ஹசித்த போயகொடவின் அதிரடி சதத்தின் உதவியுடன் திரித்துவக் கல்லூரி வலுவான நிலையில்

171
Hasitha SINGER U19 DIV I TOURNAMENT 27.02.2017

19 வயதுக்கு உட்பட்ட சிங்கர் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்காக இன்றைய தினம் நான்கு போட்டிகள் ஆரம்பமாயின. கண்டி திரித்துவக் கல்லூரி அணி சார்பாக சிறப்பாக துடுப்பாடிய ஹசித்த போயகொட அதிரடியாக 139 ஓட்டங்களை விளாசி அணியை வலுப்படுத்தினார். அதேநேரம் டி மெசனொட் கல்லூரி, குருகுல கல்லூரி மற்றும் ஸாஹிரா கல்லூரி ஆகியன சொற்ப ஓட்டங்களுக்கு விக்கெட்டுகளை இழந்து சற்று இக்கட்டான நிலையில் உள்ளது.

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு எதிர் குருகுல கல்லூரி, களனி

கட்டுனேறிய, புனித செபஸ்தியன் கல்லூரி மைதானத்தில் இவ்விரு அணிகளுக்கிடையிலான இரண்டு நாட்களை கொண்ட போட்டி இன்று ஆரம்பமாகியது. நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அந்த வகையில் களமிறங்கிய அவ்வணி லசித் க்ரூஸ்புள்ளேயின் 83 ஓட்டங்களின் உதவியுடன் 42 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்சுக்காக 205 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அதேநேரம் ஓட்டங்களை மட்டுப்படுத்திய குருகுல கல்லூரியின் ப்ருத்துவி ருசார 45 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதனையடுத்து களமிறங்கிய குருகுல கல்லூரி, பசிந்து உசெத்தியின் அதிரடி பந்து வீச்சில் 144 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்ச ஓட்டங்களாக அச்சிந்த மல்ஷான் 46 ஓட்டங்களை பதிவு செய்தார். அந்த வகையில் 61 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற நிலையில் இரண்டாம் இன்னிங்சை ஆரம்பித்த நீர்கொழும்பு, மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது 1 விக்கெட்டினை மாத்திரம் இழந்து 56 ஓட்டங்களை பெற்றுள்ளது. மீண்டும் சிறப்பாக துடுப்பாடிய லசித் க்ரூஸ்புள்ளே ஆட்டமிழக்காமல் 36 ஓட்டங்களுடன் களத்தில் இருக்கிறார்.

நாளை போட்டியின் இரண்டாம் நாளாகும்.

போட்டியின் சுருக்கம்:

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 205 (42) – லசித் க்ரூஸ்புள்ளே 83, ரவிந்து பெர்னாண்டோ 39, ஷங்க பூர்ண 24, ப்ருத்துவி ருசார 6/45

குருகுல கல்லூரி, களனி (முதல் இன்னிங்ஸ்): 144 (36.5) – அச்சிந்த மல்ஷான்  46, பசிந்து உசெத்தி 4/50, சச்சிந்து கொலம்பகே 2/29

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு (இரண்டாம் இன்னிங்ஸ்): 56/1 (11) – லசித் க்ரூஸ்புள்ளே 36 *


டி மெசனொட் கல்லூரி, கந்தானை எதிர் புனித பெனடிக்ட் கல்லூரி, கொழும்பு

இவ்விரு அணிகளுக்கிடையிலான இந்த போட்டி புனித பெனடிக்ட் கல்லூரி மைதானத்தில் இன்று ஆரம்பித்தது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெனடிக் கல்லூரி, டி மெசனொட் கல்லூரியை முதலில் துடுப்பாடுமாறு பணித்தது. அந்த வகையில் முதலில் களமிறங்கிய டி மெசனொட் கல்லூரி மஹீஷ் தீக்ஷன மற்றும் சமிந்து விஜேசிங்கவின் அதிரடி பந்து வீச்சில் 39.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 134 ஓட்டங்களை மாத்திரமே முதல் இன்னிங்சுக்காக பெற்றுக்கொண்டது.

அதனையடுத்து களமிறங்கிய கொழும்பு, பெனடிக் கல்லூரி இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 145 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதோடு 11 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது. ஷிஹான் பெர்னாண்டோ மற்றும் சமிந்து விஜேசிங்க ஆட்டமிழக்காமல் முறையே 85, 39 ஓட்டங்களை பெற்றுள்ளனர்.

நாளை போட்டியின் இரண்டாம் நாளாகும்.

போட்டியின் சுருக்கம்:

டி மெசனொட் கல்லூரி, கந்தானை (முதல் இன்னிங்ஸ்): 134 (39.5) – சந்தீப் தேஷான் 38, பிரவீண் பொன்சேகா 38, மஹீஷ் தீக்ஷன 4/30, சமிந்து விஜேசிங்க 4/29

புனித பெனடிக் கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 145/3 (43) – ஷிஹான் பெர்னாண்டோ 85*, சமிந்து விஜேசிங்க 39*, சஷான் தினெத் 2/34


ஜனாதிபதி கல்லூரி, ராஜகிரிய எதிர் ஸாஹிரா கல்லூரி, கொழும்பு

ராஜகிரிய, ஜனாதிபதி கல்லூரி மைதானத்தில் ஆரம்பித்த இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டியில் முதலில் துடுப்பாடிய ஜனாதிபதி கல்லூரி சகல விக்கெட்டுகளையும் இழந்து 221 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அவ்வணி சார்பாக சிறப்பாக துடுப்பாடிய சாமோத் விக்ரமசூரிய மற்றும் ஹஷான் பிரியதர்ஷன முறையே 48, 44 ஓட்டங்களை அதிக பட்சமாக பதிவு செய்தனர். ஓட்டங்களை கட்டுப்படுத்திய சஜித் சமீர 38 ஓட்டங்களை மாத்திரமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதனை தொடர்ந்து களமிறங்கிய ஸாஹிரா கல்லூரி, இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது 6 விக்கெட்டுகளை இழந்து 143 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுள்ள நிலையில் 78 ஓட்டங்களால் பின்னிலையுற்று நெருக்கடியான சூழ்நிலையில் இருக்கிறது. அதிகபட்ச ஓட்டங்களாக முஹம்மத் ஷமாஸ் 72 ஓட்டங்களை பதிவு செய்தார்.

நாளை போட்டியின் இரண்டாம் நாளாகும்.

போட்டியின் சுருக்கம்:

ஜனாதிபதி கல்லூரி, ராஜகிரிய (முதல் இன்னிங்ஸ்): 221 (52.5) – சமோத் விக்ரமசூரிய 48, ஹஷான் பிரியதர்ஷன 44, சசிந்த லியனகே 28, முஹம்மத் ரிபாஸ் 22, சஜித் சமீர 5/38, முஹம்மத் நஜாத் 2/33

ஸாஹிரா கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 143/6 (36) – முஹம்மத் ஷமாஸ் 72, அர்விந்த் 34, சஜித் சமீர 26, சாலக்க பண்டார 2/08


திரித்துவக் கல்லூரி, கண்டி எதிர் றோயல் கல்லூரி, கொழும்பு

கொழும்பு றோயல் கல்லூரியில் மைதானத்தில் ஆரம்பித்த இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டியில் முதலில் துடுப்பாடிய கண்டி திரித்துவக் கல்லூரி ஹசித்த போயகொட பெற்றுக்கொண்ட அதிரடி சதத்தின் உதவியுடன் 6 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 321 ஒட்டங்களை பெற்று ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.

சிறப்பாக துடுப்பாடிய ஹசித்த போயகொட மற்றும் ஷனோகீத் சண்முகநாதன் அதிக பட்ச ஓட்டங்களாக முறையே 139, 65 ஓட்டங்களை பதிவு செய்தனர். அதனையடுத்து, களமிறங்கிய கொழும்பு றோயல் கல்லூரி, இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது 3 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 5 ஓட்டங்களை பெற்றுள்ளது.

நாளை போட்டியின் இரண்டாம் நாளாகும்.

போட்டியின் சுருக்கம்:

திரித்துவக் கல்லூரி, கண்டி (முதல் இன்னிங்ஸ் ): 321/6d (78.1) – ஹசித்த போயகொட 139, ஷனோகீத் சண்முகநாதன் 65, சானுக்க பண்டார 46, உவின் ஹேரத் 2/69, அஹிஷேக் மேத்தா 2/40

றோயல் கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ் ): 5/0 (3)