இலங்கை கிரிக்கெட் சபையின் அனுசரணையுடன் தற்போது நடைபெற்று வரும் மாவட்ட அணிகளுக்கிடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஒருநாள் போட்டித் தொடரின் இன்றைய தினம் நடைபெற்ற அரையிறுதிப் போட்டிகளில் வெற்றியீட்டிய கேகாலை மற்றும் கொழும்பு மாவட்ட அணிகள்  இறுதிப்  போட்டிக்குத் தெரிவாகியுள்ளன.

கண்டி மாவட்டம் எதிர் கேகாலை மாவட்டம்

காலிறுதிப் போட்டியில் அபாரமாக ஆடி ஓட்டங்களைக் குவித்து 107 ஓட்டங்களால் வெற்றியைப் பெற்றிருந்த கண்டி மாவட்டம் முக்கியமான அரையிறுதிப் போட்டியில் மோசமான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தியதன் காரணமாக, எதிர்பாராத விதத்தில் 7 விக்கெட்டுகளால் படுதோல்வியைத் தழுவி அதிர்ச்சியளித்தது.  

இளம் வீரர்களின் சிறப்பாட்டத்தால் ஆசியக் கிண்ண அரையிறுதிக்குள் இலங்கை

பி. சாரா ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கண்டி மாவட்ட அணித் தலைவர் திமுத் கருணாரத்ன கடந்த போட்டியை போன்றே இந்தப் போட்டியிலும் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.

அதனையடுத்து ஓட்டங்களை குவிக்கும் எண்ணத்தில் களமிறங்கிய கண்டி அணிக்கு கேகாலை மாவட்ட பந்து வீச்சாளர்கள் முதல் 4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தனர். முக்கிய விக்கெட்டான அணித் தலைவர் திமுத் கருணாரத்ன இரண்டு ஓட்டங்களுக்கு கமகேயின் பந்து வீச்சில் LBW முறையில் ஆட்டமிழந்து சென்றார்.

அந்த வகையில் பாரிய அழுத்தத்துக்கு மத்தியில் சிக்குண்ட சம்மு அஷான் மற்றும் கடந்த போட்டியில் சதம் விளாசியிருந்த சாமர கப்புகெதர ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஓட்டங்களை பெற முயற்சித்தனர்.

எனினும், கடந்த போட்டியிலும் 8 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை வீழ்த்தி அபார பந்து வீச்சினை பதிவு செய்திருந்த பிரபாத் ஜெயசூரிய, இவ்விருவரையும் முறையே 14 மற்றும் 6 ஓட்டங்களுக்கு வீழ்த்திய அதேநேரம், இந்த போட்டியிலும் 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அதனையடுத்து களமிறங்கிய கவிந்து குலகேகர உள்ளிட்ட அனைத்து துடுப்பாட்ட வீரர்களும் ஒற்றை இலக்கங்களுக்கு ஆட்டமிழந்து சென்ற போதிலும், அணியின் ஓட்டங்களை சற்றேனும் உயர்த்திய சஜித்ர சேனநாயக்க அதிகபட்ச ஓட்டங்களாக 29 ஓட்டங்களை பெற்ற வேளையில் ரவிச்சந்திரகுமாரின் பந்து வீச்சில் ஆரச்சிகேயிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்து சென்றார். அந்த வகையில், கண்டி மாவட்ட அணி 29 ஓவர்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்து 96 ஓட்டங்களை மாத்திரமே பதிவு செய்தது.

பின்னர், இலகுவான வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய கேகாலை அணி, 20 ஓவர்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 30 ஓவர்கள் எஞ்சிய நிலையில் குறித்த வெற்றி இலக்கை அடைந்தது.

அவ்வணி முதலிரண்டு விக்கெட்டுகளையும் சொற்ப ஓட்டங்களுக்கு இழந்திருந்தாலும், மூன்றாவது விக்கெட்டுக்காக களமிறங்கியிருந்த ஹஷான் துமிந்து ஆட்டமிழக்காமல் 56 பந்துகளில் 7 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 50 ஓட்டங்களை பெற்று அணியின் வெற்றியை உறுதி செய்தார். அதேநேரம், மறுமுனையில் துடுப்பாடிய அஞ்சலோ ஜயசிங்க 24 ஓட்டங்களை பெற்றார்.

இறுதி வரை போராடிய  கண்டி அணியின் பந்து வீச்சாளர்களுக்கு எவ்விதமான அழுத்தத்தையும் கேகாலை அணி மீது பிரயோகிக்க முடியவில்லை.   

போட்டியின் சுருக்கம்  

கண்டி மாவட்டம் : 96/10 (29) – சஜித்ர சேனநாயக்க 29, ஜெப்ரி வந்தர்சே 15, சம்மு அஷான் 14, தசுன் சானக்க 9, சாமர கப்புகேதர 6, பிரபாத் ஜெயசூரிய 17/3,  இஷான் ஜெயரத்ன 16/2, நிசல தரக்க 14/1

கேகாலை மாவட்டம் : 98/3 (20) ஹஷான் துமிந்து 50*, அஞ்சலோ ஜயசிங்க 24, விஷாத் ரந்திக்க 7*, சசிதர சேனாநாயக்க 7/1  தறிந்து ரத்னயக்க 21/1  

போட்டி முடிவு கேகாலை மாவட்ட அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி.

கொழும்பு, கண்டி, கேகாலை மற்றும் மன்னார் மாவட்ட அணிகள் அரையிறுதிக்குள்


கொழும்பு மாவட்டம் எதிர் மன்னார் மாவட்டம்

கடந்த காலிறுதிப் போட்டியில் 201 ஓட்டங்களால் அபார வெற்றியை பதிவு செய்து அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்த மன்னார் மாவட்டம், மோசமான துடுப்பாட்டத்தின் காரணமாக இந்தப் போட்டியில் கொழும்பு மாவட்ட அணியிடம் 22 ஓவர்கள் எஞ்சிய நிலையில் 7 விக்கெட்டுகளால் தோல்வியைத் தழுவியது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மன்னார் அணித் தலைவர் லஹிறு திரிமான்ன முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார். அந்த வகையில் களமிறங்கிய அவ்வணி இன்றைய தினம் மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய அதேநேரம், 37.1 ஓவர்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்து 130 ஓட்டங்களை மாத்திரமே பதிவு செய்தது.

கடந்த போட்டியில் 74 ஓட்டங்களை விளாசி சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்த லஹிறு திரிமான்ன இந்தப் போட்டியில் வெறும் 10 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அத்துடன் இந்த போட்டியில் ஒருவரை தவிர்ந்த ஏனைய அனைத்து வீரர்களும் 16 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்து சென்றனர். சற்று சிறப்பாக துடுப்பாடிய அக்க்ஷு பெர்னாண்டோ அதிகபட்ச ஓட்டங்களாக 31 ஓட்டங்களை பதிவு செய்தார்.

அதேநேரம் மன்னார் அணியின் விக்கெட்டுகளை வீழ்த்தி அவ்வணிக்கு நெருக்கடி கொடுத்த விஷ்வ பெர்னாண்டோ 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், லஹிறு கமகே மற்றும் லஹிறு மதுஷங்க ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அதனையடுத்து 130 என்ற இலகுவான ஓட்டங்களை நோக்கி களமிறங்கிய கொழும்பு மாவட்ட அணி 27 ஓவர்களுக்குள் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து குறித்த வெற்றி இலக்கை அடைந்தது.  

டிலானின் கன்னி கோலுடன் கொழும்பு அணிக்கு FA கிண்ண முதல் வெற்றி

அவ்வணி சார்பாக சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் மலிந்து மதுரங்க 43 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் உள்ளடங்கலாக 55 ஓட்டங்களை விளாசினார். அதனையடுத்து களமிறங்கிய இன்றைய அறிமுக வீரர் சாளுக்க சில்வா 3 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்த அதேநேரம், அணியில் கிடைக்கப்பெற்ற வாய்ப்பையும் வீணடித்தார்.   

எனினும், கடந்த போட்டியில் ஓட்டங்களைக் குவிக்க தவறியிருந்த அஷான் ப்ரியஞ்சன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 69 பந்துகளுக்கு முகம் கொடுத்து நான்கு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் உள்ளடங்கலாக ஆட்டமிழக்காமல் 55 ஓட்டங்களை பெற்று அணியின் வெற்றியை உறுதி செய்தார். அதேநேரம் மன்னார் மாவட்ட அணி  சார்பாக உதித் மதுஷான் 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்த முடிவுகளின் அடிப்படையில் இறுதிப் போட்டியில் கேகாலை kாவட்ட அணி கொழும்பு மாவட்ட அணியுடன் மோதவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

மன்னார் மாவட்ட அணி: 130/10 (37.1) அக்க்ஷு பெர்னாண்டோ 31, லஹிறு மிலந்த 16, ரோஷேன் சில்வா 16, விஷ்வ பெர்னாண்டோ 23/3, லஹிறு கமகே 18/2, லஹிறு மதுஷங்க 19/2   

கொழும்பு மாவட்ட அணி: 136/3 (27) மலிந்து மதுரங்க 55, அஷான் ப்ரியஞ்சன் 55,  உதித் மதுஷான் 32/2, உதார ஜெயசுந்தர 34/1

போட்டி முடிவு கொழும்பு மாவட்ட அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி.

Match Highlights