தர கிம்ஹான் 90 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

பந்துவீச்சில் NCC அணியின் அனுக் பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளையும் பர்வீஸ் மஹ்ரூப் மற்றும் சதுரங்க டி சில்வா மற்றும் 3 விக்கெட்டுகள் வீதமும் வீழ்த்தினர். அதன்படி தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் முதல் இன்னிங்சில் 178 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றுக் கொண்டது.

இரண்டாவது இன்னிங்சிற்காக களமிறங்கிய NCC அணி, போட்டி நிறுத்தப்படும் போது 6 விக்கெட்டுகளை இழந்து 349 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. சதுரங்க டி சில்வா 84 ஓட்டங்களையும் நிரோஷன் திக்வெல்ல 81 ஓட்டங்களையும் குவித்தனர்.

பந்துவீச்சிலும் சிறப்பாக செயற்பட்ட ஜீவன் மெண்டிஸ் 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். அதன்படி போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

போட்டியின் சுருக்கம்

NCC கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 268 (65) – எஞ்சலோ பெரேரா 59, நிரோஷன் திக்வெல்ல 48, சந்துன் வீரக்கொடி 44, பவன் விக்ரமசிங்க 43, ரமித் ரம்புக்வெல்ல 3/72, சாமிக கருணாரத்ன 3/80

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 446 (124.5) – ஜீவன் மெண்டிஸ் 151*, சித்தர கிம்ஹான் 90, அனுக் பெர்னாண்டோ 4/81, பர்வீஸ் மஹ்ரூப் 3/49, சதுரங்க டி சில்வா 3/130

NCC கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 349/6 (67) – சதுரங்க டி சில்வா 84, நிரோஷன் திக்வெல்ல 81, ஜீவன் மெண்டிஸ் 3/74

முடிவு: போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

அணிகள் பெற்றுக் கொண்ட புள்ளிகள்

 • தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் – 12.4
 • NCC கழகம் – 4.585