இங்கிலாந்து – இலங்கை அணிகளுக்கு இடையில் மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆகியவை ஏற்கனவே நடைபெற்று முடிவடைந்துள்ளது. இதில் டெஸ்ட் தொடரை 2-0 அடிப்படையிலும் ஒருநாள் தொடரை 3-0 என்ற அடிப்படையிலும் இங்கிலாந்து அணி  வெற்றிகொண்டு இருந்தது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான ஒரே ஒரு டி20 போட்டி நேற்று சவுத்தாம்ப்டன் நகரில் அமைந்துள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் நடைப்பெற்றது. ஏற்கனவே டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இழந்த நிலையில் இந்த ஒரே ஒரு டி20 போட்டியிலாவது வெற்றி பெற்று நாடு திரும்ப வேண்டும் என்ற நிலையில் இலங்கை அணி களமிறங்கியது. இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட தீர்மானம் செய்தது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை அணி 140/10 (20)

தனுஷ்க குணதிலக 26
தினேஷ் சந்திமால் 23
குசல் மெண்டிஸ் 21
ரமித் ரம்புக்வெல்ல 19
லியம் டௌவ்சன் 27/3
க்ரிஸ் ஜோர்டன் 29/3

இங்கிலாந்து 144/2 (17.3)

ஜொஸ் பட்லர் 73*
இயோன் மோர்கன் 47*
ஜேம்ஸ் வின்ஸ் 16
எஞ்சலோ மெதிவ்ஸ் 27/2

இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 15 பந்துகள் மீதமிருக்க 8 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி டெஸ்ட்,ஒருநாள் மற்றும் டி20 போட்டி ஆகிய அனைத்து தொடரிலும் வெற்றி பெற்று இருந்ததோடு இலங்கை அணியினரால் ஒருபோட்டியிலாவது வெற்றி பெற முடியாமல் சென்றது மிகுந்த கவலையான விடயமே!!

3 வகையான தொடரை இலங்கை இழந்தாலும் இளம் வீரர் குசல் மெண்டிஸின் சிறந்த துடுப்பாட்டம், தினேஷ் சந்திமாலின் தொடர்ச்சியான பங்களிப்பு, குசல் பெரேரா அணிக்கு மீள்வருகை ஆகிய நல்ல விடயங்கள் இடம்பெற்று இருந்தது. இவை இலங்கை அணியின் எதிர்கால போட்டிகளுக்கு உற்சாகம் அளிக்கக்கூடிய அம்சங்களாக அமையும்.

அத்தோடு இந்த தொடரில் இலங்கை அணியின் களத்தடுப்பு சொல்லும் அளவுக்கு பிரகாசிக்கவில்லை. அத்தோடு பந்துவீச்சும் சிறப்பாக அமையவில்லை. துடுப்பாட்டம் ஒருநாள் போட்டிகளில் சற்று சிறப்பாக அமைந்தாலும் அது வெற்றியை ஈட்டக் கூடிய அளவிற்கு சிறப்பானதாக அமையவில்லை. இதனால் இந்தப் போட்டிகளில் பெற்ற படிப்பினைகளை பாடமாகப் பெற்று செய்த தவறுகளை திருத்தி எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பமாகும் அவுஸ்திரேலிய தொடருக்கு இலங்கை அணி ஆயத்தமாக வேண்டிய ஒரு நிலையில் உள்ளது.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்