சிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்ட டிவிஷன் – 1 பாடசாலை அணிகளுக்கு இடையிலான இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் இரண்டு போட்டிகள் இன்று நிறைவடைந்தன.

புனித பெனடிக்ட் கல்லூரி, கொழும்பு எதிர் ஸாஹிரா கல்லூரி, மருதானை

மருதானை ஸாஹிரா கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இன்று (05) இரண்டாவது நாள் ஆட்டத்தின் பெரும்பாலான நேரம் மழையால் தடைப்பட்டதால் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.

இன்று தமது முதல் இன்னிங்சைத் தொடர்ந்த புனித பெனடிக்ட் கல்லூரி அணி 242 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

107 ஓட்டங்களுடன் இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த மஹேஷ் தீக்ஷன மேலும் 10 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

ஸாஹிரா கல்லூரி சார்பில் பந்து வீச்சில் மொஹமட் காலித் மற்றும் மொஹமட் டில்ஹான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் தமனது முதல் இன்னிங்சை ஆரம்பித்த ஸாஹிரா கல்லூரியால் சீரற்ற காலநிலை காரணமாக 38.2 ஓவர்களுக்கு மட்டுமே முகங்கொடுக்க முடிந்தது. அதற்குள் அந்த அணி 133 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை பறிகொடுத்து மிகவும் இக்கட்டான நிலையில் காணப்பட்டது. பந்துவீச்சில் பிரகாசித்த மொஹமட் டில்ஹான் ஸாஹிரா கல்லூரி சார்பில் துடுப்பாட்டத்திலும் அதிகபட்சமாக 29 ஓட்டங்களைக் குவித்தார்.

இலங்கை அணியின் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளராக திலான் சமரவீர

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் மத்திய வரிசைத் துடுப்பாட்ட வீரர் திலான் சமரவீர, இலங்கை அணியின் துடுப்பாட்டப்…

மறுபுறம் புனித பெனடிக்ட் கல்லூரி சார்பாக துடுப்பாட்டத்தில் சதம் பெற்ற மஹேஷ் தீக்ஷன பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இரண்டாவது நாள் ஆட்டத்தில் மொத்தம் 47 ஓவர்களே வீசப்பட்ட நிலையில் போட்டியை சமநிலை செய்வதற்கு சீரற்ற காலநிலை ஸாஹிரா கல்லூரிக்கு பெரிதும் உதவியது.

போட்டியின் சுருக்கம்

புனித பெனடிக்ட் கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 242/7d (69) – மஹேஷ் தீக்ஷன 117, விஹங்கே ருவன்ஹர 33, மொஹமட் காலித் 2/29, மொஹமட் டில்ஹான் 2/53

ஸாஹிரா கல்லூரி, மருதானை (முதல் இன்னிங்ஸ்) – 133/9 (38.2) – மொஹமட் டில்ஹான் 29, மொஹமட் ஷஹாதுல்லாஹ் 24, மஹேஷ் தீக்ஷன 4/44, ஜேசன் சார்ல்ஸ் 3/37

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.

புனித செபஸ்டியன் கல்லூரி, மொரட்டுவ எதிர் புனித தோமியர் கல்லூரி, மாத்தறை

மொரட்டுவ புனித செபஸ்டியன் கல்லூரி மைதானத்தில் A குழுவுக்காக நடைபெற்ற போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தில் மழையின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது.

முதல் நாளில் புனித செபஸ்டியன் கல்லூரி சகல விக்கெட்டுகளையும் இழந்து 260 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், இன்று புனித தோமியர் கல்லூரி முதல் இன்னிங்சைத் தொடர்ந்தபோதும் மொத்தம் 28 ஓவர்களுக்கே முகங்கொடுக்க முடிந்தது.

இதில் புனித தோமியர் கல்லூரி 69 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தபோதும் மழை காரணமாக இரண்டாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

வெற்றி தோல்வியின்றி முடிவுற்ற இந்தப் போட்டியில் முதல் இன்னிங்சுக்கான புள்ளிகள் கூட எந்த அணிக்கும் கிடைக்கவில்லை.

போட்டியின் சுருக்கம்

புனித செபஸ்டியன் கல்லூரி, மொரட்டுவ (முதல் இன்னிங்ஸ்) – 260 (82.4) – மலிந்த பீரிஸ் 60, ஷனில் பெர்னாண்டோ 47, கிஹான் சேனநாயக்க 57*, வினூஜ ரணசிங்க 41*, சச்சில ரஷ்மிக்க 3/121, சினெத் சிதார 2/45

புனித தோமியர் கல்லூரி, மாத்தறை (முதல் இன்னிங்ஸ்) – 69/3 (28) – லஹிரு டில்ஷான் 36*, ஜனிஷ்க பெரேரா 2/14

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.