மஹாநாம – புனித ஜோசப் கல்லூரிகளின் அரையிறுதி போட்டிக்கு காலநிலை குறுக்கீடு

91

கொழும்பு மஹாநாம கல்லூரி மற்றும் புனித ஜோசப் கல்லூரி அணிகளுக்கு இடையிலான 19 வயதுக்கு உட்பட்ட பிரிவு ஒன்று (டிவிஷன் 1) தொடரின் அரையிறுதிப் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் பெரும்பாலான நேரம் சீரற்ற காலநிலையால் தடைப்பட்டது.

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெறும் பாடசாலைகளுக்கு இடையிலான இரண்டு நாட்கள் கொண்ட போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டமே கொழும்பு புனித பேதுரு கல்லூரி மைதானத்தில் இன்று (07) ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற புனித ஜோசப் கல்லூரி எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய மஹாநாம கல்லூரிக்கு புனித ஜோசப் கல்லூரியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெஹான் டேனியல் மற்றும் சுழல் பந்து வீச்சாளர் நிபுன் சுமனசிங்க நெருக்கடி கொடுத்தனர். இருவரும் முக்கிய தருணங்களில் விக்கெட்டுகளை வீழ்த்த மஹாநாம கல்லூரி தடுமாற்றம் கண்டது.

இந்நிலையில் மஹாநாம கல்லூரி 43 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 126 ஓட்டங்களை பெற்றிருந்தபோது போதிய வெளிச்சமின்மையால் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதில் மஹாநாம கல்லூரிக்காக இடது கை துடுப்பாட்ட வீரர் பவந்த வீரசிங்க அதிகபட்சமாக 39 ஓட்டங்களை பெற்றார்.

தசம புள்ளிகளால் இறுதிப் போட்டிக்குள் நுழைந்த திரித்துவக் கல்லூரி

இதன் போது புனித ஜோசப் கல்லூரிக்காக பந்துவீச்சில் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியின் சகலதுறை வீரரான ஜெஹான் டேனியல் 38 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். அதேபோன்று நிபுன் சுமனசிங்க 10 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முன்னதாக கடந்த வாரம் நடைபெற்ற பிரின்ஸ் ஓப் வேல்ஸ் கல்லூரிக்கும், திரித்துவ கல்லூரிக்கும் இடையிலான முதலாவது அரையிறுதிப் போட்டியும் சீரற்ற காலநிலையால் முதல் நாள் ஆட்டம் வெறும் 32 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. எனினும் அந்த போட்டியில் திரித்துவக் கல்லூரி அணி தசம புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இதன்படி திரித்துவ கல்லூரியுடனான இறுதிப் போட்டியில் மோதவுள்ள அணியை தீர்மானிக்கும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியின் இரண்டாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நாளை நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

மஹாநாம கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 126/6 (43) – பவந்த வீரசிங்க 39, ஜெஹான் டானியல் 3/38, நிபுன் சுமனசிங்க 2/10  

இரண்டாவது நாள் ஆட்டம் நாளை தொடரும்