கண்டி திரித்துவக் கல்லூரியின் வெற்றி ஓட்டத்தை நிறுத்தி, தேஷமான்ய டெனிஸ் பெரேரா கிண்ணத்தை தொடர்ந்து 3ஆவது முறையாகவும் புனித பேதுரு கல்லூரி சுவீகரித்துக்கொண்டது. கொழும்பு புனித பேதுரு கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் 15-13 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றியீட்டி புனித பேதுரு கல்லூரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

போட்டி  ஆரம்பித்ததிலிருந்து முதற் சில நிமிடங்களில் இரண்டு அணிகளும் பல முறை தவறுகளை மேற்கொண்டன. முதல் 20 நிமிடங்களில் இரண்டு அணிகளும் கிட்டத்தட்ட 12 முறை பந்தை நழுவவிட்டது. பின்னர் திரித்துவக் கல்லூரிக்கு பெனால்டி வாய்ப்பொன்று கிடைத்தது. இதனைப் பயன்படுத்தி விஜேசூரிய கம்பங்களின் இடையே உதைத்து திரித்துவக் கல்லூரிக்கு 3 புள்ளிகளைப் பெற்றுக்கொடுத்தார். (புனித பேதுரு கல்லூரி 00 – 03 திரித்துவக் கல்லூரி)

சில நிமிடங்களின் பின்னர் திரித்துவக் கல்லூரிக்கு, புனித பேதுரு கல்லூரி இலகுவான ட்ரை ஒன்றை வைக்க சந்தர்ப்பம் வழங்கியது. 5 மீட்டர் எல்லையில் திரித்துவக் கல்லூரி வீரரான அணுக போயகொட பந்தை ட்ரை கோட்டினுள் உதைத்தார். பந்து ட்ரை கோட்டிற்கு பின்னால் அனுப்புவதற்கு ஸ்டிபன் சிவராஜ் உதைத்த போதும், பந்து காலில் பட்டு திரித்துவக் கல்லூரி வீரரின் கைக்கு வந்து சேர்ந்தது. பந்தைப் பெற்றுக்கொண்ட அமித் குலதுங்க இலகுவாக ட்ரை வைத்தார். விஜேசூரிய கொன்வெர்சனை தவறவிட்டார். (புனித பேதுரு கல்லூரி 00 – 08 திரித்துவக் கல்லூரி)

முதல் பாதி நிறைவடைய சிறிது நேரம் இருக்கும் பொழுது புனித பேதுரு கல்லூரிக்கு பெனால்டி வாய்ப்பொன்று கிடைத்தது. கம்பத்தினை நோக்கி ஸ்டிபன் சிவராஜ் சிறப்பாக உதைய, புனித பேதுரு கல்லூரி 3 புள்ளிகளைப் பெற்ற நிலையில் முதல் பாதியை முடித்து.

முதல் பாதி : புனித பேதுரு கல்லூரி 03 – 08 திரித்துவக் கல்லூரி

இரண்டாம் பாதியில் புனித பேதுரு கல்லூரியானது, முதற் பாதியில் தாம் செய்த தவறுகளை திருத்திக்கொண்டு, நிதானமாகவும் சிறப்பாகவும் விளையாடியது. மறுமுனையில் திரித்துவக் கல்லூரியானது பதற்ற நிலையிலேயே விளையாடியது. திரித்துவக் கல்லூரியின் ஸ்க்ரம் நிலையில் இருந்து வெளியேறிய பந்தை மொகிதீன் உதைக்க, அதை திரித்துவக் கல்லூரி விங் நிலை வீரர் பெற்றுக்கொண்டார். எனினும் சிறந்த தடுப்பாட்டத்தின் மூலம் மீண்டும் பந்தைப் பெற்றுக்கொண்ட புனித பேதுரு கல்லூரியின் ஜேசன் கருணாரத்ன பேதுரு கல்லூரி சார்பாக முதல் ட்ரையை வைத்தார். ஸ்டிபன் சிவராஜின் வெற்றிகரமான கொன்வெர்சனுடன் புனித பேதுரு கல்லூரி முதல் முறையாக முன்னிலை பெற்றது. (புனித பேதுரு கல்லூரி 10 – 08 திரித்துவக் கல்லூரி)

சிறிது நேரத்தின் பின்னர் புனித பேதுரு கல்லூரியானது மேலும் ஆதிக்கத்தை செலுத்தியது. திரித்துவக் கல்லூரி பல முறை பந்தை நழுவவிட்டு தமது வாய்ப்புகளை தவறவிட்டது. திரித்துவக் கல்லூரியின் கோட்டையினுள் பந்தை பெற்றுக்கொண்ட புனித பேதுரு கல்லூரியின் அஞ்சலோ மெண்டிஸ் பந்தை மதுஷங்கவிற்கு பரிமாற்றம் செய்தார். மதுஷங்க, ரவின் பெர்னாண்டோவிற்கு பந்தை வழங்க, ரவின் ட்ரை வைத்து அசத்தினார். ஸ்டிபன் சிவராஜ் கொன்வெர்சனை தவறவிட்டார். (புனித பேதுரு கல்லூரி 15 – 08 திரித்துவக் கல்லூரி)

வெற்றிபெறும் நோக்கில் பந்தை வேகமாக திரித்துவக் கல்லூரி நகர்த்தி வந்தது. ஒரு கட்டத்தில் போயகொடவினால் உதைக்கப்பட்ட பந்தை திரித்துவக் கல்லூரியின் தங்கே மற்றும் புனித பேதுரு கல்லூரியின் மதுஷங்க பிடிக்க முற்பட்ட போது பந்து மதுஷங்கவின் கையில் பட்டு பின் சென்றது. இதனைப் பெற்றுக்கொண்ட வொரன் வீரகோன் திரித்துவக் கல்லூரி சார்பாக ட்ரை வைத்தார். எனினும் இதனை தொலைக்காட்சி நடுவர் மூலம் மீள்பரிசீலனை செய்த மைதான நடுவர், மதுஷங்க உயரப் பாய்ந்து பந்தை பிடிக்கும் போது திலுக்ஷ தங்கே அவரைத் தடுத்ததால், ட்ரை வழங்காது புனித பேதுரு கல்லூரிக்கு பெனால்டி வழங்கினார்.

சிறிது நேரத்தின் பின்னர் கிடைத்த பெனால்டி வாய்ப்பினை உடனடியாக பெற்றுக்கொண்ட திரித்துவக் கல்லூரி, அகித் சகலசூரிய மூலமாக முக்கிய ட்ரையை வைத்தது. எனினும் திரித்துவக் கல்லூரி கொன்வெர்சனை தவறவிட்டது. (புனித பேதுரு கல்லூரி 15 – 13 திரித்துவக் கல்லூரி)

வெற்றிபெற இன்னும் 3 புள்ளிகளே வேண்டும் என்ற நிலையில் திரித்துவக் கல்லூரி கடுமையாக முயற்சி செய்த பொழுதும், பல தவறுகளை மேற்கொண்டதால் புள்ளிகளைப் பெறத்தவறியது. இதனால் புனித பேதுரு கல்லூரியின் வெற்றி உறுதியானது.

முழு நேரம்: புனித பேதுரு கல்லூரி 15 – 13 திரித்துவக் கல்லூரி


இசிபதன கல்லூரி எதிர் ஸாஹிரா கல்லூரி

Isipathana v Zahiraசென்ற வருட லீக் போட்டிகளில் முடிசூடிய இசிபதன கல்லூரி, இவ்வருட லீக் போட்டிகளில் இரண்டாம் சுற்றின் முதல் போட்டியில் ஸாஹிரா கல்லூரியினை 48-10 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றது.

கொழும்பு ஹெவலொக் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ஸாஹிரா கல்லூரியானது தமது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது. இப்போட்டியில் ஸாஹிரா கல்லூரி சார்பாக தலைவர் அஸ்கர் இர்பான், நட்சத்திர வீரர் செய்ட் சிங்ஹவன்ச மற்றும் ஹசன் ராசிக் ஆகியோர்  உபாதை காரணமாக விளையாடவில்லை. இதனால் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடாத ஸாஹிரா கல்லூரியானது முதல் 5 நிமிடங்களில் இசிபதன கல்லூரிக்கு 12 புள்ளிகளை வாரி வழங்கியது. ஹரித் பண்டார மற்றும் சமோத் பெர்னாண்டோ இசிபதன கல்லூரி சார்பாக ட்ரை வைத்தனர். (இசிபதன கல்லூரி 12 – 00 ஸாஹிரா கல்லூரி)

ஸாஹிரா கல்லூரியானது போட்டியை நிதானமாக விளையாடி இசிபதன கல்லூரிக்கு சிறிது அழுத்தம் கொடுத்த பொழுதும் மீண்டும் ஒரு முறை சமோத் பெர்னாண்டோ இசிபதன கல்லூரி சார்பாக ட்ரை வைத்தார். 35ஆவது நிமிடத்தில் நதீஷ் சமிந்த மூலமாக மற்றுமொரு ட்ரையும் வைத்து போனஸ் புள்ளியை இசிபதன கல்லூரி பெற்றுக்கொண்டது. இரண்டு சந்தர்ப்பங்களிலும் கொன்வெர்சனை இசிபதன கல்லூரி தவறவிடவில்லை. (இசிபதன கல்லூரி 26 – 00 ஸாஹிரா கல்லூரி)

பல முயற்சிகளின் பின்னர், முதற் பாதியின் இறுதி நிமிடங்களில் ஸாஹிரா கல்லூரி தமது முதல் ட்ரையினைப் பெற்றுக்கொண்டது. முன் வரிசை வீரர்களின் கடின உழைப்பின் பின்னர் மும்மார் தீன் ட்ரை வைத்தார். எனினும் சம்சுதீன் கொன்வெர்சனை தவறவிட்டார். (இசிபதன கல்லூரி 26 – 05 ஸாஹிரா கல்லூரி)

முதல் பாதி : இசிபதன கல்லூரி 26 – 05 ஸாஹிரா கல்லூரி

இரண்டாம் பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய இசிபதன கல்லூரியானது, ஸ்க்ரம் ஹாப் நிலை வீரரான ஹரித் பண்டார மூலமாக இன்னுமொரு ட்ரை வைத்தது. சிறப்பாக செயற்பட்ட பண்டார தனது 2ஆவது ட்ரையை வைத்தார். இசிபதன கல்லூரியின் ஆதிக்கத்தின் மத்தியில், இசிபதன கல்லூரி செய்த சிறிய தவறுகளை பயன்படுத்திக்கொண்ட ஸாஹிரா கல்லூரியானது தமது முன் வரிசை வீரர்கள் மூலம் முன் நகர்ந்து சென்றது. இறுதியில் மொகமட் அம்ஜத் ஸாஹிரா கல்லூரி சார்பாக ட்ரை வைத்து ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்தார். கொன்வெர்சனை சம்சுதீன் தவறவிட்டார். எனினும் ஸாஹிரா ரசிகர்களின் நம்பிக்கையை உடைத்த இசிபதன கல்லூரி மனில்க ருபேரு மூலமாக ட்ரை வைத்தது. இரண்டு சந்தர்ப்பத்திலும் கொன்வெர்சனை சமோத் தவறவிட்டார். (இசிபதன கல்லூரி 36 – 10 ஸாஹிரா கல்லூரி)

ஸாஹிரா கல்லூரிக்கு இசிபதன கல்லூரி தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது. இதனால் போட்டி நிறைவடைய முன்னர் மேலும் இரண்டு ட்ரைகளை வைத்தது. ரவிந்து அஞ்சுல மற்றும் மனில்க ருபேரு இந்த ட்ரைகளை வைத்தனர். சமோத் ஒரு கொன்வெர்சனை மட்டும் வெற்றிகரமாக பூர்த்தி செய்தார். (இசிபதன கல்லூரி 48 – 10 ஸாஹிரா கல்லூரி)

முழு நேரம் : இசிபதன கல்லூரி 48 – 10 ஸாஹிரா கல்லூரி

இம்முடிவுகளின் பின்னர் திரித்துவக் கல்லூரி, இசிபதன கல்லூரி, ரோயல் கல்லூரி மற்றும் வெஸ்லி கல்லூரி ஆகிய கல்லூரிகள் கிண்ணத்தைக் கைப்பற்றும் வாய்ப்பினைக் கொண்டுள்ளன.