பிரீமியர் லீக் தொடரின் இறுதி வார போட்டிகள் ஆரம்பம்

162
SLC Premier League

பிரீமியர் லீக் தொடரின் ‘A’ மட்ட அணிகளுக்கான இறுதி வார சூப்பர் 8 போட்டிகள் இன்று ஆரம்பமாகின.

SSC கழகம் எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம்

புள்ளி அட்டவணையில் இரண்டாம் இடத்திலுள்ள SSC கழகம் மற்றும் மூன்றாம் இடத்திலுள்ள கொழும்பு கிரிக்கெட் கழக அணிகள் மோதிக் கொண்ட தீர்க்கமான இப்போட்டி BRC மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற SSC கழகம் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அபாரமாக பந்துவீசிய கொழும்பு கிரிக்கெட் கழகத்தின் இளம் வீரர் வனிது ஹசரங்க வெறும் 15 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை பதம்பார்க்க, SSC அணி 147 ஓட்டங்களுக்கு சுருண்டது. அவ்வணி சார்பில் அணித்தலைவர் கௌஷால் சில்வா அதிகபட்சமாக 47 ஓட்டங்களையும், கவிந்து குலசேகர ஆட்டமிழக்காது 43 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

எனினும் சிறப்பாக பந்துவீசி தமது அணிக்கு நம்பிக்கையளித்த SSC பந்துவீச்சாளர்கள் 89 ஓட்டங்களுக்கு கொழும்பு கிரிக்கெட் கழகத்தின் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினர். டில்ஷான் அபேசிங்க அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

SSC கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 147 (47) – கௌஷால் சில்வா 47, கவிந்து குலசேகர 43*, வனிது ஹசரங்க 5/15

கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 89/6 (20.2) – ரொஷான் அனுருத்த 25*, டில்ஷான் அபேசிங்க 3/44


சிலாபம் மேரியன்ஸ் விளையாட்டுக் கழகம் ராகம கிரிக்கெட் கழகம்

மற்றுமொரு முக்கியமான போட்டியில் முதலிடத்திலுள்ள சிலாபம் மேரியன்ஸ் விளையாட்டுக் கழகத்தை நான்காவது இடத்தில் உள்ள ராகம கிரிக்கெட் கழகம் எதிர்கொண்டது. இப்போட்டி கோல்ட்ஸ் கழக மைதானத்தில் இடம்பெற்றதுடன் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராகம கிரிக்கெட் கழகம் எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.

தீர்க்கமான போட்டியில் துடுப்பாட்ட வீரர்கள் ஏமாற்றமளிக்க, சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் 168 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அவ்வணியின் மஹேல உடவத்த 41 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்ததுடன், பந்துவீச்சில் அசத்திய நிலங்க பிரேமரத்ன 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

பதிலுக்கு களமிறங்கிய ராகம அணி இன்றைய தினத்திற்காக ஆட்டம் நிறுத்தப்படும் போது 2 விக்கெட்டுகளை இழந்து 86 ஓட்டங்களை பெற்றிருந்தது. தொடக்க வீரர் சமிந்த பெர்னாண்டோ ஆட்டமிழக்காது 50 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

சிலாபம் மேரியன்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 168 (41.4) – மஹேல உடவத்த 41, நிலங்க பிரேமரத்ன 5/41

ராகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 86/2 (30) – சமிந்த பெர்னாண்டோ 50*


கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம்

சூப்பர் 8 சுற்றின் புள்ளி அட்டவணையில் கடைசி இடத்தை யார் பெற்றுக் கொள்வது என்பதை தீர்மானிக்கும் போட்டியில் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகமும் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகமும் மோதிக் கொண்டன. பனாகொட இராணுவப்படை மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடியது.

கோல்ட்ஸ் அணியின் சதீர சமரவிக்ரம மற்றும் அகில தனஞ்சய ஆகியோர் அரைச்சதங்களை கடந்ததுடன், பிரியமல் பெரேரா 47 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். எனினும் மற்றைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுகு ஓய்வறை திரும்ப, கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் 218 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. சிறப்பாக பந்துவீசிய சுழற்பந்து வீச்சாளர்களான துலாஞ்சன மெண்டிஸ் மற்றும் ரமித் ரம்புக்வெல்ல முறையே 5 மற்றும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தொடர்ந்து களமிறங்கிய தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் மீண்டுமொருமுறை மோசமான துடுப்பாட்டத்தை வெளிக்காட்டி 117 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து முதல் நாளை நிறைவு செய்து கொண்டது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சித்தர கிம்ஹான் அதிகபட்சமாக 43 ஓட்டங்கள் குவித்தார். பந்துவீச்சில் கோல்ட்ஸ் அணியின் இஷான் ஜயரத்ன மற்றும் அலி கான் 2 விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 218 (52.2) – சதீர சமரவிக்ரம 52, அகில தனஞ்சய 52, பிரியமல் பெரேரா 47, துலாஞ்சன மெண்டிஸ் 5/71, ரமித் ரம்புக்வெல்ல 5/74

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 117/6 (33) – சித்தர கிம்ஹான் 43, இஷான் ஜயரத்ன 2/19, அலி கான் 2/45


NCC கழகம் எதிர் இராணுவ விளையாட்டுக் கழகம்

இவ்விரண்டு அணிகளுக்கிடையிலான போட்டி கட்டுநாயக்கவில் இடம்பெற்றதுடன் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இராணுவ விளையாட்டுக் கழகம் களத்தடுப்பினை தெரிவு செய்தது.

அதன்படி ஆடுகளம் பிரவேசித்த NCC அணி முதல் இன்னிங்சிற்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 268 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. அணித்தலைவர் அஞ்சலோ பெரேரா மற்றும் திமிர ஜயசிங்க ஆகியோர் அரைச்சதங்கள் குவித்தனர். பந்துவீச்சில் இராணுவ அணியின் யசோத மெண்டிஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்து துடுப்பெடுத்தாடிய இராணுவ விளையாட்டுக் கழகம் இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது விக்கெட் இழப்பேதுமின்றி 23 ஓட்டங்களை பெற்றிருந்தது.

போட்டியின் சுருக்கம்

NCC கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 268 (68.2) – அஞ்சலோ பெரேரா 53, திமிர ஜயசிங்க 53, சதுரங்க டி சில்வா 42, யசோத மெண்டிஸ் 4/65, துஷான் விமுக்தி 3/64

இராணுவ விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 23/0 (5)

நாளை போட்டிகளின் இரண்டாவது நாளாகும்.