உசைன் போல்ட்டின் சாயலில் ஓடி தங்கங்களை அள்ளிய குருநாகல் வீரர் சிதும்

120

35ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் கடைசியும், பிரதானமானதுமான மெய்வல்லுனர் போட்டிகள் கடந்த ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி முதல் 03ஆம் திகதி வரை கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்றது.   

நாடளாவிய ரீதியிலிருந்து 6,000 இற்கும் அதிகமான வீர வீராங்கனைகள் பங்குகொண்ட இம்முறைப் போட்டித் தொடரில் ஆண்கள் பிரிவில் 27 போட்டிச் சாதனைகளும், பெண்கள் பிரிவில் 25 போட்டிச் சாதனைகளும் உள்ளடங்கலாக 49 போட்டிச் சாதனைகள் முறியடிக்கப்பட்டன.  

நீளம் பாய்தலில் வெள்ளிப் பதக்கங்களை வென்ற கமல் ராஜ் மற்றும் ஜெனுஷன்

அகில இலங்கை மெய்வல்லுனர் போட்டிகளில்….

இதேநேரம், கடந்த காலங்களைப் போல கொழும்பைச் சேர்ந்த வீரர்களைப் போல பின்தங்கிய கிராமங்களைச் சேர்ந்த வீரர்களும் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்

இதில் குருநாகல் சேர் ஜோன் கொத்தலாவல மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 15 வயதுடைய சிதும் ஜயசுந்தர 100, 200 மீற்றர், 400 மீற்றர் மற்றும் 4x400 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றதுடன், 200 மற்றும் 400 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் 2 புதிய போட்டிச் சாதனைகளையும் நிலைநாட்டினார்.

இதேநேரம், உலகின் மின்னல் வேக வீரரும், ஒலிம்பிக் சம்பியனுமான ஜமைக்காவின் உசைன் போல்ட்டைப் போல ஓடுகின்ற ஆற்றலைக் கொண்ட இவர், அனைவராலும் இலங்கையின் உசைன் போல்ட் என அழைக்கப்படுகின்றமை  மற்றுமொரு சிறப்பம்சமாகும்

இந்த நிலையில், இம்முறை அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் தொடரில் போட்டிகளின் முதல் நாளன்று நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீற்றர் அரையிறுதிப் போட்டியில் பங்குகொண்ட சிதும், போட்டியை 48.73 செக்கன்களில் நிறைவுசெய்து புதிய சாதனை நிலைநாட்டினார்

எனினும், போட்டியின் இரண்டாது நாளன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் களமிறங்கிய அவர், 48.91 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து தனது சாதனையை மீண்டும் புதுப்பித்து அசத்தினார்

போட்டிகளின் இரண்டாம் நாளன்று நடைபெற்ற ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 11.23 செக்கன்களில் நிறைவுசெய்து 2ஆவது தங்கப் பதக்கத்தை அவர் சுவீகரித்தார்.

அதனைத் தொடர்ந்து போட்டியின் மூன்றாம் நாளன்று நடைபெற்ற 16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட சிதும் ஜயசுந்தர, 22.16 செக்கன்களில் ஓடி முடித்து தனது இரண்டாவது புதிய போட்டிச் சாதனையை நிலைநாட்டினார்

அதிலும் குறிப்பாக, அரையிறுதிப் போட்டியில் நிலைநாட்டிய 22.38 செக்கன்கள் என்ற சாதனையை அவர் இறுதிப் போட்டியில் மீண்டும் முறியடித்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்

இதேநேரம், மூன்றாம் நாளன்று மாலை நடைபெற்ற 16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 4x400 அஞ்சலோட்டப் போட்டியில் (3 நிமி. 27.57 செக்.) குருநாகல் சேர் ஜோன் கொத்தலாவல வித்தியாலயம் புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது. இந்த அணியிலும் சிதும் ஜயசுந்தர இடம்பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது

இலங்கையின் வளர்ந்துவரும் பெண் மெய்வல்லுனர் பயிற்சியாளர்களில் ஒருவரான சுனேத்ரா கொடித்துவக்குவிடம் பயிற்சிகளை எடுத்து வருகின்ற குருநாகலையைச் சேர்ந்த சிதும் ஜயசுந்தர, இறுதியாக கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற தேசிய கனிஷ் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகள் மற்றும் சேர் ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் ஐந்து தங்கப் பதக்கங்களை சுவீகரித்தார்.  

முன்னதாக, கடந்த வருடம் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் அவர் 2ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதுஇவ்வாறிருக்க, போட்டியின் பிறகு தனது வெற்றி குறித்துப் பேசிய சிதும் ஜயசுந்தர, உண்மையில் 2 புதிய போட்டிச் சாதனைகளுடன் 4 தங்கப் பதக்கங்களை வெல்ல கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது. நான் உலகின் மின்னல் வேக வீரரான உசைன் போல்ட்டை தான் அதிக பின்பற்றுகிறேன். இதன் காரணமாகவோ தெரியவில்லை என்னை எல்லோரும் உசைன் போல்ட்டைப் போன்று ஓடுவதாகத் தெரிவிக்கின்றனர்.

அதேபோல என்னை இந்த இடத்துக்கு கொண்டு வருவதற்கு தாயைப் போல என்னோடு இருந்த எனது பயிற்சியாளர் சுனேத்ரா ஆசிரியைக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்

எனக்கு அம்மா, அப்பா மற்றும் தம்பி ஒருவர் உள்ளார். எனது அப்பா ஓரு வியாபாரி. தம்பி தரம் 8இல் கல்வி கற்கிறார். அத்துடன், மிகவும் ஷ்டத்துக்கு மத்தியில் தான் நான் இந்த இடத்துக்கு வந்தேன். எனவே முதலில் எனது பெற்றோருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்காலத்தில் இதைவிட நன்றாக பயிற்சிகளை எடுத்து இலங்கைக்கு பெருமையைத் தேடிக் கொடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளேன்” என தெரிவித்தார்

>>மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<