சுற்றுலா இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் பந்து வீச்சு, துடுப்பாட்டம், களத்தடுப்பு ஆகியவற்றில் திறம்பட செயற்பட்டிருந்த இந்திய அணி, இலங்கையை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி, தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இலங்கையை வீழ்த்தி 6ஆவது வழக்கறிஞர்கள் உலகக் கிண்ணத்தை சுவீகரித்த அவுஸ்திரேலியா

6ஆவது வழக்கறிஞர்கள் உலகக் கிண்ணப் போட்டியில் 30 ஓவர்களில் 206 ஓட்டங்களை குவித்த இலங்கை…

ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியிருந்த இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித்தலைவர் விராத் கோஹ்லி முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்தார்.

துடுப்பாட்டத்திற்கு சாதகமான இன்றைய ஆடுகளத்தில் விளையாடும் இலங்கை அணியில் சாமர கப்புகெதர மற்றும் திசர பெரேரா ஆகியோர் மீண்டும் உள்வாங்கப்பட்டிருந்தனர். அத்தோடு, இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரில் சிறப்பான பந்து வீச்சினை வெளிப்படுத்தியிருந்த வேகப் பந்து வீச்சாளரான விஷ்வ பெர்னாந்துவிற்கு இது கன்னி ஒரு நாள் போட்டியாக அமைந்திருந்தது.

தொடர்ந்து, இலங்கை அணியின் துடுப்பாட்டத்தை தொடக்கி வைக்க, இளம் ஜோடிகளான நிரோஷன் திக்வெல்ல மற்றும் தனுஷ்க குணத்திலக்க ஆகியோர் மைதானம் விரைந்திருந்தனர். ஒரு நிதானமான ஆரம்பத்தை வெளிப்படுத்தியிருந்த இலங்கை வீரர்கள் அழகிய பவுண்டரிகளுடன் சிறப்பான ஆரம்பம் ஒன்றை பெற்றுத்தந்தனர்.

இலங்கை அணியின் முதல் விக்கெட்டுக்காக 74 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக பகிரப்பட்டதுடன், முதல் விக்கெட்டாக யுவேந்திர சாஹலின் சுழலிற்கு வித்தியாசமான ஒரு முயற்சியை மேற்கொள்ள முயன்ற தனுஷ்க குணத்திலக்க ஆட்டமிழந்து ஒய்வறை திரும்பினார். ஆட்டமிழக்கும் போது, குணத்திலக்க 4 பவுண்டரிகள் அடங்கலாக 44 பந்துகளில் 35 ஓட்டங்களைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது விக்கெட்டிற்காக களம் நுழைந்த குசல் மெண்டிசுடன் கைகோர்த்த நிரோஷன் திக்வெல்ல இலங்கை அணிக்கு தன்னால் முடிந்த பங்களிப்பினை வழங்கி, இரண்டாம் விக்கெட்டாக ஓய்வறை திரும்பினார்.

கேதர் ஜாதவின் சுழலின் மூலம், LBW முறையில் வீழ்த்தப்பட்ட திக்வெல்ல தனது ஆறாவது ஒரு நாள் அரைச் சதத்தினை பூர்த்தி செய்ததுடன், மொத்தமாக 8 பவுண்டரிகள் அடங்கலாக மொத்தமாக 74 பந்துகளில் 64 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

திக்வெல்லவின் விக்கெட்டினை அடுத்து, குறுகிய நேர இடைவெளியில் குசல் மெண்டிசும் அக்ஷார் பட்டேலின் சுழலிற்கு இரையாகி போல்ட் செய்யப்பட்டார். 36 ஓட்டங்களுடன் மைதானத்தினை விட்டு வெளியேறிய குசல் மெண்டிசை அடுத்து வந்த இலங்கை வீரர்கள் இந்திய அணியின் மதிநுட்பமான செயற்பாடுகளினால் போதிய ஓட்டங்கள் இன்றி ஆட்டமிழந்தனர்.

இலங்கை அணியின் மத்திய வரிசையில் மெதிவ்சைத் தவிர வேறெந்த துடுப்பாட்ட வீரரேனும் 20 ஓட்டங்களையேனும் தாண்டியிருக்கவில்லை.  பின்வரிசை வீரர்களையும் தங்களது வேகப்பந்து வீச்சாளர்கள் மூலம் மடக்கிய இந்திய அணியை எதிர்த்து இலங்கையினால் 43.2 ஓவர்களில் 216 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

இறுதிவரை, ஒரு சரியான இணைப்பாட்ட ஜோடி இன்றி போராடியிருந்த இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆட்டமிழக்காமல் 50 பந்துகளில் 35 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

இலங்கை அணியின் இறுதி 9 விக்கெட்டுகளையும் வெறும் 77 ஓட்டங்களுக்குள் கைப்பற்றிய இந்திய அணியின் பந்து வீச்சில், அக்ஷார் பட்டேல் 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கேதர் ஜாதவ், யுவேந்திர சாஹல் மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 217 ஓட்டங்களை 50 ஓவர்களில் பெறுவதற்கு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணியில் இலக்கு விரட்டும் பயணத்திற்காக சிக்கர் தவான் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் ஆடுகளம் விரைந்திருந்தனர்.

இந்திய அணி, 23 ஓட்டங்களைக் குவித்திருந்த வேளையில் தன்னிடம் கிடைத்த பந்தின் மூலம், ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மாவை சாமர கப்புகெதர சிறப்பான முறையில் ரன் அவுட் செய்ய இலங்கை அணி, முதல் இன்னிங்ஸ் போன்று நல்லதொரு ஆரம்பத்தை இம்முறையும் பெற்றுக்கொண்டது.

எனினும், களத்தில் நின்ற சிக்கர் தவான் மற்றும் இந்திய அணித்தலைவர் விராத் கோஹ்லி ஆகியோர் சமார்த்தியமான முறையில் துடுப்பாட தொடங்கி வெற்றி இலக்கை நோக்கி சீராக பயணித்தனர்.

தொடர்ந்து இலங்கை பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சுக்கு அதிரடி துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய சிக்கர் தவான், தனது அதிவேகமான ஒரு நாள் சதத்தினை 71 பந்துகளில் பூர்த்தி செய்தார். அத்தோடு, மறுமுனையில் அவருக்கு வலுவினை வழங்கிய இந்திய அணித்தலைவர் கோஹ்லி அரைச்சதம் விளாசினார்.

இவர்கள் இருவரினதும், அபார இணைப்பாட்டத்தினால் (197*) இந்திய அணி, 28.5 ஓவர்களில் மேலதிக விக்கெட் இழப்புக்கள் ஏதுமின்றி 220 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கினை அடைந்தது.

இந்திய அணியின் துடுப்பாட்டத்தில், சிறப்பாக செயற்பட்டிருந்த சிக்கர் தவான் தனது 11ஆவது ஒரு நாள் சதத்தோடு, வெறும் 90 பந்துகளில் 20 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 132 ஓட்டங்களையும், விராத் கோஹ்லி 70 பந்துகளில் 70 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றிருந்தனர்.

இலங்கை அணிக்கு, சில பிடியெடுப்பு வாய்ப்புக்கள் கிடைத்த போதும் அவற்றினை அவர்கள் சரிவர உபயோகித்திருக்கவில்லை. போட்டியின் ஆட்ட நாயகனாக தனது அதிரடி சதத்திற்காக சிக்கர் தவான் தெரிவாகியிருந்தார்.

2019ஆம் ஆண்டின் உலக கிண்ண நேரடி வாய்ப்பினை உறுதி செய்ய, இந்த ஒரு நாள் தொடரில் இரண்டு வெற்றிகளை இலங்கை அணி பெற வேண்டிய கட்டாய நிலையில் உள்ளது என்பது  குறிப்பிடத்தக்க விடயமாகும். இத்தொடரின் அடுத்த போட்டி, எதிர்வரும் 24ஆம் திகதி பல்லேகல சர்வதேச மைதானத்தில் ஆரம்பாகவுள்ளது.

ஸ்கோர் விபரம்