இஸ்ஸதீனின் இரு கோல்களின் உதவியுடன் வெற்றி பெற்ற ராணுவப்படை

603
Army SC vs Navy SC

டயலொக் சம்பியன் லீக் தொடரின் சுப்பர் 8 சுற்றில் இன்று நிறைவடைந்த இரண்டாம் வரத்திற்கான கடைசிப் போட்டியில் 3-2 என்ற கோல்கள் கணக்கில் இலங்கை கடற்படை அணியை, பிரபல ராணுவப்படை அணி வீழ்த்தி, சுப்பர் 8 சுற்றின் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

ராணுவப்படை விளையாட்டுக் கழகத்தைப் பொறுத்தவரை ஏற்கனவே நடைபெற்று முடிந்து குழு நிலைப் போட்டிகளில் எந்தவித தோல்விகளையும் சந்திக்காது A குழுவில் முதல் இடத்தைப் பெற்றது. அதேபோல், சுப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் விமானப்படை அணியுடன் 2-2 என்ற கோல்கள் கணக்கில் போட்டியை சமநிலைப்படுத்தியது.

அதேபோன்று, கடற்படை விளையாட்டுக் கழக அணி, குழு நிலையில் B குழுவில் மூன்றாம் இடத்தினை பெற்றதுடன் சுப்பர் 8 சுற்றில் தமது முதல் போட்டியில் சொலிட் அணியிடம் 5-0 என்ற கோல்கள் கணக்கில் படுதோல்வியடைந்திருந்தது.

இரண்டாவது பாதியின் அதிரடியினால் நிவ் யங்சை வீழ்த்திய ரினௌன் அணி

இந்நிலையில் சுப்பர் 8 சுற்றின் இரண்டாவது வாரப் போட்டிகளின் இறுதிப் போட்டியாக களனிய விளையாட்டு மைதானத்தில் இலங்கை ராணுவப்படை மற்றும் கடற்படை அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இவ்விரு அணிகளின் பலத்தைப் கணிப்பிடும்பொழுது FA கிண்ணத்தின் நடப்புச் சம்பியனாக உள்ள ராணுவப்படை அணியே அதிக பலத்துடன் உள்ளமையினால், போட்டியில் அவர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்றே அதிகமானவர்கள் எதிர்பார்த்தனர்.

ராணுவப்படை அணியினர் 4-1-3-2 என்ற முறைப்படியும், கடற்படை அணியினர் 4-4-2 என்ற முறையிலும் போட்டியை ஆரம்பித்தனர். போட்டி ஆரம்பித்து 16ஆவது நிமிடத்தில் ராணுவப்படை அணியின் தலைவர் மதுஷான் முதல் கோலுக்கான சிறந்த ஒரு முயற்சியை மேற்கொண்டார். எனினும் அவர் கோல் காப்பாளரைத் தாண்டி கோலுக்குள் செலுத்திய பந்து கம்பங்களுக்கு வெளியே சென்றது.

அதற்கு அடுத்த நிமிடத்திலும் அவ்வணி வீரர் புன்சர திருனவுக்கு லக்ஷிதவினால் செலுத்தப்பட்ட பந்தை, அவர் கோலுக்குள் செலுத்த முயற்சிக்கையில் பந்து கம்பங்களுக்கு மேலால் சென்றது.

எனினும், போட்டியின் 22ஆவது நிமிடத்தில் இஸ்ஸதீனுக்கு கிடைத்த பந்தை அவர் கோல்களுக்குள் உதைய, கோல் காப்பாளர் அஜித் குமார அதனை மறைத்தார். எனினும் மீண்டும் பந்து இஸ்ஸதீனிடம் வர, அவர் அதனை கோலாக்கினார்.

இஸ்ஸதீனின் கோல் பெறப்பட்ட அடுத்த இரு நிமிடங்களில் கடற்படை அணியினருக்கு பெனால்டி வாய்பொன்று கிடைத்தது. பெனால்டி பகுதியில் வைத்து ராணுவப்படை அணி வீரர் லக்ஷித ஜயதுங்கவின் கையில் பந்து பட்டமையினால் இந்த பெனால்டி வழங்கப்பட்டது. பெனால்டி வாய்ப்பைப் பெற்ற கிறிஸ்டீன் பெர்ணான்டோ, அதனை கோலாக்கினார்.

கோல்களின் எண்ணிக்கை சமநிலையில் இருக்கும்பொழுது, போட்டியின் 33ஆவது நிமிடத்தில் ராணுவப்படை அணியின் வீரர் ஒருவர் எதிரணியின் கோல் திசைக்குள் பந்தை செலுத்த, அதனைப் பெற்ற இஸ்ஸதீன் தனியே பந்தை கொண்டுசென்றார். அதனைத் தடுக்க வந்த கோல் காப்பாளரையும் தாண்டி அவர் பந்தை கொண்டு சென்று தனது அணிக்கான இரண்டாவது கோலைப் பெற்றார்.

போட்டியின் 40 நிமிடங்கள் கடந்த நிலையில் கடற்படை அணியினருக்கு பல ப்ரீ கிக் வாய்ப்புகள் கிடைத்தன. எனினும் அவை அனைத்தும் அவ்வணிக்கு கோல் பெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தவில்லை.

முதல் பாதி: ராணுவப்படை விளையாட்டுக் கழகம் 02 – 01 கடற்படை விளையாட்டுக் கழகம்

பின்னர் ஆரம்பமாகிய இரண்டாவது பாதியில் இரு அணிகளும் சம அளவில் மோதிக்கொண்டபோதும், 57ஆவது நிமிடத்தில் ராணுவப்படை அணி வீரர் சஜித் குமார மூலம் அவ்வணி மூன்றாவது கோலைப் பெற்றது.

அந்த கோல் பெறப்பட்டு 2 நிமிடங்கள் கடந்த நிலையில், (60ஆவது நிமிடம்) ராணுவப்படை அணியின் பின்கள வீரர் ராஹ்மானுக்கு போட்டியின் முதலாவது மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது.

எதிர்பார்ப்புகளுக்கு மாற்றமாக முடிவடைந்த புளு ஸ்டார், விமானப்படை இடையிலான போட்டி

அதனைத் தொடர்ந்து அடுத்த வாய்ப்பாக புன்சர திருனவிற்கு 62ஆவது நிமிடத்தில் சிறந்த ஒரு வாய்ப்பு கிடைத்தும் அவர் அதனை கோலாக்கவில்லை. அதுபோன்றே 67ஆவது நிமிடத்தில் இஸ்ஸதீன் தனக்கு வந்த பந்தை தலையால் கோல்களுக்குள் செலுத்த, கடற்படை அணியின் கோல் காப்பாளர் அஜித் குமார சிறந்த முறையில் பாய்ந்து பிடித்து கோலைத் தடுத்தார்.

கடற்படை அணியும் பல வாய்ப்புகளை தொடர்ந்து பெற்று வந்த நிலையில், இறுதியாக 87ஆவது நிமிடத்தில் உயர்ந்து வந்த பந்தை, மேனக பெர்னான்டோ தலையால் முட்டி கம்பங்களுக்குள் செலுத்தி கோலாக்கினார்.

அதன் பின்னர் போட்டியை சமப்படுத்துவதற்கான கோலைப் பெற முயற்சித்த கடற்படை அணியினர், மிகவும் வேகமாக செயற்பட்டனர். எனினும் அதற்கு எதிராக செயற்பட்ட ராணுவப்படை அணியினரும். எதிரணி வீரர்களை தடுத்து ஆடினர்.

போட்டியில் 90 நிமிடங்கள் கடந்த நிலையில் ராணுவப்படை அணியின் சுனில் ஹப்புஹாமிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. அதனுடன் பெற்ற கோணர் உதையின் மூலம் கடற்படை அணி இறுதி கோல் முயற்சியை மேற்கொண்டது. எனினும் அது கோல் காப்பாளர் குமார சிறிசேனவினால் தடுக்கப்பட, போட்டி நிறைவடைந்தது.

முழு நேரம்: ராணுவப்படை விளையாட்டுக் கழகம் 03 – 02 கடற்படை விளையாட்டுக் கழகம்

Thepapare.com இன் போட்டியின் சிறப்பாட்டக்காரர் – மொஹமட் இஸ்ஸதீன் (ராணுவப்படை விளையாட்டுக் கழகம்)

வெற்றியின் பின்னர் ராணுவப் படை அணியின் பயிற்றுவிப்பாளர் பஹ்மி thepapare.com இடம் கருத்து தெரிவிக்கையில், ”எமது முதல் போட்டிக்கு மூன்று மாதங்களின் பின்னர் நாம் மீண்டும் விளையாடியிருக்கின்றோம். நாம் நன்றாக விளையாடினோம் அல்லது கடற்படை அணி மோசமாக விளையாடியது என்று நான் கூற விரும்பவில்லை. இரு தரப்பும் சில தவறுகளை விட்டன. நாம் அவற்றைத் திருத்த வேண்டும்.

நடுவரின் இன்றைய தீர்ப்புடன் நாம் திருப்தியடைவில்லை. அவர் பந்து கையில் பட்டமைக்காக வழங்கிய தீர்ப்பு சரியான தீர்ப்பல்ல. நடுவரின் இந்த தீர்ப்பு நாம் எதிர்பார்க்காத விதத்தில் இருந்தது” என்றார்.

அதேபோன்று, கடற்படை அணியின் பயிற்றுவிப்பாளர் தம்மிக அதுகொரல கருத்து தெரிவிக்கையில், ”எமது அணி முதல் பாதியில் சிறந்த முறையில் விளையாடவில்லை. கோல் காப்பாளரின் தவறுகளே கோல்கள் சென்றமைக்கு காரணம் என்பதை ஏற்றுக்கொள்கின்றோம்.

இரண்டாவது பாதியில் எமது வீரர்கள் மிகவும் திறமையாக செயற்பட்டனர். எமக்கு போட்டியை சமப்படுத்துவதற்கு அல்லது வெற்றி கொள்வதற்கு சிறந்த வாய்ப்புகள் கிடைத்தன. எனினும் அவற்றை நாம் தவறவிட்டோம்” என்றார்.

கோல்கள் பெற்றவர்கள்

ராணுவப்படை அணி – இஸ்ஸதீன் 22’, 33’, சஜித் குமார 57’

கடற்படை அணி – கிறிஸ்டீன் பெர்ணான்டோ 24’, மேனக பெர்ணான்டோ 87’

மஞ்சள் அட்டை

ராணுவப்படை அணி – அசிகுர் ரஹ்மான் 60’, ரொஷான் அப்புஹாமி 90+4

சுப்பர் 8 சுற்றின் இரண்டாவது வாரப் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இதன் மூன்றாவது வாரப் போட்டிகள் எதிர்வரும் 13ஆம் திகதி களனிய விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகும்.

போட்டிகளின் அட்டவணை