இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் கொல்கத்தாவில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் (19) ஆட்ட நிறைவில் ரங்கன ஹேரத்தின் அபார அரைச்சதத்துடன் இலங்கை முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை நல்ல முறையில் முடித்திருந்ததுடன் (294), இந்தியா அவர்களது இரண்டாம் இன்னிங்சில் சிறந்த ஆரம்பத்தையும்  காட்டியுள்ளது.

போதிய வெளிச்சமின்மையினால் ஆட்டம் நிறுத்தப்பட்டிருந்த போட்டியின் மூன்றாம் நாள் (18) நிறைவில் இலங்கை அணியானது தமது முதல் இன்னிங்சில் 45.4 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களுடன் காணப்பட்டிருந்தது. களத்தில் நிரோஷன் திக்வெல்ல 14 ஓட்டங்களுடனும்  அணித் தலைவர் தினேஷ் சந்திமால் 13 ஓட்டங்களுடனும் நின்றிருந்தனர்.

பந்து வீச்சு, துடுப்பாட்டம் என இரண்டு துறைகளிலும் அசத்திய இலங்கை

பந்து வீச்சு, துடுப்பாட்டம் என இரண்டு துறைகளிலும் அசத்திய இலங்கை

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் முதலாவது டெஸ்ட் …

நான்காம் நாள் ஆட்டத்தில் சவாலான மொத்த ஓட்டங்களை இந்தியா அணிக்கு எதிராக பெற முனைந்த இலங்கை அணிக்கு நிரோஷன் திக்வெல்ல பவுண்டரிகளுடன் நல்ல ஆரம்பத்தை தந்திருந்த போதிலும், இலங்கை அணி 200 ஓட்டங்களை எட்டியிருந்த போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான மொஹமட் ஷமி மற்றும் புவ்னேஸ்வர் குமார் ஆகியோரினால் தடுமாற்றத்தினை எதிர் கொண்டிருந்தது.

இந்த தடுமாற்றத்தினால் இலங்கையின் மூன்று விக்கெட்டுகள் குறுகிய ஓட்டங்களுக்குள் மிகவும் விரைவாக பறிபோயிருந்தது. இதில் நிரோஷன் திக்வெல்ல 38 பந்துகளுக்கு 35 ஓட்டங்களுடனும், அணித் தலைவர் தினேஷ் சந்திமால் 28 ஓட்டங்களுடனும் தசுன் சானக்க ஓட்டமேதுமின்றியும் ஓய்வறை சென்றனர்.

மூன்று முக்கியமான மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களையும் பறிகொடுத்த இலங்கை அணி ஒரு கட்டத்தில் 201 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலை ஒன்றை அடைந்தது.

எனினும், பின்வரிசை துடுப்பாட்டத்தில் போராட்டத்தை வெளிப்படுத்திய ரங்கன ஹேரத் இலங்கை அணிக்காக பந்து வீச்சில் பெரிய சேவையை தராமல் போனாலும் போராட்டமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

ஹேரத்தின் போராட்டத்தினால் போட்டியின் மதிய போசண இடைவேளை வரை இலங்கை அணியின் துடுப்பாட்டம் தொடர்ந்திருந்தது.

மதிய போசண இடைவேளையை அடுத்து ரங்கன ஹேரத் டெஸ்ட் போட்டிகளில் தனது மூன்றாவது அரைச்சதத்துடன் இலங்கை அணியானது 83.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 294 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டதுடன் இந்திய அணியை விட 122 ஓட்டங்களால் முதல் இன்னிங்சில் முன்னிலை அடைந்து கொண்டது.

இலங்கை அணி சார்பாக முதல் இன்னிங்சில் அதிக ஓட்டங்கள் பெற்றவராக பதிவாகியிருந்த ஹேரத் 105 பந்துகளை முகம் கொடுத்து 9 பவுண்டரிகள் அடங்கலாக மொத்தமாக 67 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

இந்திய அணியின் பந்து வீச்சு சார்பாக புவ்னேஸ்வர் குமார் மற்றும் மொஹமட் ஷமி ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை பகிர்ந்து கொண்டதோடு, உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார்.

தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான ஷிக்கர் தவான் மற்றும் லோக்கேஷ் ராகுல் ஆகியோர் முதல் இன்னிங்ஸ் போல் அல்லாது சிறந்த ஆரம்பத்தை வழங்கியிருந்தனர்.

இந்திய அணி முதல் விக்கெட்டை வீழ்த்த இலங்கை அணிக்கு இந்த இன்னிங்சில் தில்ருவான் பெரேரா வீசிய 16 ஆவது ஓவரில் வாய்ப்பு ஒன்று சந்தேகமான பிடியெடுப்பு மூலம் கிட்டியிருந்தது. இதற்காக இலங்கை அணி மூன்றாம் நடுவரின் உதவியை நாடியிருந்த போதிலும் அது உபயோகம் தந்திருக்கவில்லை.

இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் அணிகள் மோதும் முத்தரப்பு டி20 தொடர் கொழும்பில்

இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் அணிகள் மோதும் முத்தரப்பு டி20 தொடர் கொழும்பில்

இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் முத்தரப்பு டி20 தொடர் அடுத்த வருடம் மார்ச் மாதம் 8ஆம் திகதி முதல் …

போட்டியின் தேநீர் இடைவேளையை தாண்டியும் இந்திய அணியின் ஆரம்ப வீரர்களின் இணைப்பாட்டம் தொடர்ந்தது. முதல் விக்கெட்டுக்காக வலுவான  166 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக பகிரப்பட்டது. இந்திய அணியின் முதல் விக்கெட்டாக ஷிக்கர் தவான் 12 ஆவது டெஸ்ட் சதத்தினை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் ஆட்டமிழந்தார். தவான் 116 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 11 பவுண்டரிகள் அடங்கலாக 94 ஓட்டங்களைக் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஷிக்கர் தவானின் விக்கெட்டை அடுத்து சிறிது நேரத்தில் போதிய வெளிச்சமின்மையினால் நான்காம் நாள் ஆட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. நான்காம் நாள் நிறைவில் இந்திய அணி  தமது இரண்டாம் இன்னிங்சில் 39.3 ஓவர்களுக்கு ஒரு விக்கெட்டை மாத்திரம் பறிகொடுத்து 171 ஓட்டங்களுடன் காணப்படுகின்றது.

இந்திய அணிக்கு துடுப்பாட்டத்தில் இலங்கையை விட 49 ஓட்டங்கள் முன்னிலை பெற உதவி செய்த லோக்கேஷ் ராகுல் தனது 10 ஆவது டெஸ்ட் அரைச் சதத்தைக் கடந்து 73 ஓட்டங்களுடனும், செட்டெஸ்வர் புஜாரா 2 ஓட்டங்களுடனும் களத்தில் ஆட்டமிழக்காது உள்ளனர்.

இலங்கை அணி சார்பாக பந்து வீச்சில் தசுன் சானக்க ஒரு விக்கெட்டைக்  கைப்பற்றியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

இந்தியா (முதல் இன்னிங்ஸ்) – 172 (59.3) செட்டெஸ்வர் புஜாரா 52(117), ரித்திமன் சஹா 29(83), சுரங்க லக்மால் 26/4(19), தில்ருவான் பெரேரா 19/2(7), தசுன் சானக்க 36/2(12), லஹிரு கமகே 59/2(17.3)

இலங்கை (முதல் இன்னிங்ஸ்) – 294 (83.4)ரங்கன ஹேரத் 67(105), அஞ்செலோ மெதிவ்ஸ்  52(94), லஹிரு திரிமான்ன 51(94), நிரோஷன் திக்வெல்ல 35(38), புவ்னேஸ்வர் குமார் 88/4(27), மொஹமட் ஷமி 100/4(26.3), உமேஷ் யாதவ் 79/2(20)

இந்தியா (இரண்டாம் இன்னிங்ஸ்) – 171/1 (39.3)ஷிக்கர் தவான் 94(116), லோக்கேஷ் ராகுல் 73*(113), தசுன் சானக்க 29/1(9.3)

போட்டியின் ஐந்தாவதும் இறுதியுமான நாள் நாளை தொடரும்.