கோடை கால விடுமுறைக்கு பின்னர் பாடசாலைகளுக்கு இடையிலான சிங்கர் கிண்ணப் ரக்பி போட்டிகளின் இரண்டாம் சுற்று எதிர்வரும் வெள்ளிகிழமை ஆரம்பமாகவுள்ளது. ஏற்கனவே, முதல் சுற்றுப் போட்டிகள் நிறைவுற்றுள்ள நிலையில், ரக்பி ரசிகர்களை மீண்டுமொரு முறை குதூகலப்படுத்தும் வகையில்,  இப்போட்டிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

மேலதிக விபரங்களுக்கு Thepapare.com இன் பாடசாலைகளுக்கிடையிலான ரக்பி போட்டிகள் பக்கத்தினை பார்க்கவும்

இசிபதன (3) எதிர் ஸாஹிரா (8)
திகதி : 28-04-2017
நேரம் : பிற்பகல் 4.15 மணிக்கு
இடம் : ஹெவலொக் மைதானம்

பின்கள வரிசையில் பலம் மிக்க சிறந்த வீரர்களைக் கொண்டுள்ள  இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டி மிகவும் விறுவிறுப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை. அத்துடன்,  இவ்விரு அணிகளினதும் முன்கள வீரர்கள், பலம் மிக்க பின்கள வீரர்களை ஊடறுத்து புள்ளிகளைப் பெற்றுக்கொள்ள பலத்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றார்கள்.

இசிபதன அணி உடலளவில் பலம் மிக்கவர்களாக உள்ள அதேநேரம்,

  1. நடப்பு சம்பியன் அணியாகத் திகழ்கின்றது.
  2. ஹெவலொக் மைதானம் அவர்களுக்கு மிகவும் பழக்கப்பட்ட மைதானமாகும்.

ஸாஹிரா கல்லூரியைப் பொறுத்தவரை, இந்த பருவகாலத்தில் கூடிய புள்ளிகள் பெற்ற மற்றும் அதிக ட்ரை வைத்த வீரர்களை உள்ளடக்கிய அணியாகக் காணப்படுகின்றது.

நேரடி ஒளிபரப்பு : இசிபதன எதிர் ஸாஹிரா

இசிபதன கல்லூரியின் அணித் தலைவர் சுமுது ரன்கொத்கே,  கடந்த வருட பருவகால போட்டிகளில் பிரகாசித்த அதேவேளை இம்முறை போட்டிகளிலும் திறமைகளை வெளிப்படுத்த எதிர்பார்த்துள்ளார். இவர் போட்டியின் போக்கை மாற்றக் கூடிய முக்கியமான வீரராவார். பின்கள வீரர் (Full Back) சமோத் பெர்னாண்டோ, சிறந்த நுணுக்கங்களுடன் அதிரடியாக விளையாடக் கூடியவர். நடுகள வீரர் (Half Back) ஹரித் பண்டார போட்டியின் போக்கை அறிந்து அதற்கேற்றவாறு விளையாடக்கூடிய சாமர்த்தியசாலி. அதேநேரம், அவுட் சைட் ஹாப் (Outside Half) ரெண்டி சில்வா போட்டியை கட்டுப்படுத்தி ஆளுமை செலுத்தக் கூடியவர்.

ஸாஹிரா கல்லூரி அணி, முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அணித் தலைவர் மொஹமட் இர்பானை இழந்துள்ளது. அவருக்கு பதிலீடாக ஷிபாஸ் அமத் அணியை வழிநடாத்தவுள்ளார். அத்துடன் அதிக புள்ளிகளை பெற்றுக்கொண்ட செய்ட் சின்ஹவன்ச ஸாஹிரா அணியின் தாக்குதல் வீரர்களில் முக்கியமானவராகத் திகழ்வார். அதிகூடிய ட்ரைகளை தனதாக்கிய யுஸ்றான் லந்த்ரா (9 ட்ரை) மருதானை அணிக்காக திறமைகளை வெளிப்படுத்த காத்திருக்கின்றார்.

வெஸ்லி (2) எதிர் புனித ஜோசப் (5)
திகதி : 28-04-2017
நேரம் : பிற்பகல் 4.15 மணிக்கு
இடம் : CR & FC

L.E ப்ளேஸ் கிண்ணப் போட்டியில் (Blaze Trophy) கிங்ஸ்வுட் அணிக்கு எதிராக எதிர்பாராத வகையில் தோல்வியுற்ற வெஸ்லி கல்லூரியின் பலம் கேள்விக்குறியானதே. அதேநேரம், அந்த போட்டியில் வெஸ்லி கல்லூரி தமது திறமைகளை வெளிப்படுத்தாததால், பிழைகளை திருத்தி இம்முறை அவர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர்.

லீ சகோதரர்களுக்கு நிறைய பொறுப்புகள் உள்ளன. அதேபோன்று ப்ளை ஹாப் நிலையில் (Fly Half) விளையாடும் அணித் தலைவர் டெனிஸ்டர் குணதிலக்க திறமைகளை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளார். ஷஷிக அஷான் எதிரணியின் கிஹான் பெரேராவுடன் பாரிய சவாலை எதிர்நோக்கவுள்ளார். புள் பெக் நிலை வீரரான முர்ஷித் சுபைர், எதிரணிகளின் சவால் மிக்க உதைகள் மற்றும் தாக்குதல்களை எதிர்கொள்ளவுள்ளார்.  

நேரடி ஒளிபரப்பு : வெஸ்லி எதிர் புனித ஜோசப்

புனித ஜோசப் கல்லூரி முதலிரண்டு போட்டிகளில் தோல்விகளைத் தழுவியிருந்தாலும், அவற்றிலிருந்து மீண்டெழுந்து, இப்போது ஒரு சீரமைக்கப்பட்ட அணியாக உள்ளது. இருப்பினும், சில வீரர்கள் இன்னும் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

முதல் சுற்றைப் போலவே, பின்கள வீரர் கெமுனு சேத்திய மற்றும் விங் நிலை வீரரான வினுள் பெர்னாண்டோ ஜோடி மிகவும் அச்சுறுத்தலாக இருக்கலாம்.

ப்ளை ஹாப் நிலை வீரர் சதுர செனவிரத்ன திறமைகளை வெளிப்படுத்தியிருந்தாலும், பயிற்சியாளர் நில்பர் இப்ராஹிம் இப்போட்டிகளில் அவர் களமிறக்குவாரா என்பதும் கேள்விக்குறியானதே. ஸ்வென் முல்லர் மற்றும் ஷெவோன் க்ரெகரி ஆகியோர் இவ்வணியின் முன்கள வரிசையை வலுப்படுத்தும் தூண்களாக விளங்குகின்றனர். அத்துடன் சிறந்த நகர்த்தல்களையும் செய்து வருகின்றனர்.

சச்சின் சில்வா எங்கிருந்து வந்தார்? அந்தளவுக்கு திறமையான வீரர், எனினும் முதல் இரண்டு போட்டிகளில் மாற்று வீரராகவே ஓய்வறையில் ஒதுங்கியிருந்த நிலையில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த வகையில், கடந்த 5 போட்டிகளில் 9 ட்ரை உள்ளடங்கலாக மொத்தமாக 72 புள்ளிகளைப் பெற்று அதிரடி காட்டினார். அவரின் உதைகள், ஜோசப் கல்லூரியின் ப்ளை ஹாப் நிலை வீரரின் மேலிருந்த அழுத்தத்தை அகற்றி குறித்த 9 ட்ரைகளையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், பந்து நகர்த்தல்களில் புனித ஜோசப் கல்லூரி மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

புனித தோமியர் (6) எதிர் ரோயல் (4) – குணரத்ன கிண்ணம்
திகதி : 29-04-2017
நேரம் : பிற்பகல் 4.15 மணிக்கு
இடம் : புனித தோமியர் கல்லூரி மைதானம்

இறுதி நிமிட ட்ரை மூலம் நவீன் ஹீனகன்கனமகே, கடந்த வருடம் வரலாறு படைத்திருந்தார்.

இந்த பருவக்காலத்துக்கான இந்த போட்டி, புனித தோமியர் கல்லூரியின் சொந்த மைதானத்தில் முதல் தடவையாக நடைபெறவுள்ளது. அத்துடன், டெங்கு காய்ச்சலால் சுகவீனமுற்று இருந்த தோமியர் கல்லூரி முன்கள வீரர் கிறிஸ்டியன் டீ லில்லியின் மீள்வருகை அக்கல்லூரிக்கு ஒரு இனிப்பான செய்தியாகும். மேலும், அணித் தலைவர் நவீன் ஹீனகன்கனமகே, மயோன் ஜயவர்தன ஆகியோர் அணியை முழு அளவில் வலுப்படுத்த உள்ளனர்.

எவ்வாறெனினும், அணித் தலைவர் எங்கிருந்து ஆரம்பிப்பார் என்பது கேள்விக்குறியானது. நடுக்களமா அல்லது விங் நிலையிருந்தா? பயிற்றுவிப்பாளர் லாகா அதனை தீர்மானிக்கவுள்ளார். எனினும், நடுக்களம் (Center) நவீனுக்கு உகந்த இடமாகக் காணப்படவில்லை. அதேநேரம், ஸாஹிரா மற்றும் திரித்துவ கல்லூரிகளுக்கு எதிரான போட்டிகளில், அதிரடியாக ப்ளை ஹாப் நிலையில் விளையாடிய ஹான்ஸ் வல்போல, மீண்டும் அதே இடத்தில் விளையாடுவது சிறந்தது.

நேரடி ஒளிபரப்பு : புனித தோமியர் எதிர் றோயல்

அதேநேரம், கடந்த வருடம் நடைபெற்ற போட்டியில் ரோயல் கல்லூரி தோல்வியுற்றதால், இம்முறை வெற்றிகொள்ள காத்திருக்கின்றது. அத்துடன், இம்முறை வெறும் ட்ரைகளில் மட்டும் நம்பிக்கை வைக்காமல் முன்கள மற்றும் பின்கள வீரர்களின் ஒத்துழைப்புடன் வெற்றியைப் பதிவு செய்ய எதிர்பார்த்துள்ளது.

ஜனிது டில்ஷான் மற்றும் விங் நிலை வீரர் ஸாபித் பெரோஸ் ஆகியோர் முதல் சுற்றில் முக்கிய வீரர்களாகத் திகழ்ந்தனர். நடுக்கள வீரர் துலைப் ஹஸன் மற்றும் அணி தலைவர் ஓவின் அஸ்கி ஆகியோரும் இம்முறை முழு அளவில் திறமைகளை வெளிப்படுத்த காத்திருக்கின்றனர்.

நிச்சயமாக இவ்விரு அணிகளும், சம பலம் மிக்க அணிகளாகத் திகழ்கின்றன. ஒரே ஒரு வித்தியாசம் என்னவெனில், ரோயல் அணிக்கு முழுமையான 80 நிமிடங்களையும் எவ்வாறு விளையாட வேண்டும் என்று தெரியும். அத்துடன், தவறான முடிவுகள் எடுக்கப்பட்டாலும், அவற்றை சரி செய்து, அவற்றை சாதகமாக மாற்றிக்கொள்ளும் திறமை அவர்களிடம் காணப்படுகின்றது.

புனித பேதுரு கல்லூரி (7) எதிர் திரித்துவக் கல்லூரி (1) – டெனிஸ் பெரேரா கிண்ணம்
திகதி : 29-04-2017
நேரம் : பிற்பகல் 4.15 மணிக்கு
இடம் : புனித பேதுரு கல்லூரி மைதானம்

கிண்ணத்துக்கான பிரிவில் விளையாட புனித பேதுரு கல்லூரிக்கு தகுதி உள்ளது என சிலர் வாதிடலாம். உண்மையில், புனித பேதுரு கல்லூரி, சிறந்த திறமைகளை கொண்டுள்ள அணியாக விளங்குகின்றது. எனினும் அத்திறமைகளை சரியான நேரத்தில் வெளிப்படுத்துவது முக்கிய விடயமாகும்.

நடப்பு சம்பியனான இசிபதன கல்லூரியை வெற்றியீட்டிய புனித பேதுரு அணிக்கு இம்முறை திரித்துவக் கல்லூரியை வீழ்த்துவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அது மிகவும் எளிதான காரியம் அல்ல. எனினும், நிச்சயமாக வெற்றி பெற்று அதிர்ச்சி அளிக்கும் என நம்பலாம்.

ரவின் பெர்னாண்டோ மற்றும் ஸ்டெபான் சிவராஜ் ஜோடி சிறந்த பந்து நகர்த்தல்களை மேற்கொள்ளும் பட்சத்தில், கூடிய ட்ரைகளை பெற்று முன்னிலை வகிக்கலாம். அத்துடன், நடுக்கள வீரர் தீக்ஷண திஸாநாயக்க மற்றும் அணித் தலைவர் டியத் பெர்னாண்டோ ஆகியோர் நிறைய விஷயங்களை செய்ய வேண்டியுள்ளது. இவர்களது விளையாட்டுத் திறமைகளை விட போட்டியின் போது தமக்கிடையே புரிந்துணர்வுடன் விளையாடுவது முக்கியமானது.

நேரடி ஒளிபரப்பு : புனித பேதுரு கல்லூரி எதிர் திரித்துவக் கல்லூரி

நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் பயிற்சி முகாம் ஒன்றினை நீர் கொழும்பில் நடத்தியுள்ள திரித்துவக் கல்லூரி மேலும் பல வெற்றிகளை குவிக்க காத்திருக்கின்றது. அவர்கள் சிறந்த அணிதான் அதில் சந்தேகமே இல்லை. எனினும், புனித பேதுரு கல்லூரியின் சொந்த மைதானத்தில் வெற்றி பெறுவது எளிதான காரியமல்ல. நிச்சியமாக அது இலகுவான வெற்றியாக இருக்காது. டியூக்ஷ தங்கே மற்றும் வாரன் வீரகோன், நடுகள ஜோடி மிகச்சிறந்தது. அவீஷ  ப்ரியங்கர மற்றும் ஷவின் ஏக்கநாயக்க ஆகியோரின் முன்கள இணைப்பாட்டம் அதைவிட சிறந்தது. அணித் தலைவர் நாதன் யீ, அணியை சிறப்பாக வழிநடாத்துகின்றார். அத்துடன், அவரது முழுத் திறமைகளை இப்போட்டியில் வெளிப்படுத்தி பங்களிப்பு செய்வது திரித்துவக் கல்லூரியின் வெற்றிக்கு முக்கிய காரணியாக அமையும்.