சுற்றுலா இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒரு நாள் போட்டியில் பந்து வீச்சு, துடுப்பாட்டம் ஆகிய இரண்டு துறைகளிலும் சிறப்பாக செயற்பட்ட இந்தியா இலங்கை அணியை ஆறு விக்கெட்டுகளால் வீழ்த்தி தொடரையும் 5-0 என கைப்பற்றியுள்ளது.

கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச மைதானத்தில் மழை காரணமாக சற்று தாமதமாக ஆரம்பமாகியிருந்த இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற  இலங்கை அணியின் தலைவர் உபுல் தரங்க முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்திருந்தார்.

மந்த கதியில் ஓவர்கள் வீச அணியினை வழிநடாத்தியமைக்காக போட்டித் தடையினைப் பெற்றிருந்த உபுல் தரங்க இன்று களமிறங்கியிருந்த இலங்கை அணியில் குசல் மெண்டிசை பிரதியீடு செய்திருந்தார். மறுமுனையில் இந்திய அணியும் நான்கு மாற்றங்களுடன் போட்டிக்கு தயராகியிருந்தது. புவ்னேஸ்வர் குமார், அஜிங்கியா ரஹானே, கேதர் ஜாதவ் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் இந்திய அணியில் உள்வாங்கப்பட்டிருந்தனர்.

அடுத்து துடுப்பாட வந்த இலங்கை அணியில் நிரோஷன் திக்வெல்ல மற்றும் அணித் தலைவர் உபுல் தரங்க ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். போட்டியின் ஆரம்பத்திலேயே இலங்கை அணி நிரோஷன் திக்வெல்லவை வெறும் 2 ஓட்டங்களுடன் பறிகொடுத்தது. தொடர்ந்து வந்த அதிரடி துடுப்பாட்ட வீரரான தில்ஷான் முனவீர ஏமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இவ்வாறாக இலங்கை இரண்டு விக்கெட்டுகளை விரைவான முறையில் பறிகொடுத்திருப்பினும் களத்தில் நின்ற உபுல் தரங்க பவுண்டரிகளை விளாசி ஒரு புறத்தில் அணியின் ஓட்ட எண்ணிக்கையை விரைவாக உயர்த்தியிருந்தார். எனினும், அவர் அரைச் சதத்துக்கு 2 ஓட்டங்களே இருந்த போது துரதிஷ்டவசமாக ஜஸ்பிரிட் பும்ராவின் பந்துவீச்சில் வீழ்த்தப்பட்டார். ஆட்டமிழக்கும் போது அவர் 34 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 9 பவுண்டரிகள் உடன் 48 ஓட்டங்களைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தென் ஆபிரிக்க கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ஒட்டிஸ் கிப்சன்

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் இங்கிலாந்து அணியின்..

அணித் தலைவரின் விக்கெட்டினை பறிகொடுத்த இலங்கை ஒரு கட்டத்தில், 63 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து சற்று தடுமாற்றத்தை எதிர்கொண்டது. இத்தருணத்தில் ஜோடி சேர்ந்த லஹிரு திரிமான்ன மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை மீண்டும் கட்டியெழுப்பினர். இவர்களினால் நான்காம் விக்கெட்டிற்காக 124 ஓட்டங்கள் பகிரப்பட்டது. இந்த இணைப்பாட்டமே இந்திய அணிக்கெதிராக நான்காம் விக்கெட்டிற்காக இலங்கை சார்பான அதிக ஓட்டங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நீண்ட நேரம் நீடித்த திரிமான்ன மற்றும் மெதிவ்ஸ் ஆகியோரின் இணைப்பாட்டம் புவ்னேஸ்வர் குமார் கைப்பற்றிய விக்கெட் மூலம் தகர்க்கப்பட்டது. இலங்கை அணியின் நான்காவது விக்கெட்டாக பறிபோன திரிமான்ன தனது 18 ஆவது அரைச் சதத்தினை பூர்த்தி செய்து மொத்தமாக 67 ஓட்டங்களைப் பெற்றார்.

திரிமான்னவின் ஆட்டமிழப்பினை தொடர்ந்து சடுதியான முறையில் தமது துடுப்பாட்ட வீரர்களை பறிகொடுத்த இலங்கை, முடிவில் 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 238 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பாக சிறப்பாக செயற்பட்ட அஞ்செலோ மெதிவ்ஸ் தனது 35 ஆவது ஒரு நாள் அரைச் சதத்துடன் 98 பந்துகளில் மொத்தமாக 55 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

இந்திய அணி சார்பாக பந்து வீச்சில் இலங்கைக்கு அச்சுறுத்தலாக அமைந்த புவ்னேஸ்வர் குமார் 42 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை சாய்த்ததுடன், ஜஸ்பிரிட் பும்ரா 2 விக்கெட்டுகளை பதம்பார்த்து இத்தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரராக தன்னை பதிவு செய்து கொண்டார்.

இதனையடுத்து வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 239 ஓட்டங்களை 50 ஓவர்களில் பெறுவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய இந்திய அணியினர், தமது ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் அஜிங்கியா ரஹானே ஆகிய வீரர்களை குறைவான ஓட்டங்களுக்குள் இழந்து தடுமாற்றத்தினை வெளிக்காட்டியிருந்தனர்.

தடுமாற்றத்தினை எதிர்கொண்டாலும் இந்திய அணியின் தலைவர் விராத் கோஹ்லி, மனீஷ் பாண்டே உடன் சேர்ந்து சிறப்பான முறையில் ஆடி அணிக்கு ஓட்டங்களை சேர்த்தார். இதனால், இந்திய அணியின் மூன்றாம் விக்கெட்டிற்காக 99 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக பெறப்பட்டது.

இந்திய அணியின் மூன்றாம் விக்கெட்டாக மனீஷ் பாண்டே 36 ஓட்டங்களுடன் வெளியேறினார். இவரை அடுத்து வந்த கேதர் ஜாதவ் அரைச்சதம் விளாச, அடுத்த முனையில் இந்திய அணியின் தலைவர் கோஹ்லியும் தனது 30ஆவது ஒரு நாள் சதத்தையும் பூர்த்தி செய்தார்.

இவர்களின் அபார ஆட்டத்தினால் இந்திய அணி, நான்கு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 46.3 ஓவர்களில் 239 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.

இதில் இறுதி வரை ஆட்டமிழக்காத விராட் கோஹ்லி 116 பந்துகளில் 9 பவுண்டரிகள் அடங்கலாக 110 ஓட்டங்களையும், கேதர் ஜாதவ் 73 பந்துகளில் 63 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

இலங்கை அணியின் பந்து வீச்சில் விஷ்வ பெர்னாந்து, லசித் மாலிங்க, வனிந்து ஹஸரங்க மற்றும் மலிந்த புஷ்பகுமார ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் 1975ஆம் ஆண்டில் இருந்து ஒரு நாள் போட்டிகளில் விளையாடிவரும் இலங்கை அணியை அவர்களது சொந்த மண்ணில் வைத்து இருதரப்பு ஒரு நாள் தொடரொன்றில் வைட் வொஷ் செய்த முதல் அணியாக இந்தியா காணப்படுகின்றது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை238 (49.4) –லஹிரு திரிமான்ன 67(102), அஞ்செலோ மெதிவ்ஸ் 55(98), உபுல் தரங்க 48(34), புவ்னேஸ்வர் குமார் 42/5(9.4)

இந்தியா – 239/4 (46.3) – விராத் கோஹ்லி 110(116), கேதர் ஜாதவ் 63(73), மனீஷ் பாண்டே 36(53), லசித் மாலிங்க 35/1(8)

போட்டி முடிவு இந்தியா 6 விக்கெட்டுகளால் வெற்றி