அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை இளையோர் அணி அவுஸ்திரேலிய இளையோர் அணியுடன் ஒரு உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டி மற்றும் ஐந்து ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகின்றது. அந்த வகையில் இலங்கை அவுஸ்திரேலிய கனிஷ்ட அணிகள் மோதும் மூன்று நாட்கள் கொண்ட இளையோர் டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகியிருந்தது.

Sri Lanka U19 Cricket Team

ஹொபர்ட் நகரில் ஆரம்பமாகியிருந்த இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்றிருந்த இலங்கை கனிஷ்ட அணியின் தலைவர் கமிந்து மெண்டிஸ் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை மைதானத்தின் சொந்தக்காரர்களான அவுஸ்திரேலியாவிற்கு வழங்கியிருந்தார்.  

இதன்படி முதல் இன்னிங்சினை ஆரம்பித்திருந்த அவுஸ்திரேலிய கனிஷ்ட அணியின் முதல் மூன்று விக்கெட்டுகளும், சிறப்பாக செயற்பட்டிருந்த நிப்புன் ரன்சிக்க மற்றும் திரித்துவக் கல்லூரி வீரர் ரஷ்மிக்க தில்ஷான் ஆகியோரினால் குறுகிய ஓட்ட இடைவெளிக்குள் வீழ்த்தப்பட்டிருந்தது.

எனினும் அவுஸ்திரேலிய கனிஷ்ட அணி சார்பாக, நான்காம் இலக்கத்தில் துடுப்பாடியிருந்த ஜேசன் சங்கா 41 ஓட்டங்களினை குவித்து அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கையை நூறினை தாண்டச் செய்தார்.

இதனையடுத்து ஐந்தாம் விக்கெட்டிற்காக ஜோடி சேர்ந்த ஜொனதன் மெர்லோ மற்றும் ஜெக் எட்வர்ட்ஸ் ஆகியோர் சாதுர்யமாக ஆடத்தொடங்கி பாரிய இணைப்பாட்டம் ஒன்றிற்கு அடித்தளம் போட்டனர்.

இரண்டு வீரர்களினாலும் போடப்பட்ட அடித்தளம் உறுதியாக, ஐந்தாம் விக்கெட்டிற்காக அவுஸ்திரேலிய இளம் வீரர்களால் 182 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக பகிரப்பட்டது.

அவுஸ்திரேலிய கனிஷ்ட அணியின் ஐந்தாம் விக்கெட்டாக, தென் மாகாணத்தினை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் நிப்புன் ரன்சிக்கவினால் ஜெக் எட்வர்ட்ஸ் வீழ்த்தப்பட்டார். ஆட்டமிழந்த எட்வர்ட்ஸ் சதம் கடந்ததுடன் 3 சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகள் அடங்கலாக மொத்தமாக 106 ஓட்டங்களைப் பெற்று சிறந்த ஆட்டத்தினை வெளிக்காட்டினார்.

இதனையடுத்து, இவருடன் களத்தில் நின்ற ஜொனதன் மெர்லோவும் சதம் பெற தமது முதல் இன்னிங்சினை அவுஸ்திரேலிய கனிஷ்ட அணி நிறுத்திக்கொண்டது.

ஆட்டத்தினை நிறுத்தும் போது அவுஸ்திரேலிய கனிஷ்ட அணி 6 விக்கெட்டுகளை இழந்து 79.3 ஓவர்களில் 309 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றிருந்த மெர்லோ ஆட்டமிழக்காமல் 133 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 11 பவுண்டரிகள் அடங்கலாக 100 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

cricket.com.au
cricket.com.au

இலங்கை கனிஷ்ட அணி சார்பாக பந்து வீச்சில் நிப்புன் ரன்சிக்க மொத்தமாக மூன்று விக்கெட்டுகளையும், ரஷ்மிக்க தில்ஷான் மற்றும் புனித ஜோசப் கல்லூரி வீரர் ஜெஹான் டேனியல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் சுருட்டியிருந்தனர்.

இதனையடுத்து பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை கனிஷ்ட அணியினர் போட்டியின் ஆட்ட நேர முடிவின் போது ஒரு விக்கெட்டினை இழந்து 38 ஓட்டங்களைப் பெற்றுள்ளனர்.

களத்தில் விஷ்வ சத்துரங்க 7 ஓட்டங்களுடனும் ஹஸித்த போயகொட 8 ஓட்டங்களுடனும் நிற்கின்றனர்.

இன்றைய நாளில் இலங்கை கனிஷ்ட அணியின் முதல் விக்கெட்டாக போட்டியின் ஆரம்பத்திலேயே பறிபோயிருந்த மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியின் வலதுகை துடுப்பாட்ட வீரர் லசித் குருஸ்புள்ளே 14 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

அவுஸ்திரேலிய கனிஷ்ட அணி (முதல் இன்னிங்ஸ்) – 309/6 (79.3) – ஜெக் எட்வர்ட்ஸ் 106, ஜொனதன் மெர்லோ 100*, ஜேசன் சங்கா 41, ரயான் ஹன்கே 17, நிப்புன ரன்சிக்க 46/3

இலங்கை கனிஷ்ட அணி (முதல் இன்னிங்ஸ்) – 38/1 (8) – லசித் குருஸ்புள்ளே 14, விஷ்வ சதுரங்க 7*

போட்டியின் இரண்டாம் நாளை தொடரும்.