இலங்கையுடனான ஒருநாள் தொடரில் சகிப் பங்கேற்பதில் சந்தேகம்

2252
©Getty

பங்களாதேஷ் அணியின் சகலதுறை வீரரும், உதவித் தலைவருமான சகிப் அல் ஹசன், இம்மாத இறுதியில் இலங்கைக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் தொடரில் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, இம்மாத இறுதியில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இந்தத் தொடர் இம்மாதம் 25, 27 மற்றும் 29ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

எனினும், கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுவதில் அந்நாட்டு கிரிக்கெட் சபை தயக்கம் காட்டி வருகின்றது

ஆனால், இலங்கையில் தற்போதுள்ள பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் ஆராயும் நோக்கில் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் கடந்த சில தினங்களுக்கு முன் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர். எனினும், அதுதொடர்பிலான இறுதி முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை.  

இந்த நிலையில், இம்முறை உலகக் கிண்ணத்தில் சகலதுறை வீரராக பிரகாசித்து 500 ஓட்டங்களுடன் 10 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்திய ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றுக் கொண்டவரும், பங்களாதேஷ் அணிக்கு தனி ஆளாக ஒருசில முக்கிய போட்டிகளில் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தவருமான சகிப் அல் ஹசனுக்கு இலங்கை அணியுடனான ஒருநாள் தொடரில் இருந்து ஓய்வு வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

இலங்கைக்கு வருகை தரவுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி

தற்போது நடைபெற்று வரும் உலகக் கிண்ண …..

இதுதொடர்பில் அந்நாட்டு கிரிக்கெட் சபையின் தேர்வுக் குழுவின் தலைவர் மின்ஹாஜுல் ஆப்தீன் கருத்து தெரிவிக்கையில்

“பங்களாதேஷ் அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகின்ற சகிப் அல் ஹசன் மிகவும் கலைப்படைந்துள்ளார். அதன் காரணமாக இலங்கையுடனான ஒருநாள் தொடரில் ஓய்வு வழங்கும்படி அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

அத்துடன், குறித்த காலப்பகுதியில் அவர் ஹஜ் கடமையை நிறைவு செய்ய மக்காவுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளார். ஆனால் அவரது ஓய்வு குறித்து நாங்கள் இதுவரை எந்தவொரு தீர்மானமும் எடுக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.

இம்முறை உலகக் கிண்ணத்தில் சுப்பர் ஸ்டாராக ஜொலித்த சகிப் அல் ஹசன், 9 லீக் போட்டிகளில் விளையாடி 86.57 என்ற சராசரியுடன் 606 ஓட்டங்களையும் 11 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதில் 2 சதங்களும், 5 அரைச் சதங்களும் உள்ளடங்கும்

ஆனால் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக பங்களாதேஷ் அணி விளையாடிய கடைசி இரண்டு லீக் ஆட்டங்களிலும் தான் சோர்வடைந்ததாக சகிப் ஒப்புக்கொண்டார்

உலகக் கிண்ணத்தில் அசத்திய மாலிங்க பந்துவீச்சாளர் தரவரிசையில் முன்னேற்றம்

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் லீக் ….

இந்தியாவுடனான போட்டியின் பிறகு அவர் அளித்த போட்டியில், “இறுதியாக நடைபெற்ற 2 லீக் போட்டிகளிலும் நான் மனரீதியாக சோர்வடைந்துவிட்டேன். எனது உடற்தகுதி நன்றாக இருந்தால் தான் என்னால் அந்த 2 போட்டிகளிலும் கொஞ்சம் சிறப்பாக விளையாட முடிந்திருக்கும். கடந்த 2 நாட்களாக எனது உடற்தகுதி தொடர்பில் கவனம் செலுத்தியிருந்தேன். ஆனாலும், சற்று கடினமாகத் தான் விளையாடினேன்” என தெரிவித்திருந்தார். 

இதேவேளை, பங்களாதேஷ் அணியின் மற்றுமொரு நட்சத்திர வீரரான லிட்டன் தாஸ், இம்மாதம் 28ஆம் திகதி திருமண பந்தத்தில் இணைந்து கொள்ளவுள்ளார். எனவே, அவரும் இலங்கை அணியுடனான ஒருநாள் தொடரில் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் 25, 27 மற்றும் 29ஆம் திகதிகளில் பெரும்பாலும் கொழும்பில் நடைபெறலாம் என கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<