அன்று கார் மெக்கானிக்; இன்று சாதனை வீரராக மாறிய மலையகத்தின் சண்முகேஸ்வரன்

627

மன நிம்மதியையும், சந்தோஷத்தையும் பெற்றுக்கொள்வதற்காக ஓடிக் கொண்டிருக்கின்ற இந்த வாழ்க்கைப் பயணத்தில் அவருக்கு எதிர்பாராத பல இன்னல்களையும், கஷ்டங்களையும் சந்திக்க நேரிட்டது. கவலைகளை எல்லாம் என்றாவது ஒரு நாள் சந்தோஷமாக ஆக்கிக் கொள்ளும் வைராக்கியத்துடன் தனக்கு முகங்கொடுத்த நேரிட்ட கஷ்டங்களையெல்லாம் ஆசிர்வாதமாக மாற்றிக் கொண்டார். அதேபோல விடா முயற்சி, தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவை இருந்தால் மனிதனொருவனுக்கு இந்த உலகில் எதையும் சாதிக்கலாம் என்பதை நிரூபித்துக் காட்டிய நட்சத்திர வீரராக உருவெடுத்தார். ஒட்டுமொத்தத்தில் விளையாட்டின் மூலம் வாழ்க்கையை ஒளிமயமாக்கிக் கொள்ள கனவு காணும் சாதனை நாயகன் தான் மலையகத்தைச் சேர்ந்த குமார் சண்முகேஸ்வரன்.

இலங்கையின் மெய்வல்லுனர் விளையாட்டில் புதிதாக உருவெடுத்துள்ள 26 வயதுடைய சண்முகேஸ்வரன், நீண்ட தூர ஓட்டப் போட்டிகளில் தேசிய சம்பியனாக வலம்வந்து கொண்டிருக்கின்றார்.

இராணுவ மெய்வல்லுனரில் பிரகாசித்த மலையக மற்றும் கிழக்கு வீரர்கள்

55ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட இராணுவ மெய்வல்லுனர்…

ஹட்டன் வெலி ஓயாவில் உள்ள புதுக்காடு என்ற சிறிய கிராமத்தில் சண்முகேஸ்வரன் பிறந்தார். அண்ணா மற்றும் அக்காவைக் கொண்ட குடும்பத்தில் கடைசிப் பிள்ளையான சண்முகேஸ்வரின் தந்தை ஒரு தேயிலைக் கொழுந்து பறிக்கும் சாதாரண தொழிலாளி ஆவார்.

சிறுவயது முதல் ஏழ்மையின் கோரப் பிடிக்கு ஆளாகிய சண்முகேஸ்வரன், ஹட்டன் குயிலவத்தை – தமிழ் மகா வித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியை மேற்கொண்டார். தனது தாத்தாவுடன் பாடசாலைக்குச் செல்லும் வழக்கத்தை கொண்ட அவர், பாடசாலை செல்லும் போதும், மீண்டும் வீட்டுக்கு வரும்போதும் ஓடுகின்ற வழக்கத்தை கொண்டிருந்தார்.

இவன் என்றாவது ஒரு நாள் ஓட்டப் போட்டியில் சாதிப்பான் என என்னை காணுகின்ற பலர் தாத்தாவிடம் சொல்வதை நான் கேட்டுள்ளேன் என சண்முகேஸ்வரன் தனது வாழ்க்கை பயணத்தின் மறக்க முடியாத தருணங்களை எம்முடன் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார்.

வாழ்க்கையைப் பற்றிச் சொன்னால்….

”எனது அப்பாவின் பெயர் முருகைய்யா குமார். வெலிஓய – புதுக்காடு தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறிக்கும் தொழிலாளியாக உள்ளார். அம்மா ஆரம்பத்தில் தேயிலைக் கொழுந்து பறிக்கச் சென்றார். ஆனால், அவருக்கு ஏற்பட்ட சுகயீனம் காரணமாக தற்போது வீட்டில் உள்ளார். அண்ணாவும் தேயிலை கொழுந்து பறிக்கின்றார். அக்கா தற்போது கொழும்பில் வேலை செய்கின்றார்.

நான் தரம் 1 முதல் 5 வரை புதுக்காடு தமிழ் வித்தியாலயத்திலும், தரம் 6 முதல் 9 வரை அங்குரு ஓய தமிழ் வித்தியாலத்திலும், பிறகு சாதாரண தரம் வரை குயிலவத்தை தமிழ் மகா வித்தியாலயத்திலும் கல்வி கற்றேன். நான் வெவ்வேறு பாடசாலைகளில் கல்வி கற்றாலும், இல்ல விளையாட்டுப் போட்டிகளில், அதாவது ஓட்டப் போட்டிகளில் தொடர்ந்து பங்குபற்றி வந்தேன். ஆனால் எனக்கு பயிற்சியாளர்கள் எவரும் இருக்கவில்லை. எனக்கு விருப்பமான முறையில் பயிற்சிகளை மேற்கொண்டேன். அப்போது தான் மைக்கல் என்ற ஆசிரியரை சந்தித்தேன். அவரிடம் ஒருசில காலம் பயிற்சிகளை பெற்றேன். அதன்பிறகு அவர் என்னை சுரேஷ் என்ற ஆசிரியரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். அவரிடம் நான் சிறந்த முறையில் பயிற்சிகளை முன்னெடுத்தேன்.

கடற்கரையில் ஓடி விளையாடி இளையோர் ஒலிம்பிக் பதக்கம் வென்ற பாரமி

சிலாபத்திலிருந்து ஆசியாவை வெல்ல தாய்லாந்துக்குச் சென்று, அங்கு…

ஒருமுறை எனக்கு அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு கிட்டியது. அது கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் பங்குபற்றச் செல்ல எனக்கு பாடசாலையால் பணம் திரட்டி ஸ்பைக்ஸ் சப்பாத்து வாங்கித் தந்தார்கள். இதற்கு முன்னால் இந்த சப்பாத்தை நான் கண்டதே கிடையாது. சப்பாத்துக்கு கீழே ஆணிகள் இருப்பதால் அதை போட்டுக் கொள்ள பயமும் ஏற்பட்டது. படிக்கின்ற போது சுகததாஸ விளையாட்டரங்கு பற்றி கேள்விப்பட்டிருந்தேன். முதற்தடவையாக அங்கு சென்ற போது நிறைய பேர் வந்திருந்தைப் பார்த்தவுடன் எனக்கு பயம் வந்துவிட்டது. இதனால் அந்தப் போட்டியை சிறப்பாக ஓடிமுடிக்க முடியாது போனது” என்றார்.

இவ்வாறு காலங்கள் கடந்துசெல்ல பாடசாலைக் கல்வியின் முதலாவது மைல்கல்லான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு சண்முகேஸ்வரன் முகங்கொடுத்திருந்தார். அதில் 5 பாடங்களில் மாத்திரம் சாதாரண சித்தியடைந்த அவருக்கு உயர்தரம் கற்பதற்கான வாய்ப்பு கிட்டவில்லை. ஆனாலும் அவருடைய விளையாட்டுத் திறமையை கருத்திற்கொண்டு உயர்தரத்தில் கற்பதற்கான வாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் அளவுக்கு யாரும் முன்வரவில்லை.

”ஏழ்மை காரணமாக எனக்கு படிப்பை காட்டிலும், பணம் சம்பாத்தித்து அப்பாவுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இதன் காரணமாக எனது பாடசாலைக் கல்வியை நிறுத்தவதற்கு தீர்மானித்தேன். ஆனாலும், நான் மாவட்டப் போட்டிகள் வரை பங்குபற்றியிருந்தேன். எனக்குப் படிப்பிலும், விளையாட்டிலும் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தது. பணம் இல்லாமல் அவற்றையெல்லாம் செய்வது சாத்தியமல்ல என்பதை உணர்ந்து கொண்டேன். எனது குடும்ப சுமையை அப்பாவும், அம்மாவும் தான் பார்த்துக்கொண்டனர். எம்மை படிப்பிக்க அவர்களிடம் பணம் இருக்கவில்லை. அதனால் படிப்பை நிறுத்தினேன்” என தனது கல்லூரி வாழ்வில் முகம்கொடுத்த சவாலைக் குறிப்பிட்டார்.

மெக்கானிக்காக மாறிய சண்முகேஸ்வரன்….

சாதாரண தரம் கற்ற இளம் வயது பையனாக தனது அப்பாவுக்கு தேயிலைக் கொழுந்துகளை பறித்துக் கொடுத்தாவது உதவ வேண்டும் என்ற கனவுடன் சண்முகேஸ்வரன் பாடசாலை கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதுதான் உலக வாழ்க்கை என்ற இறுதி முடிவுக்கும் வந்துவிட்டார் அவர். இவ்வாறு தேயிலைத் தோட்டத்தில் காலத்தை ஓட்டிச் சென்ற சண்முகேஸ்வரனுக்கு, ஒருநாள் அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவரால் கொழும்புக்குச் சென்று தொழில் செய்வதற்கான அழைப்பு வந்தது.

புகைப்படங்களைப் பார்வையிட

நாங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். எமது ஊரைச் சேர்ந்த இளைஞர்களுக்கு கொழும்புக்குச் சென்று வேலை பார்ப்பதென்பது வெளிநாடொன்றுக்கு செல்வது போன்ற சந்தோஷத்தைக் கொடுக்கும் என சண்முகேஸ்வரன் தெரிவித்தார்.

கடந்த 2010ஆம் ஆண்டு தனது ஜீவனோபாயத்துக்காக கொழும்புக்கு வந்த சண்முகேஸ்வரன், வெள்ளவத்தையில் உள்ள நைட் வேர்ஷன் என்ற மோட்டார் வாகனம் திருத்தும் (கராஜ்) நிலையமொன்றில் கார் திருத்துநராக (மெக்கானிக்) இணைந்து கொண்டார். சிறுவயது முதல் மோட்டார் கார்கள் பிரியராக இருந்த சண்முகேஸ்வரனுக்கு இந்தத் தொழில் ஒரு வரமாக அமைந்தது என்றால் மிகையாகாது.

அதுமாத்திரமின்றி, விளையாட்டின் மீது கொண்ட தீவிர அன்பின் காரணமாக ஊரிலிருந்து வரும்போதே ஜேர்சி மற்றும் சப்பாத்துக்களை கொழும்புக்கு எடுத்துக் கொண்டு வருவதற்கு சண்முகேஸ்வரன் மறக்கவில்லை.

சில காலம் அங்கு வேலை செய்து கொண்டிருக்கும் போது எனக்கு மீண்டும் ஓடவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. நான் காலை 8.30 மணிக்கு வேலைக்குப் போவேன். இரவு 9.00 மணி வரை வேலை செய்வேன். அதனால் வேலைக்குச் செல்ல முன்னால் ஒவ்வொரு நாளும் காலையில் நான் ஓடுவதற்கு ஆரம்பித்தேன். வெள்ளவத்தை கடற்கரை முழுவதும் ஓடினேன்.

இதுஇவ்வாறிருக்க, கொழும்பு மரதன் ஓட்டப் போட்டியொன்று நடைபெறுவதாகவும், அதில் 10 கிலோ மீற்றர் தூரம் ஓட வேண்டும் எனவும் கேள்வியுற்றேன். உடனே நான் விண்ணப்பம் செய்தேன். போட்டி நடைபெறும் நாட்கள் நெருங்கி வந்தது. அப்போது என்னிடம் இருந்த சப்பாத்துக்கள் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அவ்வாறு சப்பாத்துக்களைப் போட்டால் இரண்டு விரல்கள் வெளியே தென்படும். அதைப் பார்த்த எனது உரிமையாளர் புதிய சப்பாத்தொன்றை வாங்கித் தந்தார். அந்தப் போட்டியில் பங்குபற்றி முதலிடத்தைப் பெற்றுக் கொண்டேன். அதன்பிறகு தொடர்ந்து ஓட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

முப்பாய்ச்சல் நடப்புச் சம்பியனை வீழ்த்தி தங்கம் வென்றார் சப்ரின்

44 ஆவது தேசிய விளையாட்டு விழா பொலன்னறுவையில் இன்று (14) நிறைவுக்கு வந்தது…

திடீர் திருப்புமுனை

இவ்வாறு சண்முகேஸ்வரன் கொழும்பில் இருந்து கொண்டு வெற்றியைக் கொண்டாடினாலும், அவருடைய பெற்றோர் மற்றும் சகோதரர்கள் மிகவும் கஷ்டத்துக்கு மத்தியில் இருப்பதை ஒவ்வொரு நாளும் நினைத்து நினைத்து கவலைப்பட்டார். ஏன், தனக்கு கிடைக்கின்ற சம்பளத்தில் பெரும் பகுதியை வீட்டுச் செலவுக்காக அனுப்பி வைக்கின்ற பழக்கத்தையும் அவர் கொண்டிருந்தார்.

அம்மாவுக்கு ஏற்பட்ட சுகயீனத்தால் எனது செலவுகள் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது. நான் சுமார் ஒரு வருடங்கள் அங்கு வேலை செய்தேன். அப்போது எனக்கு மாதாந்தம் 8 ஆயிரம் அல்லது 9 ஆயிரம் ரூபா தான் சம்பளமாக கிடைத்தது. அந்த பணத்தை வைத்துக்கொண்டுதான் வீட்டுச் செலவையும், எனது செலவுகளையும் பாரத்துக் கொண்டேன்.

ஒருநாள் நான் வேலை செய்கின்ற மோட்டார் கார் சேவை நிலையத்திற்கு கொழும்பு – ஹெட்டி வீதியில் உள்ள சரீடா நகை மாளிகையின் உரிமையாளர் வருகை தந்திருந்தார். அவருடைய வாகனத்தை நான் தான் எப்போதும் திருத்திக் கொடுப்பேன். என்னை எங்கயோ பார்த்து இருப்பதாக அவர் ஒருநாள் என்னிடம் கூறினார். அதற்கு நான் ஒவ்வொரு நாளும் பாதையில் ஓடிக் கொண்டிருப்பதை பார்த்து இருப்பீர்கள் என்றேன். அதற்கு அவர் தான் ஒருநாள் மழையில் நனைந்து கொண்டு ஓடுவதை பார்த்தாகத் கூறினார்.

அதன்பிறகு எனது விபரங்களை அவரிடம் சொன்னேன். ”எனக்கு ஓடுவதற்கு ஆசையாக உள்ளது. பணம் இல்லாததால் தொழில் செய்கிறேன்” என்றேன். அதன்பிறகு ஓடுவதற்கு உதவி செய்தால் ஓட முடியுமா? என அவர் என்னிடம் கேட்டார். அதற்கு நான் முடியுமானால் எனக்கு உதவி செய்யுங்கள் என்றேன்.

என்னுடைய கதையைக் கேட்டு உதவி செய்வதாக உறுதி அளித்தார். ஒருநாள் அவருடன் நான் கொழும்பு 07இல் உள்ள டொரின்டன் மைதானத்துக்குச் சென்றேன். அவர் என்னை தயா ஸ்ரீ என்பவரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். அவர் ஒரு மெய்வல்லுனர் பயிற்றுவிப்பாளர். அவரிடம் பயிற்சிகளைப் பெறுவதற்குத் தேவையான பணத்தையும் சுப்ரமணியம் ஐயா கொடுத்தார். அதேபோல, சாப்பிடுவதற்கும், ஏனைய செலவுகளுக்கான பணத்தையும் அவர் கொடுத்து உதவினார்.

சஜித் ஜயலாலின் அறிமுகம்

”உனக்கு நன்றாக ஓட முடியும் என தயா ஸ்ரீ ஐயா என்னிடம் தெரிவித்தார். ஆனால் பாடசாலை பயிற்சியாளராக இருப்பதால் மாலை நேரத்தில் மாத்திரம் தான் மைதானத்துக்கு வரமுடியும். அதனால், உங்களை வேறொரு பயிற்சியாளரிடம் ஒப்படைக்கவா? என என்னிடம் கேட்டார். அதன்பிறகுதான் நான் சஜித் ஜயலாலிடம் பயிற்சிகளை மேற்கொண்டேன். இதை நான் சுப்ரமணியம் ஐயாவிடம் கூறினேன். அதற்கு அவர், பிரச்சினை இல்லை. அவருக்கும் நான் சம்பளமொன்றை கொடுப்பேன் என உறுதி அளித்தார்”.

இலங்கை அணியின் ஆட்டத்தை விமர்சித்த சந்திக ஹதுருசிங்க

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட்…

ஆனால், நடந்தது அவ்வாறல்ல. இலங்கையின் முன்னணி பயிற்சியாளர்களில் ஒருவரான சஜித் ஜயலால், சண்முகேஸ்வரனுக்கு இலவசமாக பயிற்சிகளை வழங்கினார். சில நேரம் நான் ஒரு சாதனை நாயகனை உருவாக்கப் போகின்றேன் என்பதனை சஜித் ஜயலால் அன்று அறிந்துகொண்டிருப்பார்.

கஷ்டத்துக்கு மத்தயில் பயிற்சி….

”எனது பயிற்சிகளை மேற்கொள்கின்ற அதேநேரத்தில் வேலைக்கும் சென்றேன். அதிகாலை 4 மணிக்கு எழுந்து பயிற்சிகளுக்காக செல்வேன். அதன்பிறகு காலை 8.30 மணிக்கு வேலைக்குச் செல்வேன். மாலை நேரத்தில் பயிற்சி பெற நேரம் கிடைக்காது. உண்மையில் நேரத்துக்கு சாப்பிடவும் கிடைக்காது. பல கஷ்டங்களுக்கு மத்தியில் இதை நான் செய்து வந்தேன்”.

இராணுவத்துடன் இணைந்தது….

”சஜித் ஜயலால் ஆசிரியரிடம் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்ற காலகட்டத்தில் இலங்கை இராணுவ மெய்வல்லுனர் அணியில் இணைந்துகொள்ள விருப்பமா? ஏன அவர் என்னிடம் கேட்டார். அதற்கு நான் ஆம் என்றேன். அதன்படி 2015இல் நான் இராணுவத்துடன் இணைந்து கொண்டேன். அங்கு சென்ற பிறகு இராணுவ முகாமுக்கு வரச் சொன்னார்கள். அவ்வாறு இராணுவத்தில் இணைந்துகொண்ட பிறகு என்னால் எதிர்பார்த்தளவு வெற்றிகளைப் பெற்றுக் கொள்ள முடியாமல் போனது”.

தோல்விகளை படிப்பினையாகக் கொண்டு தனது திறமைகளை மேலும் மேலும் பட்டை தீட்டிய சண்முகேஸ்வரன், 2018ஆம் ஆண்டு முதல் பரிபூரண விளையாட்டு வீரராக தனது வெற்றிப் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

8 தங்கப் பதக்கங்கள்

கடந்த 2009ஆம் ஆண்டு கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் 5 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதன்பிறகு தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு சண்முகேஸ்வரனுக்கு கிடைக்கவில்லை. ஆனால், இலங்கை இராணுவத்தில் இணைந்துகொண்ட பிறகு ஆரம்பத்தில் வெற்றிகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போனாலும் 2017ஆம் ஆண்டு ஈரானில் நடைபெற்ற நகர்வல ஓட்டப் போட்டியில் பங்குபற்றி அதிசிறந்த காலத்தைப் பதிவுசெய்து 13ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். அதேபோல, எல்.எஸ்.ஆர் மரதன் ஓட்டப் போட்டியில் 10 ஆயிரம் மீற்றரில் முதலிடத்தையும் பெற்றுக்கொண்டார்.

தேசிய விளையாட்டு விழா முதல் நாளில் சண்முகேஸ்வரன், ஆஷிக் ஹெரீனாவுக்கு பதக்கம்

விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து விளையாட்டுத்துறை அபிவிருத்தி…

இதேவேளை, இவ்வருடம் நடைபெற்ற முக்கியமான 8 போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். இவ்வருட முற்பகுதியில் நடைபெற்ற இராணுவ தொண்டர் படையணி மெய்வல்லுனர் போட்டித் தொடரிலும், முப்படை மெய்வல்லுனர் போட்டித் தொடரிலும் ஆண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றிருந்த சண்முகேஸ்வரன், ஆசிய விளையாட்டு விழாவுக்காக நடத்தப்பட்ட தகுதிகாண் போட்டிகளில் முதலிடத்தையும் பெற்றுக்கொண்டார்.

இதன் பிரதிபலனாக, கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற வியட்நாம் பகிரங்க மெய்வல்லுனர் போட்டித் தொடரில் முதற்தடவையாக இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான வாய்ப்பைப் பெற்றுக்கொண்ட அவர், ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தினை வென்று தனது முதலாவது சர்வதேச வெற்றியையும் பதிவுசெய்தார்.

அதன்பிறகு நடைபெற்ற பாதுகாப்பு சேவைகள் மெய்வல்லுனர் போட்டித் தொடர் மற்றும் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர்களிலும் தங்கப் பதக்கத்தை வென்று அசத்தினார்.

இதுஇவ்வாறிருக்க. கடந்த செப்டெம்பர் மாதம் பொலன்னறுவையில் நடைபெற்ற 44ஆவது தேசிய விளையாட்டு விழாவில் முதல் தடவையாக மத்திய மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட சண்முகேஸ்வரன், தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

2011ஆம் ஆண்டு முதல் 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டிகளில் தொடர்ச்சியாக தங்கப் பதக்கங்களை வென்று தேசிய சம்பியனாக வலம்வந்து கொண்டிருந்த மத்திய மாகாணத்தைச் சேர்ந்த லயனல் சமரஜீவவை அவர் வீழ்த்தியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

அத்துடன் நின்றுவிடாமல், இறுதியாக கடந்த 2 வாரங்களுக்கு முன் நடைபெற்ற வருடத்தின் இறுதி மெய்வல்லுனர் போட்டித் தொடரான இராணுவ மெய்வல்லுனர் போட்டித் தொடரில் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் இராணுவ பீரங்கிப் படைப்பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்ட குமார் சண்முகேஸ்வரன், புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

இலங்கையின் நட்சத்திர மரதன் ஓட்ட வீரரான அநுராத இன்திரிஜித் குரே, 2005ஆம் ஆண்டு நிகழ்த்திய சாதனையை சுமார் 13 வருடங்களுக்குப் பிறகு சண்முகேஸ்வரன் முறியடித்தார்.

குறித்த போட்டியை 30 நிமிடங்கள் மற்றும் 35.55 செக்கன்களில் நிறைவு செய்த அவர் இவ்வருடத்துக்கான தனது சிறந்த நேரத்தையும் பதிவு செய்தார்.

இதேநேரம், ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் பங்குபற்றியிருந்த அவர், 14 நிமிடங்கள் 27.05 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து வெள்ளிப் பதக்கத்தினை வென்றெடுத்தார்.

இதன்படி, இந்த வருடம் நடைபெற்ற ஒரு சர்வதேசப் போட்டி உள்ளிட்ட ஏழு தேசிய மட்ட மெய்வல்லுனர் போட்டிகளில் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றியிருந்த அவர், தேசிய சம்பியன்களையெல்லாம் பின்தள்ளி, தங்கப் பதக்கங்களை வென்று ஒரு வருடத்தில் ஒரே போட்டிப் பிரிவில் 8 முதலிடங்களைப் பெற்றுக்கொண்ட இலங்கையின் முதலாவது மெய்வல்லுனர் வீரர் என்ற புதிய சாதனையையும் நிகழ்த்தினார்.

உதவி செய்தவர்கள் பற்றி….

”எனது பயிற்சியாளரான சஜித் ஜயலாலுக்கு முதலில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் இல்லாவிட்டால் நான் இந்த இடத்திற்கு வந்திருக்க மாட்டேன். அதேபோல தயா ஸ்ரீ மாஸ்டருக்கும், எனது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு முக்கிய காரணமாக இருந்த சரீடா ஜுவலர்ஸ் உரிமையாளர் சுப்ரமணியம் ஐயாவுக்கும் நன்றிகளைத் தெரிவிக்கின்றேன். அதேபோல, அம்மா, அப்பா, அண்ணா, அக்கா உள்ளிட்ட எனது குடும்பத்தாரையும் இந்த நேரத்தில் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். இறுதியாக இலங்கை இராணுவம், இராணுவத்தில் அதிகாரிகள், எனது உடல்கூற்று நிபுணர் மற்றும் நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்”.

இறுதியாக

பாடசாலைக் கல்வியை முடித்துக் கொண்ட பிறகு ஏழ்மை, கஷ்டங்களுக்கு மத்தியில் தொழில் செய்வதற்காக கொழும்புக்கு புறப்பட்டு வந்த சண்முகேஸ்வரன், விடாமுயற்சி, அர்ப்பணிப்பு, தியாகம் என்பவற்றுக்கு மத்தியில் இன்று வெற்றி நாயகனாக மாறிவிட்டார் என்றால் மிகையாகாது.

தனது வாழ்வாதாரத்துக்காக கொழும்பில் ஒரு கார் திருத்துநராக (மெக்கானிக்) தொழில் செய்துகொண்டு தனது இலட்சியத்தை அடைய போராடிய ஹட்டன் வெலி ஓயாவைச் சேர்ந்த குமார் சண்முகேஸ்வரன், இன்று இலங்கையின் மெய்வல்லுனர் அரங்கில் சாதனை வீரராக மிளிர்ந்து கொண்டிருக்கின்றார்.

10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டிகளில் நடப்பு தேசிய சம்பியனும், தேசிய விளையாட்டு விழா, தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப், இராணுவ மெய்வல்லுனர் போட்டித் தொடர், பாதுகாப்பு சேவைகள் மெய்வல்லுனர் தொடர் மற்றும் வியட்நாம் பகிரங்க மெய்வல்லுனர் போட்டித் தொடர் ஆகியவற்றில் தங்கப் பதக்கங்களை வென்று மகத்தான சாதனைகளை மிகவும் குறுகிய காலத்தில் படைத்த மலையகத்தைச் சேர்ந்த குமார் சண்முகேஸ்வரன், இறுதியாக எம்முடன் ஒருசில வார்த்தைகளைப் பகிர்ந்து கொண்டார்.

”எங்களுடைய கிராமத்தில் மூன்று வேளையும் ரொட்டி தான் சாப்பிடுவோம். உண்மையில் வீட்டுக்குச் சென்றால் ஒருவேளை சரியாக சாப்பிட முடியாது. அதனால் கடந்த சில மாதங்களாக நான் வீட்டுக்குச் செல்லவில்லை. ரொட்டியென்றால் எனக்கு மிகவும் விருப்பமான சாப்பாடுதான். ஆனால் தற்போது விளையாட்டை மேற்கொள்கின்ற காரணத்தால் போசாக்கான உணவுகளை மாத்திரம்தான் உட்கொண்டு வருகின்றேன்.

உண்மையில் வாழ்க்கையில் சாதிக்க வேண்டுமானால் நான் இன்னும் இன்னும் ஓட வேண்டும். ஆனால் மேலதிக ஊட்டச்சத்துக்கள், போசாக்கான உணவுகள், வீட்டுச் செலவுகள், எனது தனிப்பட்ட செலவுகள் என பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் இந்த விளையாட்டை முன்னெடுத்துச் செல்கிறேன். சில நேரங்கில் 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒருமுறை ஏன் சப்பாத்து வாங்குகின்றீர்கள் என கேட்கின்றனர். நாங்கள் பயிற்சி பெறுகின்ற விதம். விளையாட்டு தொடர்பில் அறிவல்லாதவர்கள் எம்மை பணக்காரர்கள் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர். உண்மையில் சப்பாத்து இருந்தால் எம்மால் எந்தவொரு இடையூறுமின்றி ஓட முடியும். எனவே, எனது இரண்டு கால்களைக் கொண்டு இன்னும் பல வெற்றிகளைப் பெற்று 2020இல் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றி இந்த நாட்டுக்கும், மலையகத்துக்கும் பெருயை தேடிக் கொடுப்பேன்” என அவர் தனது நேர்காணலை முடித்துக்கொண்டார்.

அத்துடன், 1975ஆம் ஆண்டு இலங்கையின் முன்னாள் நட்சத்திர வீரரான எஸ்.எல்.பீ ரோசாவினால் (2 நிமிடங்கள் 18.00 செக்கன்கள்) 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டிகளில் நிலைநாட்டியிருந்த சாதனையை சண்முகேஸ்வரன் மிக விரைவில் முறியடிப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. சுமார் 43 வருடங்கள் பழமையான அந்த சாதனையை முறியடிப்பதற்கு அவர் தனது பயிற்சிகளை முன்னெடுத்து வருகின்ற அதேநேரம், அடுத்த வருடம் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு விழாவிலும் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி மற்றுமொரு தங்கப் பதக்கத்தினை பெற்றுக்கொடுக்கும் எதிர்பார்ப்புடனும் உள்ளார்.

 மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க