சகல துறையிலும் அசத்திய ஷெஹான் ஜயசூரிய; இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ள கொழும்பு அணி

316
SLC Super Provincial

இலங்கை கிரிக்கெட் சபையின் அனுசரணையில், எதிர்வரும் ICC சம்பியன் கிண்ணப் போட்டிகளை இலக்காக கொண்டு நடைபெற்று வருகின்ற மாகாண ரீதியிலான ஒருநாள் போட்டித் தொடரில் நேற்று நடைபெற்ற கொழும்பு மற்றும் கண்டி அணிகளுக்கு இடையிலான முதலாவது அரையிறுதிப் போட்டியில், சகலதுறை ஆட்டக்காரர் ஷெஹான் ஜயசூரிய மற்றும் விஷ்வ பெர்னாண்டோ ஆகியோரின் அதிரடியில், கண்டி அணியை வெற்றியீட்டி கொழும்பு அணி இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது.

கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கண்டி அணித் தலைவர் மஹேல உடவத்த முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.

அந்த வகையில் முதலில் துடுப்பாடக் களமிறங்கிய கண்டி அணி ஆரம்பம் முதலே சற்று தடுமாறியது. போட்டியின் இரண்டாவது ஓவரிலேயே ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சந்துன் வீரக்கொடி சசித்திர சேனாநாயக்கவின் பந்து வீச்சில் நேரடியாக போல்ட் செய்யப்பட்டு 10 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

அத்துடன், அதிரடியாக பந்து வீசிய விஷ்வ பெர்னாண்டோ, தனுஷ்க குணதிலக்க மற்றும் டிஎன் சம்பத் ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தி கண்டி அணிக்கு மேலும் அதிர்ச்சியளித்தார். அதனைத் தொடர்ந்து பந்து வீசிய ஷெஹான் ஜயசூரிய மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களான சரித் அசலங்க, ரமேஷ் மென்டிஸ் மற்றும் சச்சித் பத்திரன ஆகியோரின் விக்கெட்டுகளைக் கைப்பற்றி கண்டி அணியை முற்று முழுதாக சிதைத்தார்.

அதேவேளை, எதிர் வரும் சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளுக்கு இலங்கை அணி சார்பாக தெரிவாகியுள்ள கண்டி அணித் தலைவர் சாமர கபுகெதர இந்த போட்டியில், தசை பிடிப்பு காரணாமாக பங்கு பற்றவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் சார்பாக இன்றைய தினம் அணியை வழி நடத்தியிருந்த மஹேல உடவத்த கடும் போராட்டத்துக்கு மத்தியில், 48 பந்துகளுக்கு 22 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் துரதிஷ்டவசமாக விஷ்வ பெர்னாண்டோவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்து சென்றார்.

எனினும், 96 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் காணப்பட்ட கண்டி அணிக்கு, இறுதி விக்கெட்டுக்காக இணைந்து கொண்ட அமில அபோன்சோ மற்றும் நுவன் பிரதீப் ஆகியோர் இறுதி விக்கெட்டுக்காக 40 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்ட அதேவேளை அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்த முயற்சித்தனர். அதேநேரம், சிறப்பாக பந்து வீசிய வணிந்து ஹசரங்க, நுவன் பிரதீப் 14 ஓட்டங்களைப் பதிவு செய்திருந்த வேளை நேரடியாக போல்ட் முறையில் ஆட்டமிழக்கச் செய்தார்.

அதனையடுத்து இலகுவான வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய கொழும்பு அணிக்கு முதல் ஓவரிலேயே லியோ பிரான்சிஸ்கோ 1 ஓட்டத்துக்கு அமில அபொன்சோவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். டில்ஷான் முனவீர 2 சிக்ஸர்கள் உள்ளடங்களாக 8 பந்துகளில் 16 ஓட்டங்கள் பெற்ற நிலையில், தனுஷ்க குணதிலக்கவின் பந்துவீச்சில் ரமேஷ் மெண்டிசிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து சிறப்பாக பந்து வீசிய அமில அபொன்சோ, அஞ்சலோ ஜயசிங்கவின் விக்கெட்டினை ஒரு ஓட்டத்துக்கும் சச்சித் பத்திரன, கொழும்பு அணியின் தலைவர் தினேஷ் சந்திமாலை இரண்டு ஓட்டங்களுக்கும் கைப்பற்றினார். அத்துடன், சுழல்பந்து வீச்சாளார் ரமேஷ் மென்டிஸ் அதிரடி துடுப்பாட்ட வீரர் கித்ருவான் விதானகேவின் விக்கெட்டை கைப்பற்றி கொழும்பு அணியை மேலும் நெருக்கடிக்குத் தள்ளினார்.

இக்கட்டான சூழ்நிலையில் களமிறங்கிய ஷெஹான் ஜயசூரிய மற்றும் வணிந்து ஹசரங்க ஆகியோர் இணைந்து 6ஆவது விக்கெட்டுக்காக 68 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று கொழும்பு அணியின் வெற்றியை உறுதிச் செய்தனர். 46 பந்துகளை எதிர்கொண்ட வணிந்து ஹசரங்க 3 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 29 ஓட்டங்களை பதிவு செய்த அதேவேளை இறுதிவரை சிறப்பாகத் துடுப்பாடிய ஷெஹான் ஜயசூரிய 2 பவுண்டரிகள் உள்ளடங்கலாக ஆட்டமிழக்காமல் 48 பந்துகளுக்கு 30 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

8ஆவது விக்கெட்டுக்காக களமிறங்கிய சசித்திர சேனாநாயக்க அதிரடியாக துடுப்பாடி 10 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் வெற்றி ஓட்டத்தினை சிக்ஸர் ஒன்றை விளாசி கொழும்பு அணியின் வெற்றிக்கு உதவினார்.

கண்டி அணி சார்பாக பந்துவீச்சில் அமில அபொன்சோ மற்றும் சசித் பதிரண ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

அந்த வகையில் கொழும்பு அணி, எதிர்வரும் 29ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி நடைபெறவுள்ள இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் வெற்றியீட்டும் அணியுடன் இறுதிப் போட்டியில் மோதவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

கண்டி அணி – 136 (31) – மஹேல உடவத்த 22, அமில அபொன்சோ 22*, இசுறு உதான 16, நுவன் பிரதீப் 14, சந்துன் வீரக்கொடி 10, விஷ்வ பெர்னாண்டோ 61/4, ஷெஹான் ஜயசூரிய 14/3, வணிந்து ஹசரங்க 19/2

கொழும்பு அணி – 139/6 (25.5) – ஷெஹான் ஜயசூரிய 30*, வணிந்து ஹசரங்க 29, சசித்திர சேனாநாயக்க 22*, கித்ருவன் விதானகே 26, டில்ஷான் முனவீர 16, அமில அபொன்சோ 34/2, சச்சித் பத்திரன 35/2, ரமேஷ் மென்டிஸ் 15/1

போட்டி முடிவு – கொழும்பு அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி.