இலங்கை பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் B மட்ட அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் இன்று ஆரம்பமாகியிருந்தன. இதில் இன்றைய ஆட்டநேர நிறைவின்போது பொலிஸ் விளையாட்டுக் கழகம், இலங்கை துறைமுக அதிகாரசபை விளையாட்டுக் கழகம் ஆகியவை வலுப்பெற்றுள்ளன.

களுத்துறை நகர கழகம் எதிர் இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகம்

இன்று மக்கோன சர்ரேய் மைதானத்தில் ஆரம்பமாகிய இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்றிருந்த இலங்கை கடற்படை விளையாட்டுக் கழக அணியின் தலைவர் சமீர சந்தமல் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை களுத்துறை நகர கழகத்திற்கு வழங்கியது.

இதன்படி களமிறங்கிய அவ்வணி, இலங்கை கடற்படையின் சுழலிற்கு முகம்கொடுக்க முடியாமல், 42.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 143 ஓட்டங்களை மாத்திரமே தமது முதல் இன்னிங்ஸ் சார்பில் பெற்றுக் கொண்டது.

அவ்வணியில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக வந்த தரிந்து சிறிவர்தன மாத்திரம் 33 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டார். ஏனைய துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரேனும் 30 ஓட்டங்களைக் கூட தாண்டவில்லை. பந்து வீச்சில், இடது கை சுழற்பந்து வீச்சாளரான சுதரக்க தக்ஷின வெறும் 9 ஓட்டங்களைக் கொடுத்து இலங்கை கடற்படை அணிக்காக 4 விக்கெட்டுக்களையும், அஷான் ரணசிங்க, இஷான் அபயசேகர ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

இன்னிங்ஸ் வெற்றியை தமதாக்கிய புனித ஜோசப் வாஸ் கல்லூரி

இதனையடுத்து, தமது முதல் இன்னிங்சினை ஆரம்பித்த இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகம், துடுப்பாட்டத்தில் சற்று தடுமாறிய போதும், அஷான் ரணசிங்க ஆட்டமிழக்காமல் போராடிப் பெற்றுக்கொண்ட 66 ஓட்டங்களின் துணையுடன் இன்றைய ஆட்டநேர நிறைவின்போது அவ்வணி 45 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து 167 ஓட்டங்களை பெற்று களுத்துறை நகர கழக அணியை விட 24 ஓட்டங்கள் முன்னிலை வகிக்கின்றது.

கடற்படை விளையாட்டுக் கழகம் சார்பாக பறிபோன விக்கெட்டுக்களில் நான்கினை மங்கல குமார 37 ஓட்டங்களுக்கு கைப்பற்றியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

களுத்துறை நகர கழகம்: 143 (42.4) தரிந்து சிறிவர்தன 33, கிரிஷேன் அபோன்சு 22, சுதரக்க தக்ஷின 9/4, அஷான் ரணசிங்க 16/2, இஷான் அபயசேகர 24/2

இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகம்: 167/6 (45) அஷான் ரணசிங்க 66*, தினுஷ்க மலன் 28*, மங்கல குமார 37/4


பொலிஸ் விளையாட்டுக் கழகம் எதிர் களுத்துறை பெளதீக கலாசார அணி

BRC மைதானத்தில் ஆரம்பமாகிய இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்றிருந்த களுத்துறை பெளதீக கலாசார அணியினர் முதலில் பொலிஸ் விளையாட்டுக் கழகத்தினை துடுப்பாடுமாறு பணித்தனர்.

இதன்படி முதலில் துடுப்பாட களமிறங்கிய பொலிஸ் விளையாட்டுக் கழகத்தில், முன்வரிசை வீரர்கள் குறுகிய ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சென்றனர். இருப்பினும் நான்காது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த, சுவஞ்சி மதநாயக்க மற்றும் சமித் துஷாந்த ஆகியோரின் வலுவான இணைப்பாட்டம் காரணமாக, பொலிஸ் விளையாட்டுக் கழக அணி வலுவான நிலையினை நோக்கி நகர்ந்தது.

இருப்பினும் சமிந்த துஷாந்தவின் விக்கெட்டினை தொடர்ந்து வந்த துடுப்பாட்ட வீரர்கள் பெரிதாக சோபிக்காத காரணத்தினால், பொலிஸ் அணி 70.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 235 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயற்பட்டிருந்த சுவஞ்சி மதநாயக்க, ஏனையோர் ஆட்டமிழந்து சென்றதன் காரணமாக சதத்தினை பூர்த்தி செய்ய முடியாமல் 96 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் நின்றிருந்தார். அவர் 177 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளையும் விளாசி இருந்தார். பொலிஸ் அணியை மீண்டும் தூக்க உதவியிருந்த சமித் துஷாந்த  45 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

பந்து வீச்சில், அமெரிக்க அணி வீரரான ஜெஸ்ஸி சிங் களுத்துறை பெளதீக கலாசார அணிக்காக 38 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், தேனுக்க தனஞ்சய 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

இலங்கை வீரர்களின் மோசமான துடுப்பாட்டத்தினால் இரண்டாவது நாளும் தென்னாபிரிக்கா வசம்

பின்னர், தமது முதலாவது இன்னிங்சினை ஆரம்பித்த களுத்துறை பெளதீக கலாசார அணி, போட்டியின் இன்றைய ஆட்ட நேர நிறைவின்போது ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 39 ஓட்டங்களைப் பெற்று பொலிஸ் விளையாட்டுக் கழகத்தை விட 196 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. களத்தில் ஆட்டமிழக்காமல் பஹாத் பாபர் 16 ஓட்டங்களுடனும், நிலான் பெர்னாந்து ஒரு ஓட்டத்துடனும் நிற்கின்றனர்.

போட்டியின் சுருக்கம்

பொலிஸ் விளையாட்டுக் கழகம்: 235 (70.1) சுவஞ்சி மதநாயக்க 96*, சமித் துஷாந்த 45, அகில லக்ஷன் 31, ஜெஸ்ஸி சிங்  38/4, தேனுக்க தனஞ்சய 47/3, ருச்சிர தரிந்த 51/2

களுத்துறை பெளதீக கலாசார அணி: 39/1 (17) கேஷான் விமலதர்ம 22, பஹாத் பாபர் 16*


இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் எதிர் லங்கன் கிரிக்கெட் கழகம்

B மட்ட கழக அணிகளின் புள்ளிகள் அடிப்படையில் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை வகிக்கும் அணிகளான இலங்கை துறைமுக அதிகார சபையும், லங்கன் கிரிக்கெட் கழகமும் மத்தேகொட இராணுவப்படை மைதானத்தில் இன்று மோதிக்கொண்டன.

இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றிருந்த, இலங்கை துறைமுக அதிகாரசபை அணியின் தலைவர் சமிந்த பண்டார முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தார்.

Photos: Lankan CC vs SL Ports Authority – SLC Premier League Tier ‘B’ Tournament

இதன்படி, களமிறங்கிய அவ்வணி இஷான் ரங்கனவின் அரைச்சதம் கடந்த 69 ஓட்டங்கள் மற்றும் ஏனைய துடுப்பாட்ட வீரர்களின் ஆறுதலான ஓட்ட எண்ணிக்கைகளின் பங்களிப்பு என்பவற்றால் தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 248  ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

பந்து வீச்சில் லங்கன் கிரிக்கெட் கழகம் சார்பாக ரஜீவ வீரசிங்க 4 விக்கெட்டுக்களையும் நவீன் கவிகர, லக்ஷன் ரொட்ரிகோ ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

பின்னர், தமது முதல் இன்னிங்சினை ஆரம்பித்த லங்கன் கிரிக்கெட் கழகம் இன்றைய ஆட்டநேர நிறைவின் போது, 2 விக்கெட்டுக்களை இழந்து 24 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டிருந்தது. களத்தில் ஆட்டமிழக்காமல் சசீன் பெர்னாந்து 20 ஓட்டங்களுடன் நிற்கும் இவ்வேளையில், இன்று பறிபோன விக்கெட்டுக்கள் இரண்டினையும் சமிந்து கைப்பற்றியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை துறைமுக அதிகாரசபை: 248 (81.2) இஷான் ரங்கன 69, சமிகர எதிரிசிங்க 44, ரஜீவ வீரசிங்க 87/4

லங்கன்  கிரிக்கெட் கழகம்: 24/2 (7) சஷீன பெர்னாந்து 20*, சமிந்த பண்டார  16/2

இப்போட்டிகளின் இரண்டாவது நாள் ஆட்டம் நாளை தொடரும்.