எமர்ஜிங் மேஜர் லீக் தொடரில் பிரகாசித்த தேசிய கிரிக்கெட் அணியின் வீரர்கள்

166

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இளம் கிரிக்கெட் வீரர்களுக்காக ஒழுங்கு செய்து நடாத்தி வரும் “எமர்ஜிங் மேஜர் லீக் (Emerging Major League)” என்ற பெயரிலான இரண்டு நாட்கள் கொண்ட கழக கிரிக்கெட் தொடரில் இன்று (6) ஆறு போட்டிகள் முடிவுக்கு வந்தன.

இன்று நடைபெற்று முடிந்த போட்டிகளில் தேசிய அணி வீரர்களான கித்ருவன் விதானகே, கமிந்து மெண்டிஸ் ஆகியோர் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழக அணிக்காகவும், சந்துன் வீரக்கொடி SSC அணிக்காகவும் துடுப்பாட்டத்தில் ஜொலித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இளம் வீரர்களுக்கான இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய கிரிக்கெட் தொடர்

இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம் எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம்

நேற்று (5) தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகத்தின் சொந்த அரங்கான கொழும்பு P. சரவணமுத்து கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியிருந்த இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை துறைமுக அதிகாரசபை அணியினர் அவர்களின் முதல் இன்னிங்ஸில் 53 ஓட்டங்களை மட்டுமே எடுத்தனர்.

பின்னர் தமது துடுப்பாட்டத்தை ஆரம்பித்த தமிழ் யூனியன் அணி தேசிய கிரிக்கெட் அணி வீரர்களான கித்ருவன் விதனாகே சதம் தாண்டி பெற்றுக் கொண்ட 120 ஓட்டங்கள், கமிந்து மெண்டிஸ் அரைச்சதம் தாண்டி பெற்றுக் கொண்ட 88 ஓட்டங்கள் என்பவற்றின் துணையோடு முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுக்களை இழந்து 335 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டம் சமநிலையில் முடிந்தது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 53 (22) – பினுர பெர்னாந்து 4/12, இசுரு தனன்ஞய 2/05

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 335/8d (74.4) –  கித்ருவான் விதானகே 120, கமிந்து மெண்டிஸ் 88

முடிவு – போட்டி சமநிலை அடைந்தது.


கடற்படை விளையாட்டுக் கழகம் எதிர் களுத்துறை நகர கழகம்

வெலிசரையில் நேற்று (6) ஆரம்பமான இந்தப் போட்டியில் கடற்படை அணி தமது முதல் இன்னிங்ஸில் 109 ஓட்டங்களுடன் சுருண்டது. பின்னர், தமது முதல் இன்னிங்ஸில் ஆடிய களுத்துறை நகர கழக அணியினர் 200 ஓட்டங்களை குவித்தனர். களுத்துறை அணியின் துடுப்பாட்டம் சார்பாக நிபுன கமகே 94 ஓட்டங்களைப் பெற்று ஆறு ஓட்டங்களால் சதத்தை தவறவிட்டிருந்தார்.

தொடர்ந்து 91 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடங்கிய கடற்படை விளையாட்டுக் கழகம் 53 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்த போது இரண்டாம் நாள் ஆட்டநேரம் முடிவுக்கு வர போட்டி சமநிலை அடைந்தது.

போட்டியின் சுருக்கம்

கடற்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 109 (39.1) – பசிந்து மதுஷான் 5/26, எரங்க ரத்னாயக்க 5/38

களுத்துறை நகர கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 200 (50.2) – நிப்புன கமகே 94, ஹஷின் டில்மன் 5/86

கடற்படை விளையாட்டுக் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 53/4 (18)

முடிவு – போட்டி சமநிலை அடைந்தது.


பதுரெலிய கிரிக்கெட் கழகம் எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம்

கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச மைதானத்தில் நேற்று ஆரம்பமாகி இருந்த இப்போட்டியின் இன்றைய இரண்டாம் நாளில் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடர்ந்த பதுரெலிய கிரிக்கெட் கழகம் 253 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்த போது தமது ஆட்டத்தை இடை நிறுத்தியது. பதுரெலிய அணிக்காக சச்சின் பெர்னாந்து அரைச்சதம் (70) பெற சிலாபம் மேரியன்ஸ் அணியின் பந்துவீச்சில் நிமேஷ் விமுக்தி 3 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார்.

அறிமுக வீரர் அசத்த சரிவில் இருந்து மீண்ட இங்கிலாந்து

இதனை அடுத்து தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பாடிய சிலாபம் மேரியன்ஸ் அணி 59 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்து காணப்பட்டிருந்த நிலையில் ஆட்டம் சமநிலையில் முடிந்தது.

போட்டியின் சுருக்கம்

பதுரெலிய கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 253/6d (56) – சச்சின் பெர்னாந்து 70, தெனுவன் ராஜகருண 45, நிமேஷ் விமுக்தி 3/77

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 59/1 (11)

முடிவு – போட்டி சமநிலை அடைந்தது.


நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் NCC

NCC மைதானத்தில் நிறைவடைந்த இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் 79.1 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 250 ஓட்டங்களை முதல் இன்னிங்சில் பெற்றது. நீர்கொழும்பு அணிக்காக அஞ்செலோ ஜயசிங்க அரைச்சதம் (50) பெற்றிருக்க NCC அணி பந்துவீச்சில் வேகப்பந்து வீச்சாளரான அசித்த பெர்னாந்து 4 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார்.

பின்னர் தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பாடிய NCC அணி தடுமாற்றமான முறையில் 89 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்ட போது ஆட்டத்தில் காலநிலை சீர்கேடு ஏற்பட போட்டி சமநிலை அடைந்தது. நீர்கொழும்பு அணிக்காக பந்துவீச்சில் அசத்திய சந்தகன் பத்திரன 6 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார்.

போட்டியின் சுருக்கம்

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 250/9d (79.1) – அஞ்செலோ ஜயசிங்க 54, ஷெஹான் வீரசிங்க 48, திலான் ஜயலத் 46, அசித்த பெர்னாந்து 4/64

NCC (முதல் இன்னிங்ஸ்) – 89/7 (31.4) – சந்தகன் பத்திரன 6/45

முடிவு – போட்டி சமநிலை அடைந்தது


கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் BRC

நேற்று கொழும்பு கிரிக்கெட் கழகத்தின் சொந்த மைதானத்தில் ஆரம்பித்த இப்போட்டி மழையின் காரணமாக இன்று நடைபெறாத காரணத்தினால் ஆட்டம் சமநிலை அடைந்தது. நேற்று இடம்பெற்ற போட்டியில் முதலில் துடுப்பாடியிருந்த கொழும்பு அணியினர் மினோத் பானுக்கவின் அரைச்சதத்தோடு தமது முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை 131 ஓட்டங்களை குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 131/4 (32) மினோத் பானுக்க 58*, வனிந்து ஹஸரங்க 46, விக்கும் சஞ்சய 2/21

முடிவு – போட்டி சமநிலை அடைந்தது


SSC எதிர் றாகம கிரிக்கெட் கழகம்

நேற்று SSC அணியின் சொந்த மைதானத்தில் இப்போட்டி நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும் மழையினால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டிருந்தது.

தொடர் முடிவுக்காக இறுதிப் போட்டியை எதிர்பார்க்கும் இலங்கை – பங்களாதேஷ் இளம் அணிகள்

இன்றும் போட்டியில் மழையின் குறுக்கீடு இருந்த போதிலும் 33 ஓவர்கள் ஆட்டத்தில் விளையாடப்பட்டு போட்டி சமநிலை அடைந்தது. இந்த ஓவர்கள் அனைத்தினையும் எதிர்கொண்டு தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய SSC அணி 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 190 ஓட்டங்களை பெற்றிருந்தது. SSC அணியின் துடுப்பாட்டத்தில் தேசிய அணி வீரரான சந்துன் வீரக்கொடி சதம் (111) பெற்ற்தோடு, சரித் அசலங்க அரைச்சதம் (62) ஒன்றுடன் ஆட்டமிழக்காது நின்றிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

SSC (முதல் இன்னிங்ஸ்) – 190/2 (33) – சந்துன் வீரக்கொடி 111, சரித் அசலன்க 62*

முடிவு – போட்டி சமநிலை அடைந்தது

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க