இலங்கை A அணியில் பல மாற்றங்கள்

2938
Sri Lanka A squad

இலங்கை A அணி மற்றும் மேற்கிந்திய தீவுகள் A அணிகளுக்கு இடையிலான உத்தியோகபூர்வமற்ற நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டிக்கான இலங்கை A அணியின் தலைமைத்துவம் உட்பட அணியில் உள்வாங்கப்படும் வீரர்களில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இரு அணிகளுக்கும் இடையிலான உத்தியோகபூர்வமற்ற மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி நாளை தம்புள்ளையில் ஆரம்பமாகவுள்ளது. ஏற்கனவே இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில் நாளை ஆரம்பமாகவுள்ள போட்டி மிகவும் முக்கிய போட்டியாக அமையவுள்ளது.

இந்தப் போட்டிக்கு இலங்கை A அணியின் தலைவராக லஹிரு திரிமான்னெ நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று, காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் இருந்த குஷல் ஜனித் பெரேரா அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதுடன், இப்போட்டியில் துணை அணித்தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே இடம்பெற்ற முதல் இரு போட்டிகளின்போது அணியின் தலைவராக செயற்பட்டு வந்த திமுத் கருணாரத்ன மூன்றாவது போட்டிக்கான 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதேபோன்று விக்கெட் காப்காளரும், துடுப்பாட்ட வீரருமான நிரோஷன் திக்வெல்ல, இளம் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார ஆகியோரும் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

திமுத் கருணாரத்னவைப் பொருத்தவரை முதல் இரண்டு போட்டிகளிலும் மிகவும் சிறப்பாக விளையாடிய வீரர். குறிப்பாக முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறுவதற்கு இவரது பங்களிப்பு மிகவும் முக்கியமாக இருந்தது. முதல் இண்டு போட்டிகளிலும் அவர் ஒரு சதம் உட்பட மொத்தமாக 241 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டமை இங்கு நினைவு கூறத்தக்கது.

அதேபோன்று நிரோஷன் திக்வெல்லவும் முதல் போட்டிகளில் சிறப்பாக விளையாடி, இரண்டு அரைச் சதங்களைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள 15 பேர் கொண்ட அணியில் வேகப்பந்து வீச்சாளரும் சகலதுறை வீரருமான தசுன் ஷானக, புதிய வீரரான விக்கெட் காப்பாளர் சன்தன் வீரக்கொடி, இடது கை சுழற்பந்து வீச்சாளர் அமில அபொன்சொ மற்றும் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு கமகே ஆகியோர் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

3ஆவது போட்டிக்கான இலங்கை A அணியின் விபரம்

லஹிரு திரிமான்னெ (தலைவர்), குஷல் ஜனித் பெரேரா (துணைத் தலைவர்), அவிஷ்க பெர்ணாந்து, ஷரித் அசலங்க, ரோஷென் சில்வா, அசேல குனரத்ன, சன்துன் வீரக்கொடி, தசுன் ஷானக, அனுக் பெர்ணாந்து, லக்ஷான் சன்தகன், ஜெப்ரி வன்டர்சே, அமில அபொன்சொ, அசித பெர்னாந்து, கசுன் மதுஷங்க, லஹிரு கமகே